இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே இதனை நிர்வகித்தும் வந்தது.
இருப்பினும், 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றின் படி, தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனை மீண்டும், நகர சபையின் பராமரிப்பின் கீழ் வழங்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படாத நிலையில், அங்குள்ள பௌத்த விகாரைப் பகுதியில், தொல்லியல் திணைக்களத்தால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த மே மாதத்தில், மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கன்னியாவுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர். அப்போது, வில்கம் விகாரையின் விகாராதிபதிக்கும் காணிக்கு உரிமம் கோருபவர்களில் ஒருவரான கோகிலரமணி என்பவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்திருந்த மாவட்டச் செயலாளர், தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளைத் தொடருமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மே மாதம் 14ஆம் திகதி, திருகோணமலைக்கு வருகை தந்திருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், தொல்பொருள் திணைக்களத்தினர் தங்களுடையது என்று கூறுகிற இடத்தில், யாரும் எந்த வழிபாட்டுத்தலத்தையும் அமைக்கத் தேவையில்லை. அதன் அருகில் வேறு இடத்தில் பிள்ளையார், சிவன் கோவில்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், விகாரை அமைப்பதற்கான வேலைகள் நிறுத்தப்படவில்லை. அவரது தீவிர நடவடிக்கை எதுவும் இதுவரை நடைபெற்றிருக்கவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவ மரபின்படி, இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகை தீர்த்தம், குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாகக் காலம்காலமான இந்த இடம் புகழ்பெற்றிருந்து வருகின்றது.
1889ஆம் ஆண்டளவில் வே. அகிலேசபிள்ளையால் எழுதப்பட்டு, 1950ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல், ‘திருகோணாசல வைபவம்’ ஆகும். ‘தஷ்ணகைலாய புராணம்’, ‘திருகோணமலை புராணம்’, ‘திருக்கரசைப் புராணம்’, ‘கம்பசாத்திரம்’, ‘பெரியவளமைப் பந்ததி’, ‘கோணேசர் கல்வெட்டு’ போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து, அவற்றிலுள்ள வரலாற்றுப் பெருமைகளையும் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் சகலரும் அறியவேண்டும் என்ற உயரிய நோக்கில், உரைநடை வடிவில் ‘திருகோணாசல வைபவம்’ என்ற நூலை, அகிலேசபிள்ளை அவர்கள் ஆக்கித் தந்திருக்கிறார். இதில், ‘திருகோணாசல வைபவம்’ என்ற இந்த நூலில், கன்னியா வெந்நீரூற்றுடன் இராவணன் தொடர்புபட்ட வகையையும் தொடர்ந்துவந்த அதன் வரலாற்றையும் பக்திச் சுவையுடன் விவரித்து இருக்கிறார்.
அந்தவகையில், அந்தியேட்டி நிகழ்வு நிகழ்ந்ததையும் இந்த வழமை அப்பகுதி மக்களின் நீண்டகாலப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் ஆதாரப்படுத்துகிறது. இது, கன்னியா வெந்நீரூற்றும் அங்குள்ள கோவில்களின் வரலாறும் ஒட்டுமொத்த தமிழின இருப்புக்கும் அவசியமானது என்பதை நியாயப்படுத்துவதற்குப் போதுமானது.
கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள பிரதேசத்தில், அமைந்திருந்த எட்டு ஏக்கரும் 22 பேர்ச்சும் கொண்ட காணிக்கான உரிமம் தொடர்பில், கடந்த 2002ஆம் ஆண்டு அங்கிருந்த பிள்ளையார் கோவிலை உடைத்து, புதிதாக அமைக்க ஆரம்பித்த போது, வெல்கம் விகாரையின் விகாராதிபதியால் வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்தப் புராதான இடத்தை டோசர் மூலம் உடைக்க முயன்றதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு வருடங்களாக நடைபெற்ற வழக்கு, வெல்கம் விகாராதிபதி தொடர்ந்து வருகை தராமையால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், அப்பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகை இடப்பட்டது. ஒரு காணியை அரசாங்கம் சுவீகரிப்பதாக இருந்தால், அதற்கான அறிவித்தல் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தரப்பட வேண்டும் என்பது காணி உரிமையாளரது வாதமாக இருக்கிறது.
1985ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கோவிலாக, பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில், இப்பொழுது பௌத்த விகாரை அமைக்கப்படுவதற்கு தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற அதே வேளையில், அங்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16) பௌர்ணமி தினத்தன்று இந்து மக்கள் வழிபாடுகளுக்காகச் சென்ற வேளை, வழிபாடு நடத்துவதற்குக் கோவில் வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டதுடன் தென்கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் மீது கொதிநீர் ஊற்றி பெரும்பான்மையினக் காடையர்கள் வெறியாட்டமும் ஆடியிருந்தார்கள். இத்தகைய தான்தோன்றித்தனமானதும் எந்தவகையிலும் நியாயப்படுத்திக் கொள்ளமுடியாததுமான எதேச்சதிகாரச் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடைய பூர்வீக பிரதேசங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் பெயர்ப்பலகையுடன் சுவீகரிக்கப்படுவதையும் தமிழ் மக்கள் மனம் வெதும்பிய நிலையில் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள்.
