இம்முறையும் வருடம் தோறும் நடைபெறும் தியாகிகள் தின நிகழ்வு கனடாவில் ஜுன் 24 ம் திகதி பிப 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினருடன் இணைந்து ஈபிடிபி, ரெலோ, புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ்., சம உரிமை இயக்கம், இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தோழர் ஆனந்தனின் நெறிப்படுத்தலுடன் பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யின் தோழர்களின் கூட்டுழைப்புடன் தோழர் ஜேம்ஸ் இன் தலைமையுடன் ஆரம்பமானது நிகழ்வு. மனித குல விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்துப் போராளிகள் பொதுமக்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்ப மான நிகழ்வு தோழர் பிரதாப்பின் நன்றியறிவிப்புடன் முடிவுற்றது.
தோழர் ஜேம்ஸ் தனது வரவேற்பு தலமையுரையில் ஈழவிடுதலைப் போராட்டம் இரண்டு பிரதான ஓட்டங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. ஒன்று பன்முகப்படுதப்பட்ட தலமையை நிராகரித்து ஏகபோகத் தலமையுடன் கூடிய பேச்சுவார்தை மூலம் தீர்வு என்பதில் அதிக நாட்டம் நம்பிகையற்ற இராஜதந்திரமற்ற போக்கு. மற்றயைது பன்முகப்படுத்தப்பட்ட தலமையை ஏற்றுக் கொண்டு ஐக்கிய முன்னணியினூடான செயற்பாடுகளைக் கொண்டு தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை மூலமும் அரசியல் தீர்வை எட்டுதல் என்ற இராஜதந்திர செயற்பாட்டையுடைய போக்கு என இன்னொரு ஓட்டத்தையும் கொண்டிருந்து.
இதில் முதலாவது போக்கு ஆளுமை பெற்று பாசிசமாக வலுப்பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டம் 2009 ஆண்டு மே மாதம் தனது வலுவை இழந்து இல்லாமல் போய்விட்டது என்றார். மறு புறத்து இராமநாதன் காலத்தில் இருந்து இன்றுவரை பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றும் உசுப்பேத்தும் பேச்சுக்களை ஒவ்வொரு காலத்திலும் இருக்கும் நிலமைக்கேற்ப கோஸங்களைப் போட்டு இன்று ‘தேசியம்’ என்று பேரினவாதத்திற்கு எதிராக குறும் தேசியவாதத்தை தமது மூலதனமாக்கி மக்கள் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் நிலமைகள் தொடர்ந்து வருகின்றன. இதில் சில விதிவிலக்கான தலைவர்கள் உருவானதும் மறுக்க முடியாததுதான்.
போர் முடிவுற்று 7 வருடங்கள் கடந்துவிட்ட நிலமையிலும் போரினால் ஏற்பட்ட அனர்த்தங்களிலிருந்து மக்கள் இன்னமும் முழுமையாக விடுபட்டு தமது இயல்பான வாழ்விற்குள் செல்ல முடியாத அவநிலையில் இருக்கின்றனர். மக்களின் விடுதலைக்கான இப்போராட்டத்திற்கான தலைவர்கள் இன்றிருந்தால் இன்றைய நிலமையில் என்னமாதிரியான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் இந்த தியாகிகள் தினத்தில் கருத்துரை வழங்குபவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் சிறப்பு தலையங்கங்களாக ‘பத்மநாபாவின் போராட்ட வாழ்வுப் பக்கங்கள்….’ என்பதனை பிரதான கருப் பொருளாக கொண்டு பேசுமாறு அழைக்கப்பட்ட தோழர் சேகர் தோழர் நாபா தான் வாழும் பிரதேச மக்களின் விடுதலைக்காக எப்போதும் ஈழவிடுதலைக்கு அப்பாலும் செயற்பட்டார் என்று இந்தியஇ பாலஸ்தீன மலையக போன்ற இடங்களில் அவரின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துரைத்தார் கூடவே தோழர் நாபா பற்றி கவிதை ஒன்றையும் முன்வைத்தார்.
