ஆணாதிக்க சமுதாயமானது பொதுவெளியை ஆண்களுக்கென்றே ஒதுக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு என்று இந்த பால்வாத சமுதாயம் விட்டுவைத்திருப்பது வீடும் அது சார்ந்த வெளிகளும் மட்டுமே. ஆனாலும் ஆளுமைமிக்க பெண்கள் தொடர்ச்சியாக இந்த பொது – தனிப்பட்டது என்ற பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளார்கள். இப்படியாக போராடும் பெண்கள் மீது பால்வாதம் தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது பால்வாதம் எப்போதும் பெண் உடல், அதன் செயற்பாடுகள், பெண்களது நடத்தைகள் என்பவற்றின் மீதே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த வகையில் பெண்களை தொடர்ந்தும் வீட்டினுள் முடக்கி வைப்பதற்கு பால்வாதம் பாவிக்கும் ஆயுதமாகவே பாலியல்ரீதியான தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற அனைத்து தளங்களிலும், அந்தத் துறைகளில் தலையெடுக்க முனையும் பெண்களை ஆண்கள் தொடர்ச்சியாகவே தாக்கிவந்துள்ளார்கள். தொடர்ந்தும் தாக்கி வருகிறார்கள். பெண்களின் அறிவை மறுப்பது, அவர்களது படைப்புகளை தரமற்றதாக மட்டந்தட்டுவது போன்றவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடப்பவைதாம். ஆனால், பெண்களை இந்த சாதாரண வழிமுறைகளினால் தடுத்து நிறுத்த முடியாதபோது, ஆணாதிக்கவாதிகள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் பெண் உடல் சார்ந்த பாலியல் தாக்குதல்கள், பாலியல் தொந்தரவுகள்.
டொறொன்ரோ நகரில் கடந்த வாரம் மஜீத் எழுதிய நான்கு புத்தகங்களின் வெளியீடு நடைபெற்றது. இந்த நிகழ்வை “பகு பதம்” நண்பர்கள் ஒழுங்குசெய்திருந்தனர். நம் காலத்தின் மந்தாரமான விமர்சனமுறைகள் பற்றியும், கனேடிய இலக்கியச் சூழல் பற்றிய உரையாடல்களும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளின்ள விநியோகம், நூலகங்களுடன் தொடர்புகொள்ளல் எனும் வகையிலான உரையாடல்கள் நிகழ்ந்தன.
ஆண்களால் எழுதப்படும் இக்கால ஆக்கங்களில் பெண்களின் உடலுறுப்புகளை எழுதும் விதங்கள் சலிப்பையும், சில தருணங்களில் கோபத்தையும் கொணர்கின்றன எனும் கருத்து பெண்கள் தரப்பிலிருந்து வெளிவந்தது. அன்று இரவு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடராஜா முரளிதரன் தனது முகநூலில் ஒரு “கவிதை”யை, இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதியிருந்தார். அந்தக் “கவிதை” பின்வருமாறு:
தனிமைத் துயரம்
அவனை அழித்துக் கொள்ளுமாறு
தூண்டுகிறது
பிள்ளைகள் தன்னைப்
புறந்தள்ளி விட்டார்கள் எனக்…
கதறியழுகின்றான்
தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறான்
தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான்
எனது ஆறுதல் வார்த்தைகள்
முனை மழுங்கிய அம்புகளாய்
வீழ்ந்து மடிகின்றன
சாவுக்கால் மீண்டெழுந்து வந்தவள்
ஆண் கவிஞர்களை
மார்பகங்களையும் யோனிகளையும்
பாடுதற்காய் சபிக்கின்றாள்
அவ்வாறெனில் அந்தப் பெண்
மார்பகங்களைத் தூக்கிக் காட்டுகின்ற
அதிநவீன மார்புக்கச்சையை
ஏன் அணிந்திருக்கிறாள்
எனக் கல்லை வீசுகிறான் இன்னொருவன்
சமூகத்தின் போதாமைகள் குறித்து
மைந்தர்கள் மீண்டும் ஒரு முறை
கிளர்ந்தெழுந்தார்கள்
வழி தவறிய பறவையாக
என்னைப் பாவனை பண்ணாமல்
மந்தைகளுள் என்னையும் ஒருவனாகப்
பிணைத்துக் கொள்ளும் இலயிப்பில்
இந்த “கவிதை”யில் வரும் இரண்டாம் பந்தியானது தோழி நிரூபா அந்த கூட்டத்தில் பேசிய அதே கருத்துக்களை சுட்டி நிற்கிறது. அடுத்த பந்தியானது “அந்தப் பெண்” என்று தொடர்கையில் இதுவும் தோழி நிரூபாவை பற்றியே பேசுகிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியக்கூடியதுதான்.
இந்தக் “கவிதை” வெளியானதிலிருந்து பலர் முரளிதரனிடம் கவிதையில் தனிப்பட்ட ஒரு பெண் மீதான பாலியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தவறான செயற்பாடு என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் அவர், இது ஒரு இலக்கியப் படைப்பு என்றும், பொதுப்படையாக பேசிச் செல்வதாகவும், யாரையும் தனிப்பட தாக்கும் நோக்கம் தனக்குக் கிடையாது என்றும் தொடர்ந்து ஒரு வாரமாக சாதித்து வந்தார்.
தற்போது அவர் இந்தப் பதிவை தனது முகநூல் தளத்திலிருந்து நீக்கிவிட்டிருந்தாலும், இது போன்ற தாக்குதல்கள் மலினப்பட்டுவிட்ட சூழலில், பொதுத்தளத்தில் செயற்படும் பெண்கள் மீது இந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்தக்கூடிய உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்த அக்கறையுடன் இவ்வாறான எதிர்வினையை நிகழ்த்தவேண்டியவர்களாக இருக்கிறோம்.
