ஒரு வகை குருகுலவாசம் என்ற வகையிலான சிறைச்சாலைச் செயற்பாட்டை உடைய பாடசாலையில் இந்த குழந்தைகளின் உடை, பழக்க வழக்கங்கள் மொழி கலாச்சாரப்பண்பாடுகள் முற்று முழுதாக மாற்றப்பட்டன…..அழிக்கப்பட்டன. 260 வரையிலான இனகளையும் 50 வரையிலான இவர்களது மொழிகளும் மீளமுடியாத அளவிற்கு அழிகப்பட்டன. இவர்கள் தமது பெற்றோரை சந்திப்பது வீட்டிற்கு விடுமுறை என்று போவது முற்று முழுதாக தடுக்கப்பட்டது. இதில் பல குழந்தைகள் இறந்து போயினர். இந்தனை அவலங்களையும் சந்தித்த மக்களைப் பற்றி….
உலகின் ஒரு மூலையில் வட அமெரிக்காவில் உலகில் வளர்ச்சியடைந்த எட்டு நாடுகளில் ஒன்றான கனடாவில் அவ் நாட்டின் பூர்வீக குடிகள் (செவ் இந்தியர்கள்) தமது இருப்பிற்கான போராட்டம் ஒன்றினை நடாத்திக் கொண்டு இருக்கின்றனர். உலகின் கவனத்தை கொரனா வைரஸ் ஐ மீறி அதிகம் இந்தப் போராட்டம் ஈர்க்காவிட்டாலும் இப் போராட்டமும் ஒரு வகையில் எமது தேசத்து மூத்த குடியினரின் இருப்பை வேண்டிநிற்கும் உரிமைப் போராட்டம்தான்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மேற்கு மத்திய பகுதியில் வாழும் வெர்சுவெர்ன் (Wet’suwet’en என்ற ஐந்து பூர்வீக குடிப் பிரிவினர்கள் இணைந்து ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று ஏனைய பூர்வீக குடிகளையும் இவர்களுக்கு ஆதரவாக இணைத்துள்ளது. கனடா முழுவதும் கிழக்கு மேற்காக பரவி புகையிரதத் தடங்களை மறித்து போராட்டம் நடாத்துதல் என்ற வகையில் விரிவடைந்துள்ளது.
1492 ல் கிறிஸ்ரோபர் கொலம்பஸ் வட அமெரிக்கா மீதான ஆக்கிரமிப்பின் பின்பு ஐரோப்பிய வெள்ளையின மக்களின் குடியேற்றங்களுடன் ஆரம்பமாகி இன்று பல தேசிய இனங்களின் நாடாக பரிணமித்து ‘முதல்தர” வாழ்க்கையை தன்னத்தே கொண்டிருக்கும் நாடு கனடா.
ஆனால் தனது பூர்வீகக் குடிகளின் வாழ்விற்கும், உணர்வுகளுக்கும் கேள்விக்குறியை உருவாக்கும் பல நூறு கிலோ மீற்றர் நீளமான பாரிய எரிவாயுக் குழாய்களை தமது பூர்வீக நிலப்பரப்பை ஊடறுத்து செல்லும் வகையில் நிறுவுவதை நிறுத்துமாறு கோரி நடைபெறும் போராட்டம் இது.
கனடாவின் மேற்கு மாநிலமான பிறிட்டிஸ் கொலம்பியா(British Columbia) மாகாணத்தின் பசுபிக் சமுத்திரத்தை ஒட்டிய பூர்விக குடிகளின் நிலப்பரப்பை ஊடுருவி இது அமைக்கப்படுகின்றது. கானத்து மிருகங்கள், பறவைகள் மரங்களுடனும், பசுபிக் சமுத்திரத்தின் மீன்களுடனும் என்று இயற்கையுடன் ஒன்றித்து வாழும் இந்த மக்களின் வாழ்வியலைக் கேள்விக் குறியாக்கி இருக்கும் எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டம்.