அடுத்து தோழர் மோகன் அவருக்கு வழங்கப்பட்ட பேரினவாத்திற்கு எதிரான சிறுபான்மையினரின் போராட்டம் எவ்வாறு பேரினவாதமான எமக்குள் மாற்றம் பெற்றது என்ற பொருள்பட பேசினார். பேரினவாதத்தை எதிர் கொள்ள சிறுபான்மையினராகிய நாம் குறும் தேசியவாதத்தை முன்வைத்து செயற்பட்ட செயற்பாடானது இந்தப் போராட்டம் தான் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியாததற்கான பிரதான காரணி என்று தனது கருத்திற்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை முன்வைத்து தனது பேச்சை நிகழ்த்தியிருந்தார். மேலும் எமது போராட்டத்திற்கான ஆதரவை தமிழ்நாட்டில் ஆரம்பித்து இந்தியா சர்வதேசம் ஐநா சபையென்று மாறி மhறி சென்றாலும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டி சிங்கள் மக்களிடம் இதற்கான ஆதரவை நாம் திரட்டவில்லை என்பது இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை தீர்க்கப்படாமையிற்கான தந்திரோபாயத் தவறு என்பதையும் வலியுறுத்தினார்.
இவரைத் தொடர்ந்து சம உரிமை இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் தோழர் மார்க் பிரித்தானியர் உருவாக்கிய பிரித்தாளும் செயற்பாட்டடை நாம் தொடர்ந்தும் காவிச் சென்று எமது போராட்டத்திலும் இதனைத் தொடர்ந்தது ஆயுதப் போராட்டத்தின் தோல்விற்கான காரணியாக அமைந்தது என்றார். 1965 களில் சாதி ஒடுக்குமுறைக் கெதிரான போராட்டத்தின் போது இடதுசாரிகள் மொழியில் சார்ந்த உரிமைப் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமைக்கு காரணம் சாதிய முறைக் கெதிரான போராட்டம் வர்க்கப் போராட்டதை கூர்மையடையச் செய்யும் மாறாக மொழியில் போராட்டம் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கும் என்பதினால் என்று இடதுசாரிகளின் வரலாற்றை எடுத்தியம்பினார்.
தொடர்ந்து பேசிய தோழர் தவபாலன் மாஸ்ரர் தீவுப்பகுதியல் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் வெகுஜன அமைப்பு தோழராக செயற்பட்டு புலிகளால் பின்னாளில் கொலை செய்யப்பட்ட தோழர் சன்னதியின் மக்கள் மத்தியலான அரசியல் வேலைப்பாடுகளின் அடிப்படையில் தான் கண்ட மகத்தான போராளி சன்னதி என புகழாரம் சூட்டினார். யாழ் மேலாதிக்க சிந்தனையே தோழர் சன்னதி போன்றவரின் கொலையிற்கான அடிப்படைக்காரணமாக இருந்தது. இந்த யாழ் மேலாதிக்கவாதம் இருக்கும் வரைக்கு எமக்கு விடுதலை கிடைக்கப் போவதில்லை என்று தனது கருத்துரையில் மேலும் தெரிவித்தார்.
