இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இனவாதம் அல்லது மதவாதம் அல்லது இன-மைய அரசியலை மாற்றியமைக்க, கட்சியின் பெயரில் குறித்த இன, அல்லது மதப் பெயரை இல்லாதொழிப்பதுதான் முதற்படி என்ற சிந்தனை ஒன்றில், அறியாமையின் விளைவு; அல்லது, அது வேறுகாரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையில் பேரினவாதத்தைத் தோற்றுவித்த பெருந்தேசியக் கட்சிகள் எவையும் தமது கட்சிப் பெயரில் இனத்தையோ, மதத்தையோ கொண்டிருந்ததில்லை. பெருந்தேசியவாதத்துக்கும் பேரினவாதத்துக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த சிறுபான்மையினக் கட்சிகளும், சில உதிரி பெருந்தேசியவாத, பேரினவாதக் கட்சிகளும்தான், தமது கட்சிப் பெயரில் இனம் அல்லது மதம் தொடர்பான பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்தத் தடை, சிறுபான்மையினக் கட்சிகளைக் குறிவைத்ததாகவே இருக்கிறது என்பது ‘வௌ்ளிடைமலை’.
இனம், மதம் ஆகிய பெயர்களைக் கட்சியின் பெயர்களாகக் கொண்ட கட்சிகளைப் பதிவு செய்யாமல் விடுவதன் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பெரும் அடியை எடுத்து வைத்துவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழுவும் அரசாங்கமும் எண்ணலாம்.
மனித வாழ்வின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக, எண் கணித சாத்திரத்தின்படி பெயரை மாற்றி அமைத்துவிட்டால், பிரச்சிைனகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ, அதுபோலவேதான் இந்த இனம், மதம் தொடர்பான பெயர்களைக் கட்சிப் பெயர்களில் கொண்ட கட்சிகளைப் பதிவு செய்யாமல் விடுவதன் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் ஆகும்.
இலங்கை அரசியலைப் புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு, இலங்கை அரசியலின் அடிப்படைக்கூறாக இனவாதம், இன-மைய அரசியல் மாறியிருப்பது தௌிவாகத் தெரியும். அந்த அடிப்படை மாற்றி அமைக்கப்படாமல், இதுபோன்ற அடையாளபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் எந்தப் பயனுமில்லை.
இந்தப் பெயர்த்தடை என்பது, எப்படி இருக்கிறதென்றால், உள்ளே எத்தகைய கொடும் தேசியவாத, இனவாதச் சிந்தனைகளும் இருக்கலாம்; ஆனால், பெயர் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘றோமியோ அன்ட் ஜூலியட்’இல் ஓர் அழகான வரி வருகிறது. ‘What’s in a name? that which we call a rose by any other name would smell as sweet’ – ‘பெயரில் என்ன இருக்கிறது? நாம் ரோஜா என்று அழைப்பதை வேறு எந்தப் பெயர்கொண்டு அழைப்பினும் அது இனிய மணத்தையே கொண்டிருக்கும்’ என்பதே அந்த வரியாகும். ஆகவே, ஒரு பொருளின் பெயரை மாற்றுவது, அதன் தன்மைகளை மாற்றாது.
இங்கு உண்மையான மாற்றம் வேண்டும் என்று எவரேனும் விரும்பினால், மாற்றம் அடிப்படைகளில் ஏற்படுத்தப்பட வேண்டுமே அன்றி, வெறும் பெயர்களை மாற்றுவதால் எதுவும் மாறப்போவதில்லை. உலகில் மிகப்பெரிய இனவாதக் கட்சிகள் பலதும், தம்முடைய பெயரில் குறித்த இனத்தின், மதத்தின் பெயர்களைக் கொண்டிருக்கவில்லை என்பது அவதானத்துக்கு உரியது.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில், அரசியல் பரப்பின் ஓரங்களில் கிடந்த பேரினவாத, பெருந்தேசியவாத அரசியலை, அரசியலின் முன்னரங்குக்குக் கொண்டுவந்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். பிரித்தானிய பேரரசிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்ட காலகட்டத்தில், இலங்கையில் பௌத்த பிக்குகளின் அரசியல் பிரவேசத்துக்கு, மகாசங்கத்துக்கு உள்ளேயும், பௌத்த மக்களின் பிரதான அமைப்புகளும் பிரதான அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பை வௌியிட்டு வந்தன.