இது சில கிலோ மீற்றகள் அல்ல, சுமார் 700 கிலோ மீற்றர் வரை நீண்டு அவர்களின் வாழ் நிலங்களை ஊடறுத்துச் செல்கின்ற திட்டம் ஆகும்தமது மொழிகள், கலாசாரங்கள், இருப்பிடங்கள், வாழ்வாதாரங்களை பெரும்பகுதியை கொலம்பஸ் இன் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் இழந்து விட்ட இந்த மக்களின் இயற்கை சார்ந்து வாழுதல் என்பதற்கு அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இது மிகப் பெரிய எரிபொருள் குழாய்களை இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களை ஊடறுத்து நிறுவ தனியார் கம்பனிகளுக்கு கொடுத்த அனுமதி இந்த பிரச்சனை பூதாகரமாக்கியிருக்கின்றது. இலாபம் ஒன்றையே தமது நோக்காக கொண்டிருக்கும் இந்த கம்பனிகளின் ஆளுமைகளே இந்த மேற்குலக நாடுகளின் ஆளும் வர்க்கமாக மிளிர்கின்றது.
எரிவாயுக் குழாய் அமைப்பதற்கு அனுமதித்தற்கு கனடிய அரசு கூறும் காரணங்கள் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பும், பில்லியன் கணக்கில் அரசுக்கான வருவாயும் என்பதே யாகும். இலங்கையில் சம்பூரிலும், இந்தியாவில் கூடான்குளத்திலும், தூத்துக்குடியிலும் சொன்ன அதே காரணங்கள்தான் இவை.
இவற்றிற்கான மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை அவ் அவ் நாட்டு அரசு யந்திரம் நாடுகள், கண்டங்களைத் தாண்டி ஒரே மாதிரியாகத்தான் கையாள முற்படுகின்றது. அது அரச படைகளைக் கொண்டு போராட்டங்களை துப்பாக்கி சூடு நடத்தியேனும் மக்களின் குரல் வளையை நெரித்தல் அல்லது அவர்களை அழித்தல் என்பதேயாகும்.
பூர்வீக குடிகளும், கனடாவின் இளம் தலை முறையினரும், ஏனைய சுற்று சூழல் ஆர்வலர்கள், உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எமது பூர்வீக குடிகளின் வாழ்வாதாரங்களையும், வாழும் நிலங்களையும், உணர்வுகளையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டம் சுற்றுச் சூழலுக்கு உகந்தது அல்ல என்றும் தமது நியாங்களை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த புதிய எரிவாயு குழாய்கள் உலகம் வெப்பமடைந்து வருவதை இது தடுக்க உதவாது என்றும் பிரான்சில் 2015ம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் தொழில் புரட்சிக்கு பின்னரான உலகின் வெப்பநிலை உயர்ச்சி 2.7 C இதனை 1.5 C இற்குள் மட்டுப்படுத்துவதற்கு எதிரானது என்று கூறுகின்றன.
இதற்கு இந்த பாரிய எரிகுழாய் அமைப்பது பெரும் தடையாக இருக்கப் போவதாகவும் இது வடதுருவ பனிக் கட்டிகளை உருக வைத்து சமுத்திரங்களின் நீர்மட்டம் உயர்வை ஏற்படுத்தும். இதனால் பல இலட்சம் நிலப்பரப்புகள் கடலுக்குள் மூழ்கும் ஆபத்தை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தை முன்வைக்கின்றனர்.
சமுத்திரங்கள் இணைக்கப்பட்டிருப்பதினால் இந்த வட துருவ பனிக்கட்டி உருகல் மாலை தீவிற்கு 20 வருட ஆயுள் குறித்தது போல் இலங்கையிற்கும் ஆயுள் குறிப்பதற்கு அதிக நாட்கள் பிடிக்காது தற்போதைய போக்கில் உலகம் வெப்பம் அடைந்து செல்வதை அனுமதித்தால்.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயும், அமேசன் காடுகளின் எரிப்புக்களும் இயற்கையிற்கு விரோதமான செயற்பாடுகளின் வடிவங்களே. இதனை மட்டுப்படுத்தும் வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கும் பூர்வீக குடிகளை ஒதுக்குதல் அல்லது முதல்தரக் குடிகள் என்று சொல்லிக் கொண்டு ஏதும் அற்றவர்களாக்குவதும் இந்த விளைவுகளுகளை துரிதப்படுத்தவே உதவுகின்றன.
