முதலாவது விடயம் கடவுள் சம்பந்தமானது. உலகில் பல மதங்கள் இருக்கின்றன. நமக்கு பரிச்சயமான நான்கு மதங்களை எடுத்துக்கொண்டால் அவை முறையே இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் எனலாம். இதில் இந்து மதம் மனிதனும் இந்த உலகிலுள்ள மற்றைய எல்லா ஜீவராசிகளும் மற்றும் பொருட்கள் எல்லாம் கடவுள் என்ற ஒருவரால் உருவாக்கப்பட்டவை என்று சொல்கிறது. மற்றைய மதங்கள் அவ்வாறு சொல்லாவிட்டாலும், யேசு, முகம்மது நபி, பத்தர் ஆகியோரைக் கடவுள்கள் அல்லது கடவுள்களின் வாரிசுகள் என நம்புகின்றன.
எது எப்படியிருந்தாலும், இப்போதைய உலகப் பேரழிவான கொரனோ வைரஸ் தாக்க காலத்தில் இந்த கடவுள்கள் மனிதர்களுக்கு எந்தவிதமான விமோசனத்தையும் தந்ததிற்கு எந்த அறிகுறியையும் காணோம். சில ஆன்மீகவாதிகள் கடவுள்கள் மனிதர்களின் அகங்காரத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக மௌனமாக இருக்கிறார்கள் எனவும் சொல்லக்கூடும். வேண்டுமானால் சில காலம் பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றும் நடக்கப்போவதில்லை.
உண்மை என்னவெனில், இந்த உலகில் மனிதனையும் இதர ஜீவராசிகளையும், மற்றைய பொருட்களையும் இயற்கைதான் படைத்தது என்பதை விஞ்ஞானம் தெளிவாக நிரூபித்துள்ளது. ஆனால் கடவுளரை மனிதன்தான் தனது சில தேவைகளுக்காகப் படைத்தான். எனவே, இடையில் மனிதனால் படைத்த கடவுளால் மனிதனுக்கு தீங்குவரும்போது காப்பாற்ற முடியாமல் இருப்பதில் வியப்பில்லையல்லவா? எனவே மனிதன் படைத்த கடவுள் தன்னைப் படைத்த மனிதனைக் காப்பாற்ற முடியாமல் தோல்வி கண்டுவிட்டார் என்பதே உண்மை.
இரண்டாவது விடயம் வர்க்கம் சம்பந்தமானது. மனிதன் தோன்றியபோது வர்க்கங்கள் எதுவும் இருக்கவில்லை. வர்க்கம் மட்டுமல்ல, குடும்பம், அரசு, தனிச்சொத்து எதுவும் இருக்கவில்லை என ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற தனது நூலில் ஏங்கெல்ஸ் தெளிவாகச் சொல்கிறார். ஆரம்பத்தில் கடவுள் கூட இருக்கவில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் கீழடி என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் மனித வாழ்வின் மற்றெல்லாத் தடயங்கள் கிடைத்தபோதிலும் மத வழிபாடு நடந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுபற்றி அந்த அகழ்வராட்சிக்கு தலைமை தாங்கியவர் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் அந்தக் காலத்தில் கடவுள் வழிபாடு இல்லாததால் மதச் சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார். வர்க்கங்களும் அப்படித்தான்.
வர்க்கங்கள் மனித சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிப்போக்கின் ஒரு கட்டத்திலேயே உருவாகின. ஆரம்பத்தில் ஆண்டான் அடிமையாக உருவாகிய வர்க்கங்கள் இன்றைய நவீன சமுதாயத்தில் முதலாளி – தொழிலாளி என மாறி அதன் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியமாக வளர்ந்து நிற்கிறது.
முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசம்தான் என மார்க்ஸ்சும் ஏங்கெல்ஸ்சும் கருத்தியல் ரீதியாக நிரூபித்து, அதைப் பின்னர் லெனின் ரஸ்யாவில் நடைமுறைரீதியாக நிரூபித்த பின்பும், முதலாளித்துவவாதிகள் சோசலிசத்தை விட முதலாளித்துவமே சிறந்தது, மனித விமோசனத்துக்கு உகந்தது என வாதிட்டு வந்தனர். ஆனால் இன்று என்ன நடக்கிறது?
பேரழிவைக் கொண்டு வந்துள்ள கொரனோ வைரசை முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. சோசலிச நாடுகளான சீனாவும், கியூபாவும்தான் அதைக் கட்டுப்படுத்தி நிற்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? முதலாளித்துவத்தை விட சோசலிசம்தான் மேன்மையானது என்பதைத்தானே?
எனவே மனிதனால் மற்றைய மனிதர்களை அடக்கி ஆளவும், சுரண்டவும் உருவாக்கப்பட்ட கடவுளும், முதலாளித்துவமும் தோல்வி அடைந்துவிட்டன என்பதே உண்மை. இந்த உண்மையை இனிமேலாவது தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.