வியாழக்கிழமை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார். அவரது வருகை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், தான் அமைச்சரிடம் பேசியே வருகை தந்ததாக சாணக்கியன் தெரிவித்திருக்கிறார். இந்தப்பிரச்சினை புதிய அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் தொடர்கிறது.
ஆனால், வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கும் மேலாக அமைச்சர் சாணக்கியனை அனுமதிக்கும்போது, மட்டக்களப்பிலுள்ளவர்கள் ஏன் அழைக்கவில்லை என்பதுதான் கேள்வி. அழைக்காமல் ஏன் போகிறீர்கள் என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள்.
“மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற முக்கிய கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கூட்டமைப்பின் சார்பில் இங்கு நாங்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். எனினும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் (ஜனா) வருகை தரவில்லை. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பதற்கு தேவையாகவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எங்களிடம் முன்மொழிவுகள் உள்ளன. எனினும் அவற்றினை முன்வைப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை. எங்களையும் கூட்டங்களுக்கு அழைத்தால் நாங்களும் முன்மொழிவுகளை முன்வைப்போம்” என்று சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.
மாவட்டத்தினுடையதோ, மாகாணத்தினுடையதோ ஏன் நாட்டினுடையதோ, எதுவாக இருந்தாலும் பரஸ்பர கலந்துரையாடலுடன் நடைபெறும் பொழுது, அது பூரணமானதாக இருப்பதற்கும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் இந்தத் ‘திருடன் பொலிஸ் விளையாட்டுகள்’ குறித்து, சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவிட்டோம். இருந்தாலும் தொடரும் உள்குத்தை ஞாபகப்படுத்தி வைப்பதில் தவறில்லை.
மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் சிலவிடயங்கள் தொடர்ச்சியாகவும் குற்றச்சாட்டுகளாகவே வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அதற்கு நெருப்பின்மை காரணமல்ல இருப்பதால் புகைகிறது என்பதே உண்மை. அதாவது மக்கள் தொடர்பான பொதுவான விடயங்களில் பிரச்சினைகளிலிருந்து ஆளும் தரப்பினர் ஒதுங்கியிருக்கின்றனர் என்பதே ஆகும்.
உண்மையில் நிரந்தரமான திட்டமிடலோ, திட்டமோ இல்லாது வருபவர், போபவர் எல்லோம் தான் நினைத்ததுபோன்றெல்லாம் எதனையும் செய்துவிடமுடியும் என்ற நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருவர் அமைத்ததை இடிப்பதும், கைவிடுவதும், புதிதாக ஒன்றை ஏற்படுத்துவதும் போன்றதான செயற்பாடுகள் நீண்டகால நோக்கில் அபிவிருத்தியாக அமையாது.
ஆளும் கட்சியினர் என்பவர்கள் குற்றச்சாட்டுகளை பொறுப்புடன் எதிர்கொள்ளப் பழகிக் கொள்வதே சிறப்பான அரசியலாக இருக்கும். ‘துட்டனைக்கண்டால் தூர விலகு’ என்பது போன்று, தீர்த்து வைக்கப்படவேண்டிய மக்களின் பிரச்சினைகளைக் கண்டு அரசியல் தரப்பினர் ஒழிந்து கொள்ள முடியாது. மாவட்டத்தின் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்காக நெருக்கு நேராக நின்று முட்டிமோதி, போராடி அவற்றினைத் தீர்த்து வைக்கவேண்டும். ஆனால் மட்டக்களப்பில் நடப்பது வேறு.
கிழக்குக்கென உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஜனாதிபதி செயலணி, மண் மாபியாக்களின் அளவுக்குமிஞ்சிய அகழ்வுகள், பிரதான தொழில் துறைகளில் ஒன்றான பண்ணைத் தொழிலுக்கான மேய்ச்சல்தரைப் பிரச்சினை, எல்லைப்பிரதேச அத்துமீறிய குடியேறல்கள், கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகள், காணி அத்துமீறல்கள், ஊழல், இனமுறுகல்கள் என அடுக்கிக் கொண்டே செல்லுமளவுக்கான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இருந்தபோதும் அவற்றை ஏறெடுத்தும் பார்க்காத ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு எதனைச் செய்துவிடுவார்கள் என்பது எதிர்த்தரப்பினரது கேள்வியாக இருக்கிறது. இதனை நேருக்கு நேராகவும் சொல்லும் துணிச்சலும் அவர்களுக்கிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப்பிரச்சினை இப்போது அம்பாறை, பொலன்நறுவை என மேலும் இரண்டு மாவட்டங்களுக்குமான பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது என்றால், அது கிழக்கு மாத்திரமல்ல, வடமேல் மாகாணமும் சம்பந்தப்பட்டதாக மாறியிருக்கிறது.
