கண்டிய நடனம்தான் பிரச்சினையா?

(ப. தெய்வீகன்)

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் இரண்டு பெரிய முகாம்கள் உள்ளன.  அங்குள்ள பத்திரிகை நிறுவனமொன்று மற்றையது, யாழ். பல்கலைக்கழகம் என, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். அமைச்சராக அவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் சலுகைகளுக்கு விலைபோகாத யாழ். மக்கள், விடுதலைப்புலிகளின் பக்கமே தமது ஆதரவைத் தொடர்ந்தும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தபோது, அது பற்றிக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

டக்ளஸ் கூறினார் என்பதற்காக, அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றில்லை. ஏனெனில், ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலைமை அப்படித்தான் இருந்தது. யாழ். பல்கலைக்கழகமானது, விடுதலைப் போராட்டத்துக்கு எத்தகைய பங்களிப்பினை ஆரம்ப காலத்தில் வழங்கிவந்தது, அங்கிருந்து புறப்பட்டவர்கள் எத்தனை பேர், ஆயுதக் குழுக்களுக்கு தாங்குதூண்களாக விளங்கினார்கள். வடக்கில் நிலைகொண்டிருந்த அரசியல் கட்சிகளை விட, யாழ். பல்கலைக்கழகத்துக்கு மக்கள் மத்தியில் அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஒரு விடயத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டை விட, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிடும் அறிக்கையில் சொல்லும் நிலைப்பாட்டுக்கு, பொதுமக்களும் ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

வடக்குக்கு வெளியே ஜே.வி.பியினர், ஏனைய பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களை வளைத்துப் போட்டுக்கொண்டு செய்த காரியங்களைவிட, யாழ். பல்கலைக்கழகம் தனித்து மேற்கொண்ட நடவடிக்கைகள், மக்கள் மனதில் காத்திரமான நம்பிக்கைகளை வளர்த்திருந்தன. தமிழர் அரசியல் என்பது, பல்கலைக்கழகச் சூழலிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டால், அது மிகுந்த ஆரோக்கியமானதாக அமையும் என்ற உறுதியும், பல தரப்புக்களுக்குக் காணப்பட்டது.

தொண்ணூறுகளில் சமாதானப் பேச்சுக்குழுக்கள் வந்திறங்கியது முதல், இந்திய – இலங்கை படையினரின் ஹெலிகொப்டர்கள் இறங்கிப்போகுமளவுக்கு, யாழ் பல்கலைக்கழக மைதானம் மட்டும் பெரிதாக இருக்கவில்லை. யாழ். வருகின்ற எவரும், யாழ். பல்லைக்கழகத்துக்கு வந்து செல்லவேண்டியளவுக்கு, அதன் முக்கியத்துவமும் விசாலமானதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தை புலிகளின் முகாம் என்று டக்ளஸ் கூறியது, அரசியல் ரீதியாகச் சரியானது என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இருந்தாலும், யாழ். பல்கலைக்கழகமானது குடாநாட்டின் ஒரு தூதரகமாக, நாடாளுமன்றமாக, உயர்ஸ்தானிகராலயமாக தனது பங்களிப்பை நல்கியது என்று, ஜனநாயக ரீதியான சொல்லாடல்களால் விளிப்பது பொருத்தமாக இருக்கும். அதன் தற்போதைய நிலமை என்ன?

இந்தப் பல்கலைக்கழத்தின் முக்கியத்துவத்தை, விடுதலைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முன்னர் அறிந்திருந்தவாறு, இப்போது தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்கின்றனவா என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது. அன்று, யாழ். மக்களுக்கு ஒரு விடயத்தை தெரியப்படுத்த வேண்டும் என்றால், அதனை அங்கிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் தலைப்புச் செய்தியின் ஊடாகவும் யாழ். பல்கலைக்கழத்தின் மாணவர் ஒன்றிய அறிக்கையின் ஊடாகவும், பூடகமாகச் சொல்லக்கூடிய வல்லமையை பரஸ்பரம் கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்புக்கள், இன்று அவ்வாறான ஒரு சக்தியை கொண்டிருக்கின்றனவா என்றால், நிச்சயமாக இல்லை.

