இந்தப் பாடல், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் அரசியல் சூழலுக்கு எப்போதுமே பொருந்தும். மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புகளாக, தமிழ்த் தேசிய அரசியலில் மேலெழுந்த பல தரப்புகள் பொறுப்பின்மை, தன்முனைப்பு மனநிலை (ஈகோ) ஆகியவற்றால், விடயங்களைக் கோட்டை விட்டு தாங்களும் தோற்று, மக்களையும் தோற்கடித்த வரலாறுகள் உண்டு. அதன் அண்மைய உதாரணங்களாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்தப் பத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இடம்பெற்று வருகின்ற குளறுபடிகள், குழந்தைப் பிள்ளைத் தனங்கள், எதேச்சதிகாரப் போக்கு ஆகியவை பற்றிப் பேச விளைகின்றது.
‘முன்னணி’ என்ற அடையாளத்தினூடாக, கடந்த 11 ஆண்டுகளாக, தேர்தல் அரசியல் வெற்றிக்காகப் போராடி வந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இந்தப் பொதுத் தேர்தலில், இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களை வென்றிருக்கின்றது. கூட்டமைப்பின் மீதான அதிருப்தி, முன்னணி இளைஞர்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை முன்னிறுத்தி, வாக்களித்த மக்களின் விரலில் தீட்டப்பட்ட ‘மை’ அழிபடும் முன்னமே, முன்னணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த வியாழக்கிழமை (13) இரவு ‘Zoom’ செயலி மூலம், முன்னணியின் மத்திய குழு கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், முன்னணியின் மூன்றாவது முக்கியஸ்தரான விஸ்வலிங்கம் மணிவண்ணன், அவர், வகித்துவந்த தேசிய அமைப்பாளர், பேச்சாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
மணிவண்ணன், முன்னணியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த போதிலும், அந்தக் கூட்டத்துக்கு முதலிரண்டு முக்கியஸ்தர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரால், திட்டமிட்ட ரீதியில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக, அப்படியொரு கூட்டம் கூட்டப்படுவதாக, அவருக்குச் சொல்லப்படவுமில்லை; Zoom செயலி இணைப்பு வழங்கப்படவுமில்லை.
இந்தக் கூட்டத்தில், மணிவண்ணனைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான காரணங்களாக, கொள்கைப் பிறழ்வும் கட்சியின் தீர்மானங்களை மீறியமையும் போன்ற காரணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ஆனால், கடந்த தேர்தல் பிரசாரக் காலங்களிலேயே, மணிவண்ணன் முன்னணியில் இருந்து சீக்கிரமாக விலக்கப்பட்டுவிடுவார்; அல்லது, அவரே விலகிவிடுவார் என்கிற நிலைப்பாடு உருவாகியிருந்தது.
மணிவண்ணனை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வட்டம், குறிப்பாக, யாழ். இந்துக் கல்லூரி இளைஞர் குழுவொன்று மும்முரமாக இருந்தது. அதேபோல, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில், முன்னணியின் ஒரு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அது, விருப்பு வாக்குப் போட்டி என்கிற நிலையைத் தாண்டிய மோதலாக முன்னணிக்குள் எழுந்திருந்தது.
‘மணியுடன் பேசுவோம்’ என்று, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளன்று மணிவண்ணன் நடத்திய சந்திப்பும் அதில், அவர், தன்னை முன்னிறுத்திப் பேசிய விடயமும் ‘முன்னணி’ என்கிற கட்டமைப்புக்குள் எவ்வாறான பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்தியது.
முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு என்பது, கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரின் எதேச்சதிகாரப் போக்கினால் விளைந்தது என்பது, மணிவண்ணனின் ஆதரவாளர்களின் வாதம்.
‘கஜேந்திரன்களுக்கு’ (கஜேந்திரகுமார்+ கஜேந்திரன்) இருக்கிற முக்கிய பிரச்சினை, அவர்களது நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தும் அனைவரையும் ‘துரோகி’ அடையாளம் சூட்டுதல் ஆகும். அது ஒரு கட்டத்தில், சொந்தக் கட்சி இளைஞர்களை நோக்கியதாகவும் மாறிவிட்டது.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர், முன்னணியின் யாழ். மாநகர சபை உறுப்பினரான பார்த்தீபன் வரதராஜன், தன்னுடைய தந்தையைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்பொன்றில், சொந்தக் கட்சி உறுப்பினர்களை நோக்கி, துரோகி அடையாளம் சூட்டும் முன்னணிக்குள் எழுந்திருக்கின்ற ‘குணம்’ பற்றி, பெரும் கவலை வெளியிட்டிருந்தார்.
(தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில், அதன் தலைவராக இருந்து, 2013ஆம் ஆண்டளவில், அதிலிருந்து விலகிய பொருளியல் ஆசிரியர் அமரர் சி.வரதராஜனின் மகனே, பார்த்தீபன் ஆவார்.)