‘ஈழத்து தமிழ் இலக்கியவாதிகள் பாசிசத்திற்கு ஆதராவாக அல்லது எதிராகவா தமது எழுத்துக்களை மேற்கொண்டனர்’ என்ற தலைப்பில் பேசிய தோழர் ஜீவா தான் பயணித்து வந்த பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஈழத்து தமிழ் படையிலக்கியவாதிகள் பாசித்திற்கு ஆதரவான செயற்பாடுகளையே பெரும்பான்மையாக கொண்டிருந்தனர். அது எழுத்து துறைக்கு அப்பால் நாடகம் வானொலி என்ற பல்வேறு தளங்களிலும் புலிகளின் பிரசன்ன காலத்திலும் பிரசன்னம் அற்ற தற்போதைய காலத்திலும் தொடர்வதாக ஆதாரங்களுடன் தனது கருத்தை பதிவு செய்தார். புலிகளின் பாசிச் போக்கையோ பிழையான அரசியல் செயற்பாட்டையோ இதுவரை இவர்கள் விமர்சிக்க தயார் நிலையில் இல்லை என்பதை இன்று படைபிலங்கியங்களில் கோலோச்சும் பலரையும் முன் உதாரணங்களாக காட்டிச் தமது பேச்சிற்கு வலு சேர்த்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய தோழர் மகேஸ் ‘ஈழவிடுதலைப் போராட்டமும் பொருளாதாரமும்’ என்ற தலைப்பின் கீழ் யாழ்பாணத்து நீர் ஆதாரம் உரிய முறையில் பேணப்படாமல் இருக்கும் பாரிய ஆபத்துபற்றி விழிப்பு யாரிடமும் இல்லை என்றார். இன்னும் சில பத்து ஆண்டுகளில் யாழ்பாணம் வரண்ட பிரதேசமாக மாறும் நிலமை ஏற்பட்டுவிடும் சாத்தியங்கள் தொடர்வதாக எச்சரிகை செய்தார். தோழர் தேவானந்தா மக்களுக்கு சேவை செய்த அளவில் ஒரு சிறு துளியை ஏனும் தற்போதைய வடமாகாண சபை செய்யவில்லை என்பதை தனது கருத்தில் வலியுறுத்தியதை கூட்டத்திற்கு தலமைதாங்கிய தோழர் ஜேம்ஸ் உதாரணங்களுடன் ஏற்புடைசெய்து மகேஷ் இன் பேச்சிற்கு வலுச் சேர்த்தார்.
தோழர் மித்திரன் உண்மையான ஐக்கிய முன்னணியிற்காக செயற்படும் இன்றைய தேவைகளையும் இதற்காக தோழர் நாபாவை தொடர்ந்து இன்று தோழர் தேவா செயற்பட்டு வருவதையும் குறிபிட்டார். இதில் எதிரி யார்? நண்பன் யார்? என்பதை இனம் காண்பதில் நாம் சரியாக செயற்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இறுதியாக தோழர் வளவன் தனது பேச்சைத் தொடர்ந்தார் தோழர் நாபா இன்றிருந்தால் பிரபாகரனும் இன்று இருந்திருப்பார் என்று ஆரம்பித்து ஒட்டுமொத்த இலங்கையின் புரட்சிக்கான முன்நிபந்தனையாகவே அவர் ஈழவிடுதலைப் போராட்டதை செய்தார் என்றார். இலங்கையின் புரட்சிக்கு முயன்றார் என்ற இலங்கை அரசால் குற்றச்சாட்டப்பட்ட இராஜதுரோக குற்றச்சாட்டில் இருந்து பொது மன்னிப்பு வழங்க வேண்டுமாயின் மன்னிப்பு கோரவேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கையை தனது மரணம் வரை கைவிடாத உண்மையான சரணடையாத போராளி தோழர் நாபா ஒருவரே என்று கூறினார். தமிழ் மக்களின் உரிமையையுடன் கூடவே முஸ்லீம் மக்கள் மலையக மக்கள் சிங்கள் மக்கள் என்று அனைவரது உரிமைகளையும் வென்றெடுப்பதற்குரிய ஐக்கிய முன்னணி செயற்பாட்டை சகல தரப்பினருடனும் இணைந்து முன்னெடுக்கும் போராளிளாகவே இனறு தனது அரசியல் செயற்பாட்டை தோழர் நாபா உயிருடன் இன்று இருந்திருந்தால் தொடர்ந்திருப்பார் என்றும் கூறினார்.