குறிப்பாக, டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், பௌத்த பிக்குகள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டியது. மாறாக, சமூக நல்வாழ்வுக்காக அவர்கள் உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலின் பின்னால், கௌதம புத்தர் போதித்த பௌத்தத்தின் தாற்பரியம் முன்னிறுத்தப்பட்டது.
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதை, கௌதம புத்தர் ஒருபோதும் அனுமதித்தற்கான பதிவுகள் இல்லை. ஆகவே, மகாசங்கத்தினதும் அரசியல் கட்சிகளினதும் பௌத்த பொது அமைப்புகளினதும் இந்த நிலைப்பாடு, கௌதம புத்தரின் போதனைகளை அடியொற்றியதாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
பௌத்த பிக்குகளின் அரசியல் பணி என்பது, ஆள்வோருக்கு அறிவுரை வழங்குதல் ஆகும். இதைக் கௌதம புத்தரே முன்னெடுத்திருக்கிறார். ‘தச ராஜ தர்ம’ என்பது, ஆட்சிக்கான தர்மம் தொடர்பில், கௌதம புத்தர், அரசர்களுக்கு வழங்கிய அறிவுரை ஆகும்.
நிற்க! சேனநாயக்கர்களின் பின்னர் வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலும், இதே நிலைப்பாடு தொடர்ந்தது. சேர். ஜோன் கொதலாவல பிரதமராக இருந்தபோது, “அரசியலில் ஈடுபடும் பிக்குகளுக்குத் தார் பூசப்படும்” என்று அச்சுறுத்தியதாக, இலங்கையின் புகழ்பூத்த சிவில் சேவை உத்தியோகத்தர்களில் ஒருவரான ப்ரட்மன் வீரக்கோன், தனது நூலொன்றில் பதிவுசெய்திருக்கிறார்.
ஆனால், பௌத்த பிக்குகளிடம் அரசியல் ஈடுபாட்டை வலியுறுத்தும் செயற்பாட்டை ‘வித்யாலங்கார பிரிவேன’ முன்னெடுத்தது. வள்பொல ராஹூல உள்ளிட்டவர்களின் எழுத்துகளும் இதை ஊக்குவிப்பனவாக அமைந்தன. இதன் விளைவாகத் தீவிர சிங்கள-பௌத்த தேசியவாத சிந்தனை கொண்ட பிக்குகளின் அமைப்புகள் உருவாகின.
ஆனால், அரசியலில் அவர்களுக்கு உரிய களம் இன்னும் கிடைக்கவில்லை; மகாசங்கமும் இந்தப் பிக்குகளை ஏற்று அங்கிகரிக்கவில்லை. இதனால், அரசியலின் புறவட்டத்திலேயே இவர்களின் செயற்பாடுகள் முடங்கியிருந்தன.
இவ்வாறு, அரசியலின் புறவட்டத்தில் இருந்து, தீவிர சிங்கள-பௌத்த தேசியவாத அரசியலை முன்னெடுத்த பிக்குகளை, அரசியலின் மைய அரங்கில், தனது ‘பஞ்சமா பலவேகய’வில் (ஐம்பெரும் சக்திகளில்) ஒன்றாக்கிக் கொண்டு வந்து இருத்தியவர் பண்டாரநாயக்க தான். அதற்கு அவர், ‘சிங்கள’ ‘பௌத்த’ போன்ற பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர், ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி’ என்றுதான், தனது கட்சியை அடையாளப்படுத்திக்கொண்டார்.
சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தை, அரசியல் வெற்றி என்ற தனது ஒரே தேவைக்காக முன்னெடுத்த பண்டாரநாயக்க, அதே பெருந்தேசியவாதத்தின் கைகளால் மரணித்த வரலாறு, அனைவரும் அறிந்ததே!
ஆனால், பண்டாரநாயக்கா, அரசியல் முன்னரங்குக்கு அலங்கரித்து, ஆராத்தியெடுத்து அன்று கொண்டு வந்து ஆட்சியில் அமர்த்திவிட்டுச் சென்ற பேரினவாத பெருந்தேசிய அரசியல், அன்றிலிருந்து இன்றுவரை, இந்நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான், ‘பண்டாரநாயக்கா இந்த நாட்டுக்குத் தந்த சாபம்’ எனலாம். இதை மாற்றியமைக்கும் வலுவோ, திறனோ, அதன் பின்னர் வந்த எந்தத் தலைமைக்கும் இருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதும் கவலைக்குரியதுமாகும்.
பண்டாரநாயக்க காலம் முதல் இலங்கை அரசியல், ‘சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம்’ எதிர் ‘தமிழ்த் தேசியவாதம்’ என்று இனம் (இனம், மதம்) சார்ந்த தேசிய அரசியலாக மாற்றமுற்றது.
சில தசாப்தங்களின் பின்னர், முஸ்லிம் அரசியல் சிறுபான்மையின அரசியலாகவும் மறுபுறத்தில், இந்திய வம்சாவளியினரின் அரசியல் தனியானதாகவும் இனரீதியில் பிளவடைந்த அரசியலாக, இலங்கை அரசியல் முற்றாக மாற்றமடைந்தது.
‘தமிழ்த் தேசியம்’ ஒரு தற்காப்புத் தேசியமாக உருவெடுத்தாலும், காந்திய வழிகளைப் பின்பற்றியதாக ஆரம்பத்தில் இருந்திருந்தாலும், தமிழர்களின் அரசியலை உணர்ச்சிவசப்பட்ட, பகட்டாரவார அரசியலாகக் கொண்டு சென்று, இளைஞர்களை உசுப்பிவிட்டு, கடைசியில் ஆயுதக்குழுக்களிடம் தமிழர் அரசியலை முற்றாகச் சரணடையச்செய்துவிட்ட அரசியலாகவே மாறியது.
இன்று அந்த ஆயுதக்குழுக்கள் இல்லாதுபோய், முப்பது வருடகால யுத்தம் நிறைவுக்கு வந்து, பன்னிரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், அந்த ஆயுதக்குழுக்களின் அரசியலைத்தாண்டிச் சிந்திக்கும் அரசியல் சிந்தனை மாற்றம், தமிழ் அரசியல் பரப்பில் ஏற்படவில்லை.
பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, ஜெயவர்தனா, ராஜபக்ஷர்கள் வரை, பண்டாரநாயக்கா தொடங்கிவைத்த பெருந்தேசியச் சிந்தனை மாறாதது போலவே, இலங்கை தமிழ் மக்களுடைய அரசியலிலும் ஆயுதக்குழுக்களால் முன்னிறுத்தப்பட்ட குறுந்தேசியவாதச் சிந்தனைகளும் இன்னும் மாறவில்லை.
இதில் ஒரு கருத்துச் சரி, மற்றைய கருத்துப் பிழை என்று எவருக்கேனும் தோன்றுமானால், அதுதான் இந்தநாட்டின் அரசியலில் காணப்படும் பிரச்சினை என்பதை, அந்த எண்ணம் நிரூபிப்பதாக அமையும்.
இனம், மதம் ஆகியவை சார்ந்து, தேசியவாத அடிப்படைகளில் கட்டமைந்த அரசியல் சிந்தனைகளும் அதன்பாலான அரசியல் கட்டமைப்புகளும் மாறாதவரை, வெறும் பெயர்களைத் தடைசெய்வதால் இங்கு எதையும் மாற்றிவிட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.