மே மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், “வரலாற்றுப் பெருமை மிக்க இராவணன் என்ற அரசன் தன்னுடைய தாயின் இறுதிக்கிரியைகளுக்காகக் கட்டுவிக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்றில் இருந்த சிவன் ஆலயம், ஏற்கெனவே இடிக்கப்பட்டிருக்கிறது; பிள்ளையார் ஆலயம் அடியோடு இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றிருக்கின்றன. இவை இந்த நாட்டில் என்ன நியாயம், என்ன ஜனநாயகம், அவசரகாலச் சட்டத்துக்கு வாக்களித்துவிட்டு, நாங்களே சொந்தக் காசில் சூனியம் செய்தவர்களாக, எங்கள் தலைகளில் நாங்களே மண்ணள்ளிப் போடுகிற மனிதர்களாக மாறுகின்ற ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, ஓர் அபாயகரமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்று உரையாற்றியிருந்தார். ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.
“கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழின இருப்புக்கும் மிக அவசியமானது” எனத் தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்துள்ளார்.
ஓர் இனத்தின் அடையாளமும் இருப்பும் அவர்களுடைய வழிபாட்டு முறைகளும் சமயம், பண்பாடு போன்றவற்றாலேயே வரையறுக்கப்படுகின்றன; போற்றப்படுகின்றன. இருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் காரணமாக, உருவாகின்ற முரண்பாடுகள், அவற்றின் மீது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்துகின்றன.
இலங்கையில் பௌத்தர்கள் பல இடங்களில் வாழ்ந்தார்கள் என்பது வரலாறுதான். ஆனால், அவர்கள் அனைவரும் சிங்களவர்கள் அல்ல என்பதுதான் உண்மை. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதில், அல்லது அதை மறுப்பதில், பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுகின்ற விடாப்பிடியான அதிதீவிரத் தன்மைதான் அதிக பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பிரசித்தமான இடங்களுமே பௌத்தர்களுக்குரியன என்ற போர்வையில் நடைபெறுகின்ற முயற்சிகள், மேலும் மேலும் அடக்குமுறைகளுக்குள் தமிழர்களைத் தள்ளிவிடுவதாகவே இருக்கும். இது மிகவும் அபாயகரமானதாகவும் கொடூரமானதாகவும் உருப்பெறும்.
இலங்கையின் வரலாறானது, ஒருதலைப்பட்சமாகச் சிங்களவர்களால் மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றால் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுகின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பல வரலாற்றுத் தவறுகள், வரலாற்றுத் திரிபுகள், வரலாற்றுக் கொச்சைப்படுத்தல்கள் அடங்கியுள்ளன என்ற தமிழர்களின் குற்றச்சாட்டுகள் எவையும் துளிகூடக் கணக்கெடுக்கப்படாமல் முன்னெடுக்கப்படுகின்றன. வரலாற்றியலை திரிபுபடுத்துகின்ற செயற்பாடானது, முழுக்க முழுக்க தமிழர்களுக்கெதிரானதாக, தமிழர்களின் வரலாற்றை அற்றுப்போகச் செய்வதாகவே இருக்கின்றன.
சிங்கள-பௌத்த மயமாக்கலில் சைவக்கோவில்கள் அபகரிக்கப்படுகின்றன; தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் சுவீகரிக்கப்படுகின்றன; வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மிகப் பாரிய அளவில், மிக வேகமாகவும் வீரியமாகவும் சிங்கள பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதற்கான எதிர்வினை, நேர்மறையான, கூட்டுத் தந்திரோபாயத்துடன் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் தரப்புகளாலோ, தமிழ் சிவில் சமூக அமைப்புகளாலோ முன்னெடுக்கப்படுவதில்லை என்பதுதான், இப்போது எழுகின்ற பெரும் குற்றச்சாட்டுகளாகும்.
வெறுமனே மக்களால் மாத்திரம் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில் முழுமையான பயன் கிடைத்துவிடப் போவதில்லை. அதனால்தான், அரசியல் பலமும் முழுமையாகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. சட்டங்களுக்குள் திருத்தங்கள், அனுசரிப்புகள் ஏற்படாத வரையில், கன்னியா மாத்திரமல்ல சர்ச்சையாக இன்னமும் பலவும் உருவாகும். இவை தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்படுமா?