ஈ.பி.ஆர்.எல்.எப் பின் நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அவர்களும் மாமனிதர் பட்டம் வழங்கும் இணையத்தின் லெட்டர்ஹெட் புலிகள் மாதிரி இல்லாமல், தங்கள் சொந்தப் பெயர்கள், கட்சி, அமைப்பின் பெயரிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பற்றி நான் கருத்து சொல்வதற்கு முன்னால், இந்த அறிவுப் பேரொளிகளின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால், பின்னால் விளக்கம் சொல்ல தேவையில்லாதபடிக்கு முதலே சில கருத்துக்களை சொல்வது நல்லது.
அந்த கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி நான் கருத்துச் சொன்னால், நான் அந்த ஆட்சேர்ப்பை நியாயப்படுத்துவதாக கற்பனை செய்து கொண்டு, உடனடியாகவே என்னை துரோகி என்று பட்டம் சூட்ட ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.
புலியைக் கடிப்பதே எனது முழுநேர வேலை என்று சிலபல பேஸ்புக் புலிவால்கள் நினைப்பதால், அது பற்றி நான் கருத்து கூறாவிட்டால், ‘கள்ள மெளனம்’ சாதிப்பதாக பேஸ்புக் புத்திசீவிகள் பொங்க ஆரம்பித்து விடுவார்கள்.
புலிகள் பற்றி எந்தக் குற்றச் சாட்டைச் சொன்னாலும், பாய்ந்தடித்து வந்து அவர்கள் புனிதப் போராட்டம் நடத்தியதாக முண்டு கொடுக்கும் பேஸ்புக் மாவீரர்கள் மாதிரி, அந்த சிறுவர் ஆட்சேர்ப்புக்கு நான் முண்டியடித்து நியாயம் சொன்னதில்லை.
இது குறித்த என் அவதானங்கள், கருத்துக்களை சொல்வதற்கு முன்னால்…
சிறுவர்களை படையில் சேர்ப்பது ஐ.நா முதல் கொண்டு கண்டிக்கப்படும் விடயம்.
அதிலும் கட்டாயமாக, துப்பாக்கி முனையில் கடத்தி பலி கொடுப்பது என்பது மனிதத்திற்கு எதிரான குற்றம்.
அதை யார் செய்திருந்தாலும், அது வெறும் கண்டனத்தோடு முடிய வேண்டிய விடயம் இல்லை.
ஆனாலும்…
இதுவரை காலமும் நான் இங்கே போகும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்ந்த கூட்டங்களில் எல்லாம், நண்பர் ஜேம்ஸ் Siva Murugupillai மாகாண சபை ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சகல தவறுகளுக்கும் தாங்கள் ஏற்கனவே மன்னிப்புக் கேட்டிருப்பதாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு கூட்டத்திலும், சொல்வார்.
எனக்குத் தெரிந்தவரைக்கும், அவர்கள் இந்தத் தவறை நியாயப்படுத்தியதை ஒரு போதும் கண்டதில்லை.
முழுக்க முழுக்க இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால், புலிகள் அனுரதபுரம் தாக்குதல் செய்தது போல, இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே, தாங்களும் செய்ய வேண்டி வந்ததாக, இந்தியா மீது பழி போட்டதையும் கண்டதில்லை.
அல்லது தங்களில் சிலரே அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொறித்து விடாமல், கூட்டுப் பொறுப்பாக தங்களின் தவறை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவே அந்த மன்னிப்புக் கோரல் இருந்திருக்கிறது.
மன்னிப்புக் கேட்ட பின்னாலும், புலிகளைப் பற்றி பொங்கும் போது, அவர்கள் பற்றியும் பொங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.
எத்தனை மன்னிப்புக் கேட்டாலும், ‘நீ முந்தி உப்பிடிச் செய்தனி தானே?’ என்று குத்திக்காட்டும் பாரம்பரிய வழி வந்தவர்கள் நாங்கள்.