நீரை ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல வாய்கால்களை வெட்டினார்கள், குளங்களை குட்டைகளை அமைத்தார்கள், நம் முன்னோர்கள். இது நீர் ஆதாரங்களை பராமரித்து மனிதகுலத்திற்கான அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. மனித குலத்தின் வாழ்விற்கு பேருதவிகளை வழங்கி வருகின்றன.
நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் உறவுகளுடன் பேச தொடர்புகளை ஏற்படுத்த கம்பிகளை இணைத்தனர், தொலைத் தொடர்பிற்காக. இது மக்கள் கூட்டங்களை நெருக்கமாக உதவின. இது பின்பு விஞ்ஞான வளரச்;சியின் காரணமாக கம்பியில்லா தொடர்பு வரை வளர்சியடைந்தது. அது கிரகம் விட்டு கிரகம் தாவும் வரை இன்று பாய்ந்துள்ளது.
பூமித் தாய் பல கோடி வருடங்களாக தனக்குள் சுழற்சி முறையில் உருவான கனிம வளங்களை தனக்குள்ளேயே கொண்டிருக்கின்றது. இதில் எரிபொருள் சார்ந்த பெற்றோலியம் பேன்றவை தொழிற் புரட்சியிக் பின்பு அதிக தேவைகளை ஏற்படுத்தின. இந்த கனிம வளங்களை தன்னகத்த கொண்ட நாடுகள் செல்வந்த நாடுகளாகவும் இந்த நாடுகளை ‘வலியார்” ஆக்கிரமித்து யுத்தம் செய்த வரலாறுகளும் எமக்குத் தெரியும்.
இந்த எரிபொருளை ஒரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொள்கலன்களில் கொண்டு செல்வதற்கு பதிலாக குழாய்கள் மூலம் கொண்டு செல்லுதல் குறைந்த தூரத்திற்கு என்று ஆரம்பித்து இது தற்போது நாடுகளை விட்டு நாடுகளுக்கு அப்பால் பல கிலோ மீற்றர் தூரங்களை கடக்க உருவாக்கப்ட்டு வருகின்றன.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ரஷ்யா தனது குழாயில் எரிபொருட்களை காவும் செயற்பாட்டில் கோலோச்சுகின்றது. தற்போது கனடாமாவும் இதில் இறங்கியுள்ளது. இந்த குழாய்கள் தது நாடுகளுக்கு அப்பால் வேறு நாடுகளை ஊடறுத்திச் செல்வதற்கு அந்த நாடுகளின் அனுமதியும் தொடர்ந்தார் போன்று செயற்படுத்த அனுமதிகளும் தேவையாக இருந்தன. இதற்கான அனுமதியை வழங்குதல்,
வழங்காதிருத்தல் என்பது நாடுகள் நாம் எந்த ஆளுமையிற்கு ஆதரவு என்ற விடயங்களின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற இதில் தமது செல்வாக்கை செலுத்தவும் யுத்தங்களும் ஆட்சிமாற்றங்களும் இதற்கான செயற்கையாக உருவாக்கப்பட்ட கிளர்ச்சிகளும் என்று உலகம் இன்று அமைதியை தொலைத்து அல்லோகல்லல்படுகின்றது. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது பொது மக்களே.
1492 கிறிஸ்ரோபர் கொலம்பஸ் வட அமெரிக்காவை காணும் முன்பு வட அமெரிக்கா இருந்து கொண்டுதான் இருந்து. இங்கு மனிதர்கள் பூர்வீகக்குடி மக்கள் வாழ்த்து கொண்டுதான் இருந்தார்கள். 634 பூர்வீக குடிகளையும் 50 மொழிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் நாடு கனடா ஆனால் தற்போது இவர்களன் மொழி கலாச்சாரம் எல்லாம் ஆங்கிலத்திற்குள்ளும் பிரெஞ்சு இற்குள் எம் கிறிஸ்தவத்திற்குள் மூழ்க்கி மூக்கிற்கு மேலே சென்று விட்டன.