போர் முடிவடைந்த பின்னர், முற்று முழுதாகவே பெரும்பான்மையின மாணவர்களின் வருகையுடன் பல்கலாசார மயமாக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழகச் சூழல், முன்பிருந்த இறுக்கமான தனது இருப்பிலிருந்து இளகத் தொடங்கியது. தனது கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால், பொதுமக்களுக்கான பொறுப்பான அறிவூட்டல்களை நிகழ்த்தி வந்த களப்பணிகளிலிருந்து, பல்கலைக்கழக சமூகம் சளைக்கத் தொடங்கியது. மஹிந்தவின் கொடூரமான பிடியில் நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பறிகொடுத்த போதும், மாவீரர் தினத்துக்கும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுக்கும் விளக்கேற்றிய அப்பல்கலைக்கழகத்தின் உறுதி, கொஞ்சங்கொஞ்சமாக உதிரத்தொடங்கியது. இது ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் மனோநிலையாக இல்லாவிட்டாலும்கூட, அதன் நலிந்த தோற்றப்பாட்டைத் தரிசிக்க வேண்டிய நிலையில்தான், அதன் தற்போதைய போக்கு உள்ளது.

இது, இலங்கை அரசாங்கத்தின் நுட்பமான வேலைத்திட்டங்களில் ஒன்று அன்றி, வேறெதுவும் இல்லை. டக்ளஸ் தேவானந்தா கூறியதைப்போல, குடாநாட்டு மக்களின் அடையாளங்களைக் குறிவைத்து, அவற்றுக்கு நஞ்சூட்டிக் கொன்றுவிட்டால், அதற்குப் பின்னால் அணிதிரளக்கூடிய மக்களை வழிக்குக் கொண்டுவருவது, மிகச்சுலபமான விடயம் என்பது அவர்களின் மனக்கணக்கு. அதன் ஒரு படிமுறையாக, போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீளக்குடியமர்த்துவதற்கு காண்பித்த வேகத்தைக் காட்டிலும், பெரும்பான்மையின மாணவர்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்து, பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட தூய்மைவாத நிலைப்பாட்டை கரைக்கத் தொடங்கிய வேகம் துரிதமாகக் காணப்பட்டது.

இந்த நடவடிக்கையினால் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் இறுக்கமும் அவர்களது வீரியமும், முற்றாகக் கரைக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை, அதன் செறிவைக் குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. சுருக்கமாகக் கூறுவதானால், அரசியல் அவா உடைய இனமொன்றுக்கான படித்த இளைஞர்களை உருவாக்கும் உயர்பீடமாக, யாழ். பல்கலைக்கழத்தைத் தொடர்ந்தும் அங்கம் வகிக்க விடாமல், அங்கிருப்பவர்களை பல்கலாசார நோய்த்தொற்றுடையவர்களாக உருவாக்கி, அந்த வியாதிகளிலிருந்து வெளியில் வரமுடியாதவர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பது, அதன் நோக்கமாக இருந்தது. இந்தக் கருத்தினை முன்வைக்கும்போது பலரது எதிர்வாதங்கள், தமிழ் மாணவர்கள், பெரும்பான்மையினரின் பிரதேசங்களில் கல்வி கற்கவில்லையா, அதனை அரசாங்கம் அனுமதிக்கவில்லையா என்று, பல முனைகளில் சீறி விழுவதுண்டு.

இந்தப் பத்தியை மீண்டும் முதலில் இருந்து வாசித்தால், இதற்கான பதில் கிடைக்கும். இலங்கையின் எந்தப் பல்கலைக்கழகமும், தேசிய இனமொன்றின் தலைவிதியைத் தீர்மானிக்கும் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கும் சக்தி கொண்டதாக இயங்கவில்லை. பெரும்பான்மையினரின் முக்கிய கொள்கைகள் எவையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முடிவெடுக்கப்படுவதில்லை. இலங்கை இராணுவத்தில் இணைந்து, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை அடக்கவேண்டும் என்று வெஞ்சினம் கொண்டு ஆயுதம் தூக்கியவர்கள் எல்லோரும், ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து புறப்படவில்லை. தென்னிலங்கை மக்களுக்கான அரசியல் புரிதல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கு களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிக்கை விட்டுத்தான்  நடக்கும் என்று யாரும் நம்பியிருக்கவில்லை.

