பா.ரஞ்சித் தொடங்கி மாரி செல்வராஜ், வெற்றிமாறன் என்று தொடரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இந்த வகைப் படங்களை ‘தலித் சினிமா’ என்று வகைப்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. ஆனால், இலக்கியத்தில் ‘தலித் இலக்கியம்’ என்று பேசிப் பார்த்த அனுபவத்தில், ‘தலித் சினிமா’ என்றொரு வகைப்பாடு இருக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. சினிமா, சினிமாதானே!
பொதுவாக, சாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளை கலை வடிவில் சொல்ல முற்படுகையில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இலக்கியம், ஓவியம், இசை, நாடகம் என்று எல்லாக் கலை வடிவங்களுக்கும் இந்தச் சிக்கல் உண்டு. இப்போது சினிமாவின் முறை. ‘கபாலி’, ‘காலா’ தொடங்கி ‘அசுரன்’ தந்த அனுபவத்தில், தமிழ் சினிமா தனது திரைமொழியைப் பரிசீலினைக்கு உட்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், சாதியச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் சினிமாக்களை ஏற்கெனவே பழகிவைத்திருக்கும் காட்சி மொழியில் சொல்லிவிட முடியாது.
அடிப்படையான சிக்கல்
ஒரு தலித்தின் கதையைச் சொல்ல முயலும் ஒவ்வொரு முறையும் சினிமாவில் நீங்கள் சந்திக்கும் முதல் சிக்கல் – அந்த நாயகன் எப்படிப்பட்டவன் என்பதுதான். ஏனெனில், ஒடுக்கப்பட்டவன் குறித்து ஒரு சித்திரம் இங்கே புராணம் தொடங்கி சினிமா வரைக்கும் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது.
ராவணன், கர்ணன், ஏகலைவன், காளி (முள்ளும் மலரும்), பாரதி (பாரதி கண்ணம்மா) என்று வரிசையாக யோசித்துப்பாருங்கள். இந்தக் கற்பனைகளுக்குள் ஒரு ஒற்றுமையை உங்களால் உணர முடிகிறதா? இவர்களெல்லாம் முரடர்கள், அதேநேரம் வெகுளியும்கூட. சூழ்நிலைக் கைதிகள் என்று சொல்லலாமா?
இந்தக் கற்பனை இன்றைக்கு உங்களுக்கு உதவுவதில்லை. ஏனென்றால், உங்களுடைய ஒடுக்கப்பட்டவன் வெகுளிதான், முரடன்தான்; ஆனால், அரசியலும் தெரிந்தவன். அந்த அரசியல், சாதியால் ஒடுக்கப்பட்ட அத்தனை பேரின் நலன்களையும் இணைக்கிற அரசியலாக இருக்கிறது.
இப்போதுதான் அந்த நாயகனின் குணநலன்களை வடிவமைப்பதில் உங்களுக்குச் சிக்கல் வர ஆரம்பிக்கிறது. ஒடுக்கப்பட்ட நாயகன், நம்மிடம் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் சாகச வீர புருஷன் இல்லை. ஏனெனில், அவன் கலை வடிவங்கள் நிர்ப்பந்திக்கும் ஒற்றைப் பிரதிநிதிதானே தவிர ஆபத்பாந்தவன் இல்லை. இதனால்தான், எம்ஜிஆர் அல்லது ரஜினி வகை கதாநாயக பிம்பம் ஒடுக்கப்பட்ட நாயகனாக முடியாமல்போகிறது.
ஒரு தலித்தை நாயகனாக முன்னிறுத்துவதில் உள்ள அடிப்படையான சிக்கல் இது. ஏனெனில், அவன் விடுதலை அரசியலால் வடிவமைக்கப்பட்டவன் என்பதால் அவதார பிம்பத்துக்குள் அடைபட மாட்டேன் என்கிறான். உதாரணமாக, ‘அசுரன்’ திரைப்படத்தில் வடக்கூரானை வெட்டுவதற்காக சிறுவன் முயல்கையில், அவனது தந்தை மின்சாரத்தைத் தடைசெய்யும் காட்சியை நினைத்துப்பாருங்கள்.
தனுஷ் மிகச் சாதுர்யமாக, மின்னல்போல யோசித்து சாகசம் செய்யும் காட்சி உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? ஆனால், இதே காட்சியை வெக்கையில் பூமணி இப்படி எழுதுகிறார் – “…சேவுக்கடைக்கு எதிர்ல போனா காரியம் கெட்ரும்னு சத்தரத்து மறவுல நின்னுக்கிட்டேன். வெளிச்சம் வேற மனசுல உறுத்துச்சு. ஒண்ணும் ஓடல. டிரான்ஸ்பாரத்துப் பக்கம் போயி தட்டுத்தடுமாறி பீஸப் புடுங்குறதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு.”