1) உரையாடல் என்று வரும்போது பலவிதமான மாற்றுக் கருத்து உள்ளவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்து சுதந்திரமாக, எந்தவிதமான பின்விளைவுகள் பற்றிய பயமும் இன்றி விவாதிப்பதற்கான சூழல் இருப்பது அவசியமானது. அந்த வகையில் அங்கு முன்வைக்கப்படும் யாருடைய கருத்துக்களையும், வேறு யாருமே நிபந்தனை இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவரும் நிர்ப்பந்திக்க முடியாது. இதே உரையாடல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்வது ஆரோக்கியமானதே. ஆனால் முரளிதரன் இந்த ஆரோக்கியமான விவாதத்திற்கான எல்லைகளைக் கடந்து, தனிப்பட்ட முறையில் தோழி நிரூபா மீது பாலியல்ரீதியான தாக்குதலை நடத்தியுள்ளார்.
2) பெண்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு முகங்கொடுக்க முடியாத ஆண்கள், சம்பந்தப்பட்ட பெண்கள் மீது தனிப்பட்ட, பாலியல்ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. நிஜ வாழ்வில் மட்டுமல்ல, வலைத்தளங்களிலும் கூட இதுதான் நியமம். இது அவர்களுடைய பாலியல் வக்கிரத்தைக் காட்டுகிறது. தனது தவறை ஒத்துக்கொள்ள மறுத்து வாதம் புரிவதும், தவறை சுட்டிக்காட்டுபவர்கள் மீது மேலும் தாக்குதல்களை தொடர முனைவதும் அனுமதிக்க முடியாதன.
3) பாலியல் ரீதீயான தாக்குதல்கள் பால்வாத சமுதாயத்தில் பெண்களை பொதுவெளியில் இருந்து துரத்தியடிப்பதை நோக்கமாகக் கொண்டவை. பெண்கள் பொதுவெளிகளில் சுதந்திரமாகச் செயற்பட வருவதே அரிதாக இருக்கும் இன்றைய நிலையில், அவர்கள் மீது இவ்வகையான தாக்குதல்களை நிகழ்த்துவது நீண்டகால நோக்கில் மிகவும் பாரதூரமான எதிர்விளைவுகளை கொண்டுவரக்கூடியது என்பதனால், சமூக அக்கறை உள்ள எவரும் இவற்றை அறவே அனுமதிக்க முடியாது.
4) பாலியல்ரீதியான தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்களை மிகவும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், சம்பந்தப்பட்ட பெண்களிடம் உடனடியான, நீண்டகால உளவியல் காயங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் இவற்றை வெறுமனே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு செல்ல முடியாது.
5) இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நடராஜா முரளிதரன் தனது “கவிதையை” அழித்திருக்கின்றபோதும், கவிதை பற்றிய குற்றவுணர்வையோ அது உருவாக்கியிருக்கக்கூடிய மனவுளைச்சல்கள் பற்றியோ எந்தப் புரிதல்களையும் அவரது முகநூற்பக்கத்தில் காணமுடியவில்லை.
6) தோழி நிரூபாவுடன் இவ்விடயத்தில் நாம் முழுமையான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கருத்துக்களுடன் உடன்பாடு கொண்டவர்கள் எமது அறிக்கையை ஏற்பிசைவு (endorse) பண்ணுமாறும், தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதற்கு போதிய வீச்சை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
7) எமது இந்தக் கண்டனம் நடராஜா முரளிதரனை முதன்மைப்படுத்தியிருந்தாலும், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும், பெண்விடுதலை, பெண்ணியக் கருத்தியல்களைப் பேசுபவர்களை கேலிப்பொருளாக்கும் பாங்கும் சமூக வலைத்தளங்களிலும், இதர கலை இலக்கிய வெளிகளிலும், நடைமுறை வாழ்விலும் அதிகரித்துவருவதை மிக மோசமான ஒரு சமிக்ஞையாக கருதுகிறோம்.
8) இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு தனிப்பட்ட உறவுகள் காரணமாக ஆதரவளிப்பதும், அவர்களின் செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் இதுபோன்ற நடவடிக்கைகளும் சூழலும் தொடர்வதை ஊக்குவிப்பனவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ் சூழலில் பரவிவரும் பெண்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், பாலியல் தொல்லைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நிகழ்வாக மாத்திரமே இது புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்றும், இதனை பலரும் பல்வேறு விதத்திலும் தொடர்வதே எமது சமூக, அரசியல், கலை, இலக்கிய சூழலுக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை அமைக்கும் என்பதையும் வலியுறுத்திக்கொள்கிறோம்.
இப்படிக்கு………
கிருத்திகன்
அருண்மொழிவர்மன்
சேனா
ரகுமான் ஜான்
சந்திரா
நிரூபா
யாழினி
சபேசன்
மெலிஞ்சி முத்தன்
சுடரகன்
ஶ்ரீறஞ்சனி
அகிலன்
அவ்வை
விக்கினெஸ்வரன்
அரசி
துஸ்யந்தி
தீபா
தான்யா
சத்தியா
நந்தினி
ராதா
கிருபா
கற்சுறா
அதீதா
மைதிலி
ப.அ. ஜெயகரன்
திருவருட்செல்வி ஜெயகரன்
சீவரட்ணம்
அருள்
மயில்
தர்சன்
ரதன்
MisFits for Change
தேடகம்