கொலம்பஸ் இன் வருகையும் ஐரோப்பியர்களின் குடியேற்றமும் இயற்கையுடன் அனுசரித்து கூட்டாக வாழ்ந்து வந்த இந்த பூர்வகுடி மக்களை பின்னே தள்ளி ஐரோப்பிய வெள்ளையர்களே இந்த நாட்டை கண்டுபிடித்தவர்கள் உருவாக்கியவர்கள் என்ற போக்கை உருவாக்க காரணமாகவும் அமைந்தது.
இதற்கு பூர்வ குடிகளின் கலை கலாச்சாரம் மொழி வாழ்க்கை முறை எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்கினர் கொலம்பஸ் இன் வருகையின் பின்பு; பலமிக்க நவீன ஆயுதங்களுக்கு முகம் கொடுக்க முடியாத இந்த மக்கள் மேலும் காட்டிற்குள் சென்று தமது இயற்கை சார்ந்த வாழ்விற்குள் தம்மை குறுக்க வேண்டிய நிலையிற்கு தள்ளப்பட்டனர்.
கனவான்கள் போல் தம்மை காட்டிவந்த இந்த குடியேறிகள் இந்த மக்களுக்கான வாழ்வாதாரங்களை அழிப்பதை வெளியுலகம் கண்டனக் குரல் எழுப்பிய போது இவர்களுக்கு வரிச்சலுகையும் பிரதான நீரோட்டத்தில் இவர்களை இணைப்பதற்கான கல்வி முறையை வழங்குகின்றோம் என்ற போர்வையில் ரெசிடென்சல் பாடசாலயை (Residential School) அமைத்து குழந்தையாக இருக்கும் போதே முதல் குடி மக்களின் பிள்ளைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்காத விடுதிப் பாடசாலைகளில் அடைத்தனர்.
அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டவை பூர்விக மக்களின் மொழி வழிபாட்டு முறை கலாசசாரம் என்பனவற்றை சிதைக்கவே உருவாக்கப்பட்டன. இதில் கிறிஸ்துவ மிசனறிகள் முன்னின்று செயற்பட்டன.
இது பற்றி ஆவண நிகழ்ச்சி பிரதி புதன் தோறும் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பில் நடைபெறுகின்றது. இந் நிகழ்ச்சியில் தமது குழந்தை பருவத்தில் நடந்த அவலங்களை இன்று முதியவர்களாக மாறிய இந்த மக்கள் ஒருவர் விதிவிலக்கின்றி அழுதவண்ணம் பதிவு செய்வதை நீங்கள் கேட்கலாம்.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் போலல்லாது தற்போது பெரும்பான்மையான கனடா மக்கள் இந்த அவலங்களுக்காக சேர்ந்து கண்ணீர் வடிப்பது வரவேற்புடைய விடயம். முக்கியமாக இளையோர்
இன்று நாகரீகம் அடைந்த உலகில் மனித உரிமைகளும் மனித நேயமும் வளர்சியடைந்த நிலையில் இந்த பூர்விக குடிகளுக்கு நடைபெற்ற அநியாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு ஐ.நா. சபையில் கனடிய பிரதமர் அழுத வண்ணம் மன்னிப்பு கோரிய சம்பவங்கள் நடைபெற்றது.
ஆனாலும் பூர்வீக குடிகளின் ஆணிவேர்கள், மொழிகள், கலாசாரப் பின்புலங்கள், வாழ்கை முறைகள், வாழ்நிலங்கள் அழிக்கப்பட்டே விட்டன என்பதே வரலாறு இவற்றை மீளுருவாக்கம் செய்ய முடியாத அளவற்கு அவை எங்கேயோ பின்னோக்கியும் சென்று விட்னர்.
எஞ்சியுள்ள சிலவற்றையும் ஐ.நா சபையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே அழிப்பதற்கான வடிவங்களே பூர்வீக குடி மக்களின் வாழ்நிலத்தை ஊடறுத்து அமைக்கப்படும் இந்த புதிய எரிகுழாய் திட்டமாகும். கடலைச் சார்ந்து இயற்கையை ஓட்டி வாழும் இந்த மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இந்த நிலங்களை ஊடறுத்துப் பாயும் இந்து பாரிய எரிவாயு குழாய்கள் அவர்களின் இருப்பையும் வாழ்வியலும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ள பூர்வீ குடிமக்களை மிரட்ட ஆர்.சி.எம்.பி(RCMP: Royal Canadian Mounted Police) ஐ முகாம் அமைத்து செயற்பட கனடிய ஆளும் வர்க்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது.