மணல் அகழ்வைப் பொறுத்தவரையில் மாவட்டத்திலுள்ள மக்களின் தேவைகளுக்குக் கூட மணல் பெறமுடியாத அளவுக்கு மாபியாத்தனம் ஒளிந்திருக்கிறது. மணல் ஏற்றுவதற்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விற்பனை செய்யும் வரைக்கும் இருக்கின்ற உள்விவகாரம் பேசிமுடியாது.
அண்மையில் பிரதேச செயலாளர் ஒருவரும் மணல் அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளாலேயே வம்பில் மாட்டிகொண்டதால் ம்பந்தப்பட்ட விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. மணல் ஏற்றிச் சென்ற ஒருவர் இரண்டு நாள்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரச் சிக்கல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கத்தினைப் பயன்படுத்துவதற்காகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆளும் கட்சியிலும் அரசியல்வாதிகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இவ்வாறு மாற்றமும் கருத்தும் ஆளும் தரப்பினர் பக்கமே இருந்து கொண்டிருப்பது அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும்.
கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை, அம்பாறையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகாமைக்குரிய காரணமாக இருந்தது, கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை.
தற்போதைய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தினார். ஆனால் இப்போது அவரால் அது முடியவில்லை. பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்தியும் கொடுக்க முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பொழுது ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில் கல்முனை தமிழ்ப்பிரிவு தரம் உயரும் என்று முழக்கமிட்டார். ஆனால் நடந்தது வேறுகதை.
அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்தியக் கட்டளைத் தளபதியாக இருந்து அவ் அமைப்பிலிருந்து பிரிந்து, அரசாங்கத்துடன் இணைந்து பிரதி அமைச்சரான கருணா எனும் வி.முரளிதரன், கல்முனை விடயத்தில் பல உறுதிப்பாடுகளைக் கூறியிருந்தார். ஒன்றும் நடைபெறவில்லை. அதற்கான துருப்புச் சீட்டை, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர் அரசியலில் அரசாங்கத்துடன் தமிழ்ப்பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதன் வரலாறு.
இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர் ஆளும் கட்சியென்றால் மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்கு தமிழ்த் தேசிய தரப்பு மீது குற்றச்சாட்டுவேறு.
தொல்பொருள், வனப் பாதுகாப்பு என்ற வகையில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் கொழும்பிலிருந்தபடியே தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளமிடும் அதிகாரிகள், அவ் இடங்களுக்கு விஜயம் செய்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. இது தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.
இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா, தனிமைப்படுத்தல் எவையும் எதுவும் செய்துவிடுவதுமில்லை. அதுபோலவே, பயணக்கட்டுப்பாடும்!
ஆனால், மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுக்கொண்டேதான் இருந்தன. அக்காலத்தில் அகழப்பட்ட மணல் எங்கே சென்றது என்பது கேள்வி.
யானை உண்ட விளாம்பழம் ஒரு சிறுதுளையுடன் உள்ளே எதுவுமற்று இருப்பதுபோல், தமிழர் பிரதேசமும் அவ்வாறே உள்ளீடுகள் எதுவும் அற்று வெறும் கோதாகும் கைங்கரியங்களே அரங்கேறுகின்றன.
எதற்கும் கையேந்தும், பொருளாதாரம் அழிந்த மக்கள் கூட்டமாக அரசியலை நடத்தி, மலையைப்பார்த்து நாய் குரைத்தால் நமக்கென்ன என்று கேட்கின்ற அரசியலை நடத்துவதில் பயன் என்ன என்பதுதான் பொதுப்படைக் கேள்வி.
மாவட்டத்தின் காலங்காலமாக இருக்கின்ற பொதுவான பிரச்சினைககளைத் தீர்த்து வைப்பதற்கு, மட்டக்களப்பின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் முயலவேண்டும்; முடித்தும்வைக்கவேண்டும்.
மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதனைத் தவிர்த்து, கண்களை மூடிய பூனைகளாக இருக்க முயல்வதற்குப் பெயர் ஆளும் கட்சி அரசியலா? ஆளும் அரசியலா என்பது, மக்கள் மற்றும் அரசியல் தரப்பினுடைய கேள்வியாகும். இதற்கான பதில் விரைவுபடுத்தப்படட்டும்.