அரசியல் படங்களின் முதல் வேலை
இதுதான் யதார்த்தம். இதைத்தான் இலக்கிய மொழி என்றும் சொல்கிறோம். திரைமொழி கற்றுக்கொள்ள வேண்டியதும் இதைத்தான். அதற்குப் பெருந்தடையாக இருப்பது அதன் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட நாயக பிம்பங்கள். அதை மீறுவதுதான் அரசியல் படங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. ரஜினி, தனுஷ் போன்றவர்களை வைத்துக்கொண்டு இதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
அடுத்த சிக்கல், ஒடுக்கப்பட்ட அரசியல் கதைகளில் இடம்பெறும் வன்முறையை எவ்வாறு காட்சிப்படுத்துவது? வன்முறையைக் காட்சிப்படுத்துவதற்கும் தமிழ்த் திரைப்படங்கள் சில வாய்ப்பாடுகளை வைத்திருக்கின்றன. சண்டைக்காட்சி என்பது இதற்குப் பெயர். ஒரு சாகசக் கலையைப் போல சிங்காரிக்கப்பட்டிருப்பது அது. வழக்கமான தமிழ்த் திரைப்படங்கள் அவதாரக் கதைகளையே சொல்லிக்கொண்டிருப்பதால், அதில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் அந்த அவதாரங்களின் சகலகலா வல்லமையைப் பறைசாற்றுவதுபோலவே திட்டமிடப்படுகின்றன. இது வன்முறையைக் கொண்டாடும் ஒரு மலினமான செயல்பாடு. இந்த வழிமுறை, ஒடுக்கப்பட்ட அரசியல் படங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ஏன்? ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல; அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம். அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை. அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். ‘வெக்கை’ நாவல் முழுக்க, அந்தச் சிறுவன் தான் பிரயோகிக்க நினைத்த வன்முறை தவறாகப்போனதே என்று குமைந்துகொண்டே இருக்கிறான். அவன் எதிரியின் வலது கையைத் துண்டித்து, ஒற்றைக் கையுடன் நடமாடுவதைப் பார்க்க விரும்பியவன்.
ஆனால், தவறுதலாக எதிரி இறந்துபோனதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இரக்கப்படுகின்றான் என்று தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். தான் வழங்க விரும்பிய தண்டனையை அனுபவிக்காமல் எதிரி இறந்துபோனானே என்பதுதான் அவனுடைய வருத்தம். இதுதான் ஒரு இலக்கியப் பிரதி ஏற்படுத்தும் சவால். சிறுவனின் இந்த மனநிலையைச் சித்தரிக்கும் திரைமொழி தமிழ் சினிமாவில் இருக்கிறதா என்று கலைஞர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரைக்கலைஞர்கள் தீர்வு சொல்வதைப் போல இப்போது சாதிப் பிரச்சினைக்கும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தீர்வு, வழக்கம்போல, ஒடுக்குகிற சாதியை அழித்துவிடுவது என்று வெளிப்படும்போதுதான் அவர்களது அறியாமை சந்திசிரிக்கிறது. சாதியக் கொடுமைகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் சினிமாக்களில் செய்வதுபோல ரசித்து ருசித்து செய்யப்படுவதல்ல.
ஒவ்வொரு விஷயமும் அரசியல்தான்
அடுத்த சிக்கல், நீதி போதனை வழங்க விரும்பும் பாரம்பரிய தமிழ் சினிமா மொழி. ஒடுக்கப்பட்டவனை நாயகனாக முன்னெடுப்பதே ஒரு அரசியல் நடவடிக்கை என்றான பின்பு, அந்தப் படத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமும் அரசியல்தான், போதனைதான் என்பதைப் படம் எடுப்பவர்கள் உணர வேண்டும். போதனைகளைப் பூடகமாகவே செய்து பழகியிருக்கிறது கலை. அதனால், என்றைக்குமே தீர்வுகளைச் சொல்ல முடிவது இல்லை.
சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்தும் சினிமாக்கள் சாதிப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லிவிட முடியுமா என்றால், நிச்சயமாய் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். பின், கலை என்னதான் செய்ய முடியும்? அது யாரை நோக்கி என்னதான் பேச விரும்புகிறது என்ற கேள்வி எழலாம்.
மிகவும் சிக்கலான சாதி போன்ற பிரச்சினைகளை, எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல், பழக்கதோஷத்தால் செய்துகொண்டிருக்கும் வெகுஜனங்களை நோக்கியே ஒரு கலை வடிவம் பேச விரும்புகிறது. அவர்கள் தான்தோன்றித்தனமாய் மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் செய்துகொண்டிருக்கும் அநாகரீகங்களின் கீழ்மையை அது அவர்களுக்கு உணர்த்த முடியும். அவ்வழக்கங்களின் காரணமாக ஒரு பகுதி மக்கள் எத்தனை தூரம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட முடியும். இவ்வளவுதான் கலையின் பங்கு. ஆனால், இது நடந்தாலே பெரிய விஷயம்!
- டி.தருமராஜ், காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர், ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.