கடந்த, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தலைப் புறக்கணிக்க மக்களைக் கோருவது என்று, ‘கஜேந்திரன்கள்’ முடிவெடுத்தமை குறித்து மணிவண்ணன், கட்சிக்குள் மாற்றுக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். “மக்களது நிலைப்பாடுகளுக்கு எதிராக, தொடர்ச்சியாகக் கட்சி முடிவெடுப்பது நல்லதல்ல” என்று அவர் வாதிட்டிருக்கின்றார். அது, வார்த்தைகள் தடிக்கும் நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஒரு கட்டத்தில் மணிவண்ணன் கூட்டத்திலிருந்து வெளியேறியும் இருந்தார்.
ஆனால், கட்சிக்குள் தான் முன்வைத்த விடயங்கள் தொடர்பில், கட்சியின் நிலைப்பாட்டை மீறி, அவர் பொது வெளியில் பிரஸ்தாபித்திருக்கவில்லை. ஆனால், தடித்த வார்த்தைகள் தொடர்பில், தன் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால், அப்போது விடயம் கைவிடப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில், முன்னணியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று, தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.
பத்து ஆண்டுகள் கடந்தும், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்யாமை தொடர்பில், பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்தப் பத்தியாளரும் பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறார். அவ்வாறான சூழலில், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்வது சார்ந்து, மணிவண்ணன் தரப்பு ஆர்வம் வெளியிட்டது; கட்சிக்குள் வலியுறுத்தவும் ஆரம்பித்தது. இதன் மூலம், கட்சியின் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்பது எதிர்பார்ப்பு.
ஆனால், முன்னணியை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை, ‘கஜேந்திரன்களுக்கு’ குறிப்பாக, கஜேந்திரகுமாருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஏனெனில், முன்னணி என்கிற அடையாளத்துக்கு ஊடாக, காங்கிரஸை மீட்டெடுப்பதுதான் அவரின் ஒற்றை இலக்கு. அதற்குத் தடையாக, மணிவண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது, அவருக்கு சிக்கலான விடயமாக மாறியது.
அடுத்து, தங்களைத் தாண்டி, முன்னணிக்குள் மணிவண்ணனை நோக்கி இளைஞர் ஆதரவுத் தளமொன்று உருவாகி வந்தமை, ‘கஜேந்திரன்களால்’ கொஞ்சமும் இரசிக்கப்படவில்லை. அந்த ஆதரவுத் தளம், கேள்விகளுக்கு அப்பால் நின்று, ‘கஜேந்திரன்களை’ப் பின்தொடர்வதற்குத் தயாராக இருக்கவில்லை.
வழக்கமாக ‘கஜேந்திரன்களின்’ ‘ஒற்றைவாதம்’ என்பது, கொள்கை மறுதலிப்பற்ற தரப்பு, தாங்கள் மட்டுமே என்பதாகும். ஆனால், அவர்களும் காலத்துக்குக் காலம், கொள்கைகளை மாற்றி வந்திருக்கிறார்கள். அதற்கு, வடக்கு மாகாண சபையின் கடந்த தேர்தலைப் புறக்கணித்தமையை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
அதாவது, முன்னணியின் தலைவராக இருந்த வரதராஜன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது ‘கஜேந்திரன்கள்’, “மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது, 13ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அமையும்” என்று கூறி நிராகரித்திருந்தனர். ஆனால், அந்த நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்டார்கள்.
ராஜபக்ஷக்களுக்குத் துதிபாடும் அரசியல் நெறியொன்று, தென் இலங்கையில் நிலைபெற்றிருக்கின்றது. அது, ராஜபக்ஷக்களைக் கேள்விகளுக்கு அப்பால் நின்று தொழுகின்றது. அப்படியானதொரு நிலையொன்றை, தங்களைச் சுற்றிக் கட்டமைக்கும் நிலைப்பாடுகளில், ‘கஜேந்திரன்கள்’ ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் கூறுவதுதான் ‘வேதவாக்கு’ என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு.
இதனை, கடந்த ஒருவார காலமாக, முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் நடைபெற்றுவருகின்ற சமூக ஊடக உரையாடல்களைப் பார்க்கின்ற போது புரிந்து கொள்ள முடியும். அதனை இன்னமும் நேரடியாகச் சொன்னால், ‘மூளைச் சலவை’ செய்யப்பட்ட கூட்டமொன்றைக் கட்டி வளர்க்க வேண்டும் என்பதுதான், ‘கஜேந்திரன்களின்’ நினைப்பு.
தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியை ஒரு மாற்றாக நம்பி, அதன் பின்னால் சென்று, அதன் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த இளைஞர்கள், ‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரப் போக்கால், இன்று போக்கிடமின்றி நிற்கிறார்கள். கிட்டத்தட்ட, முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நிலையை ஒத்தது.
ஒவ்வொரு தடவையும் மக்களால் நிராகரிக்கப்படும் போதும், அவர்கள் தாங்கி நின்ற வலியும் அவமானமும் பெரியது. அதனைத் தாண்டி, சிறிய வெற்றியொன்றைப் பெற்றிருக்கின்ற தருணத்தில், அதனை அப்படியே போட்டுடைப்பது என்பது, ஜீரணிக்க முடியாததுதான்.