1990 களில் முபாகய்ய (Mobakaia) விடுதலை போராட்டத்தை அழித்தொழித்து பல பழங்குடி மக்களை கொலை செய்து சிறைப் பிடித்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான குரல் வளையை நெரித்த செய்றபாட்டை செய்தவர்கள் இந்த ஆளும் வர்கத்தின் அரசயந்திரம் ஆர்சிஎம்பி (RCMP: Royal Canadian Mounted Police) தான்.
இந்த அனுபவங்களை தமதாக்கி கொண்டிருக்கும் பூர்விக குடி மக்கள் இந்த பாரிய குழாய் அமைக்கும் விடயம் சம்மந்தாக கனடிய அரசுடன் பேசுவதாயின் முதல் நிபந்தனையாக இந்த தமது பகுதிகளில் அமைத்த முகாங்களை அகற்றச் சொல்லி இருக்கின்றனர்.
இலங்கைப் போராட்டம் மாதிரி எமது சுயநிர்ணய உரிரமயிற்காக போராடிய நாம் இன்று காணாமல் போனவர்களை விடுதலை செய்வதையும் இராணுவம் கைபற்றி இடங்களை விடுவிக்க வேண்டும் என்பதற்குள் எமது செயற்பாடுகள் சுருங்கிப் போனதை போலவே கனடாவிலும் தமது வாழ்நிலங்களை… வாழ்வு உரிமையை தக்க வைக்க போராடியவர்களை ஆர்சிஎம்பி யினர் வெளியேற வேண்டும் என்று கோரிக்கையிற்குள் சுருக்கிய செயற்பாடுகளை செய்து விட்டன உலகெங்கும் நடைபெறும் உரிமைப் போராட்டங்களை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்கள் கையாளும் தந்திரோபாயங்கள் இவை.
இதற்குள் கனடாவின் மூத்த குடியினர் தள்ளப்பட்டு அவர்களின் போராட்டம் வாழ்வாதார வாழ்விட உரிமை பாதுகாக்கப்படுமா அல்லது மேலும் சிறுமைப்படுதப்பட்டு எதிர்காலத்தில் கொலம்பஸ் இற்கு முன்பு கனடா போன்ற வட அமெரிக்க நாட்டில் மனித குலமே இருந்ததா என்று வரலாற்றை திருப்பிப் போடும் செயற்பாடுகள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
ஆனாலும் வீரம் மிக்க உறுதியான செயற்பாட்டை உடைய பூர்விக குடிமக்கள் கனடாவின் மேற்கு பகுதியில் குழாய் அழைக்கும் பகுதியில் இருந்து 5000 கிலோ மீற்றர் கிழக்காகாக உள்ள ஒன்ராறியோ மாகாணம் வரை தமது போராட்டத்தை விரிவடையச் செய்திருக்கின்றனர். கனடாவின் பிரதான பயணிகள் சரக்கு புகையிரத தட வழிப் பாதைகளை தடுத்து நடாத்தப்படும் போராட்டத்தினால் புகையிரத ஓட்டம் நிறுத்தப்பட்டு விட்டன. ஆயுதப் பலப் பிரயோகம் செய்த முடியாத அளவிற்கு சர்வதேசங்கள் எங்கும் நாம தான் உண்மையான மனித உரிமைப் பாதுகாவலர்கள் என்ற இந்த மேற்குலக ஆளும் வர்க்கம் பூர்வீக குடிகள் மீது பலப்பிரயோகத்தை பிரயோகிக்க தயங்கின்றது. இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பதுவும் பூர்வீக குடிகளின் வாழ்வாதாரப் போராட்டம் வெற்றி பெறுவதும் மனித குலத்தின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.
(இது பற்றி காணொளியைப் பார்க்க ….: https://www.youtube.com/watch?v=xA1dihXTjBU#action=share)