ஆனால்…
புலிகள் ஆட்சேர்ப்பு பற்றி எவர் வாயைத் திறந்தாலும், ‘எவரும் கடத்தப்படவில்லை, எல்லோரும் தாங்களாகவே விரும்பிச் சேர்ந்தார்கள்’ என்று நியாயப்படுத்துகின்ற புலி ஆதரவாளர்களோ உள்ளனர்.
புலிகள் இப்போது லெட்டர்ஹெட்டில் மட்டுமே உள்ளனர்.
அவர்கள் கூட, ஒரு போதுமே அதைத் தவறு என்று ஏற்றுக் கொண்டதோ, மன்னிப்புக் கேட்டதோ இல்லை.
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களைக் கூட, முதலுதவிப் பயிற்சி செய்தார்கள் என்று வாய் கூசாமல் நியாயப்படுத்துகிறவர்கள் இவர்கள்.
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு பற்றிய அறிக்கை வெளியிட்ட போது, தற்போதைய கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தலைமையில் வந்து அடாவடித் தனம் செய்ததும், பொப் ரேயைப் பேசவிடாமல் காடைத் தனம் பண்ணியதும் நாங்கள் கண்டது தான்.
காரணம், அந்த அறிக்கை பொய் என்பது தான் இவர்களின் வாதம்.
ஆனால், அந்தக் காடைத் தனம் தான் புலிகள் கனடாவில் தடை செய்யப்படுவதற்கான இறுதி ஆணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று வரைக்கும், இந்த கட்டாய ஆட்சேர்ப்பு வன்னிச் சிறார்கள் என்பதால், யாழ்ப்பாணிகளுக்கு அது பிரச்சனையாக இருந்ததில்லை.
‘எல்லாம் தானாச் சேர்ந்த கூட்டம்’ என்றபடியே கொத்துரொட்டியை பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொண்டு கடந்து போக முடிகிறது.
இந்திய இராணுவம் வெளியேறிய பின்
சரண் அடைந்த அவர்கள் அனைவரும் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.
அவர்களுக்காக இன்றைக்கு அழும்
இவர்களுக்கு அவர்களும்
துரோகிகளாகவே இருந்தார்கள்.
இதற்கும் மேலாக…
ஈ.பி.ஆர்.எல்.எப் காலத்தில் புலிகள் மீதான வன்முறையை மேற்கொண்ட மண்டையன் குழு பற்றி புலிகள் எவ்வளவு காலம் பொங்கியிருந்தார்கள்?
அந்த மண்டையன் குழுவின் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சுரேஷ் பிரேமச்சந்திரன், தற்போதைய மார்க்கட் நிலவரப்படி தேசிக்காய் தலையர்களில் ஒருவரான விக்னேஸ்வரனின் தானைத் தளபதி.
அத்துடன் யாழ்ப்பாணித் தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.
அவரிடம் எவருமே
இந்த கேள்வியை கேட்பதில்லை.
இந்தக் கதை சொல்லும் நீதி…
தமிழ்தேசியம் என்ற ஜீவநதி உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் கழுவும். உலகமகா அயோக்கியர்கள், திருடர்கள் எல்லாம் அடிக்கடி கால் கழுவுகின்ற அந்த ஜீவநதியின் புண்ணியத்தில், தமிழ்தேசிய செயற்பாட்டாளர்களாகவும், நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் உள்ளனர்.
எனவே, வாழ்நாள் பூராவும் இந்த வடுவைச் சுமக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் நண்பர்களுக்கான எனது அறிவுரை…
நீங்களும் தலைவர் படத்திற்கு மாலை போட்டு…
சீ… வேண்டாம்!
நீ கண்டனியோ? எண்டு உந்தக் கூட்டம் கிளம்பும்.
மாவீரர் தினத்திற்கு விளக்கு கொழுத்தி, நெஞ்சில் கை வைத்து வீரவணக்கம் செய்வதுடன், முள்ளிவாய்க்கால் பக்கமும் போய் விளக்கு கொழுத்தினால்…
இவர்களே, கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட அந்த சிறார்களை, தானாய் சேர்ந்த கூட்டம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக நீங்களும் ஒளிரக் கூடும