யாழ். பல்கலைக்கழகம், இங்குதான் தனித்து நிற்கிறது. ஒரு பிராந்தியத்தின் முக்கிய பல்கலைக்கழகம் என்ற வகிபாகத்துக்கு அப்பால், அதன் செயற்பாட்டு வீரியம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றிலும், ஆழமான பிடிப்பைக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமது நல்லிணக்க முயற்சிகளையும் பல்லினத் தன்மையையும் சமத்துவ முயற்சிகளையும் கூர் பார்ப்பதற்கு முடிவு செய்யும் தரப்புக்கள், அதன் பாரதூரத்தினை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அண்மையில் நடைபெற்று முடிந்த சம்பவத்தினை மட்டும் மையப்படுத்தி, இந்த கருத்தினை கூறவில்லை. இப்போது நடைபெற்றிருக்கும் அசம்பாவிதமானது, நிச்சயமாக கண்டிய நடனத்தினை இடைச்செருகுவதற்கு முற்பட்டதால் மாத்திரம் வெடித்த கலவரம் அல்ல பல மாதங்களாக பல்கலைக்கழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் கண்டிப்போயிருந்த பல காயங்களின் வெடிப்பு. பூசிப் மெழுகப்பட்டிருந்த இனநல்லிணக்க வீட்டின் உண்மையான வெடிப்புகள், அவ்வப்போது வெளித்தெரியத்தானே செய்யும்.

பல்கலைக்கழத்தின் சூழலை, தங்களுக்கு வக்கனையாக, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்தி, அதன் மூலம் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணக்குப் போடுபவர்கள், அதற்குரிய அடிப்படை விடயங்களையும் அத்திபாரங்களையும், சரிசெய்யத் துணிய வேண்டும்.

இந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றும், இன்னும் போருக்கு திமிறிக்கொண்டு நிற்கும் இரத்த வெறியர்கள் கிடையாது. போரின் வலியை, பெரும்பான்மையின மாணவர்களைவிட அதிகம் அனுபவத்தால் கண்டவர்கள் இவர்கள். இவர்களது இனம் கோருகின்ற உண்மையான நல்லிணக்கம் என்ன என்பது, இப்போது கண்டிய நடனத்தை ஒழுங்கு செய்த எந்த சிங்கள மாணவனுக்காவது தெரியுமா? நல்லாட்சியின் பிதாமகர்களாகத் தங்களைப் பிரகடனம் செய்துகொள்ளும் ஆளும் மைத்திரி அரசாங்கத்தின் பிரபுக்கள் யாராவது, வடக்துக்கு வருகின்ற சிங்கள மாணவர்களுக்கு, இந்த நல்லிணக்கத்தின் தாற்பரியம் குறித்து வகுப்பெடுத்திருக்கிறார்களா?

அரசாங்கத் தரப்பினர் வேண்;டாம்‚ இவ்வளவு காலமும், இரத்தமும் சதையுமாக செய்தியையும் படங்களையும் வெளியிட்டு, நாட்டில் ஏற்பட்ட மூன்று தசாப்தகால இரத்த சரித்திரத்தின் சாட்சியாக இருந்து வருகின்ற தென்னிலங்கை ஊடகங்களாவது, யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடாக சிங்கள அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற ‘மொள்ளமாரித்தனத்தை’ தட்டிக்கேட்டதுண்டா?

சில யதார்த்தங்களை உணர்வது கடினம் ஆனால், உணர்ந்துதான் ஆகவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கைகலப்புகள், அடிதடிகள் வருவது சகஜம். அவற்றைத் தீர்ப்பது என்பது, அந்தப் பிரச்சினைகளின் முக்கியத்துவம், அதன் கனதியின் அடிப்படையில் நடைபெறுவதாகும்.

ஆனால், யாழ். பல்கலைக்கழகம் எனப்படுவது, தேசிய இனமுரண்பாட்டின் கொதிநிலை கூடிய புள்ளிகளில் ஒன்று. இங்கு நடைபெறுகின்ற சம்பவங்கள், அதன் விளைவுகள், தீர்வுகள் ஆகியவற்றுக்கு, இலகுவாக நிரந்தர பதில்கள் கிடைப்பதில்லை. ஆகவே, அவற்றைக் கையாளுவது, கத்திமேல் நடப்பதைப்போன்றது.

இந்தப் பிரச்சினைகளின் ஆணிவேர்களை கண்டறிந்து கீழிருந்து மேலாக தீர்வை நோக்கிய பயணமே இவற்றுக்குப் பதில்களாக அமையுமே தவிர, ‘சொத்தித் தலைக்குச் சோடினையை மாற்றிப் பயனில்லை’.

(Tamilmirror)