கர்நாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கு எதிராக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து, கூட்டணி அரசாங்கம் வீட்டுக்குப் போயிருக்கிறது. இந்த ஒட்டு மொத்தக் குழப்பங்களுக்கும் அடிப்படையான காரணம், 15 க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள், குமாரசாமிக்கு எதிராகக் குரல் எழுப்பி, இராஜினாமாக் கடிதம் கொடுத்ததன் விளைவுதான்.
கட்சித் தாவல் ஆட்சிகளைக் கவிழ்க்கும் என்ற நிலை மாறி, இராஜினாமாக்களே ஆட்சிகளைக் கவிழ்த்து விடும் என்ற புதிய சித்தாந்தம், கர்நாடக மாநிலத்துக்கு மட்டுமே பிரத்தியேகமானது.
ஆகவே, இராஜினாமாச் செய்வதும், ஆட்சியைக் கவிழ்த்து விடும் என்பதற்கு கர்நாடகம் உதாரணமாக அமைந்து, தற்போது கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் கட்சி தாவுவதால், ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 1985இல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் மீதான சர்ச்சை, இன்னமும் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், சட்டமன்றம் என்று எங்கும் முடிவு பெற்றதாகத் தெரியவில்லை.
அனைத்து மட்டத்திலும், விவாதப் பொருளாக மாறியிருக்கும் ஒரு சட்டம் இருக்கிறது என்றால், அது கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை. கட்சித் தாவல் என்பது, இந்தியாவுக்குப் புதிதல்ல. 1967 முதல் 1972 வரையிலான காலகட்டத்தில் இருந்த, நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி தாவல் பிரச்சினைகளில் சிக்கியவர்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஐந்து நாள் அமைச்சராக இருப்பதற்காக, ஐந்து முறை கட்சி தாவிய காட்சிகள் எல்லாம் அரங்கேறியது. இதனால் உள்துறை அமைச்சராக இருந்த ஓ.பி. சவான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையில், 1985இல் 52 ஆவது அரசமைப்புத் திருத்தமாகப் பத்தாவது அட்டவணை என்று சேர்க்கப்பட்டதுதான், இந்தக் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம்.
ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களோ, எம்.பிக்களோ மூன்றில் ஒரு பங்கினர் கட்சி தாவினாலும், மூன்றில் இரண்டு பங்கு கட்சி தாவினாலும் தங்கள் பதவிகளை இழக்க மாட்டார்கள் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால், காலப் போக்கில் மூன்றில் ஒரு பங்கு என்பது மிகக்குறைவான எண்ணிக்கை என்று உணர்ந்தார்கள்.
குறிப்பாக, பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சியிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பது சுலபம் என்ற நிலை ஏற்பட்டு, கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் வந்த பிறகும், ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறின.
இது போன்ற சூழலில், ஓர் எம்.பி எதிராக வாக்களித்ததால், பிரதமராக இருந்த வாஜ்பாய், ஆட்சியை இழந்தார். அது மட்டுமின்றி, அமைச்சர் பதவி என்ற ‘லொலிபொப்’ வழங்கி, அரசாங்கங்களைக் கவிழ்க்கும் முயற்சிகள் தங்குதடையின்றி அரங்கேறின.
இந்நிலையில், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை மேலும் திருத்தி, கட்சித் தாவலை அறவே ஒழிக்க நினைத்தார் வாஜ்பாய். ஆகவே, அவர் ஆட்சியில், அரசமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கடாசலையா தலைமையில், தேசிய அளவிலான ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2003ஆம் ஆண்டு, 91ஆவது அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திருத்தத்தின் மூலம், ஒரு கட்சியிலிருந்து தாவும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. அதேபோல், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள், கட்சித் தாவினால் தகுதியிழப்பு இல்லை என்ற பிரிவு இரத்துச் செய்யப்பட்டது.
அது மட்டுமின்றி, பத்தாவது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, தகுதியிழப்பைச் சந்திக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தகுதியிழப்பு அடைந்த திகதியிலிருந்து மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வரை, அமைச்சர் பதவி பெற முடியாது என்றும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது.
ஆகவே, ராஜீவ் காந்தியால் நிறைவேற்றி வைக்கப்பட்ட கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்துக்கு வலுச் சேர்த்து, கட்சித் தாவும் முறைக்கு, பிரியாவிடை கொடுக்க, அரசியல் சட்டத்தையே திருத்தினார் பிரதமராக இருந்த வாஜ்பாய். ஆனாலும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து ஆட்சிகளை கவிழ்க்கும் முறை இன்னும் நிற்கவில்லை.
குறிப்பாக, இராஜினாமாக்கள் கட்சி தாவலை விடக் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இப்போது, கர்நாடக மாநிலத்தில் தெரிய வந்திருக்கிறது. அந்த மாநிலத்துக்கு இது புதிதல்ல; ஏற்கெனவே, இதே எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது, ‘ஒப்பரேஷன் லோட்டஸ்’ என்று கூறி, மாற்றுக் கட்சி, சட்டமன்ற உறுப்பினர்களை இராஜினாமாச் செய்ய வைத்து, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதே ‘ஒப்பரேஷன் இராஜினாமா’ இப்போதும் தொடங்கியது. ஆனால், இந்த முறை கர்நாடக சபாநாயகராக இருக்கும் ரமேஷ், இராஜினாமாவில் புதுவித நடவடிக்கையை எடுத்திருக்கிறார். மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களின் இராஜினாமாவை நிராகரித்துள்ள அவர், மூன்று பேரையும் தகுதியிழப்புச் செய்து, “இந்தச் சட்டமன்றத்தின் ஆயுள் முடியும் வரை தேர்தலில் நிற்க முடியாது” என்று உத்தரவிட்டிருக்கிறார்.
கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, இராஜினாமாச் செய்து விட்டால், அவர் மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அதே சட்டமன்ற ஆயுள் காலத்தில் அவைக்கு வந்து விடலாம். அந்த நிலைக்கு இப்போது ஒரு தடையைப் போட்டுள்ளார் கர்நாடக மாநில சபாநாயகர்.
கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தில், இதுவரை பேரவைத் தலைவர்கள் அச்சட்டத்தை வளைப்பதற்கே முற்பட்டு நீதிமன்றங்கள் வரை வழக்குப் போயிருக்கிறது. ஆனால், இந்த முறை சட்டமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து வருடத்துக்குள் மீண்டும் போட்டியிட்டு, அவைக்கு வர முடியாது என்று போட்டிருக்கும் உத்தரவு புதுவிதமானது. இது போன்ற இராஜினாமாக்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் உத்தரவு.
இந்த உத்தரவு, சட்டத்தின் முன்பு நிற்குமா, நிற்காதா என்பது கேள்விக்குறி. ஆனால், இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில் பேரவைத் தலைவருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஓர் உறுப்பினர், தனது இராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்கலாம். ஆனால், அப்படிக் கொடுத்த கடிதம், சுயமாகக் கொடுத்ததா அல்லது வற்புறுத்திக் கொடுக்க வைக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம், சபாநாயகருக்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான், இப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை, இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று தகுதியிழப்பு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
இந்த உத்தரவில், தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு உறுதி செய்யவோ, நிராகரிக்கவோ வாய்ப்பில்லை. ஆனால், கர்நாடக சபாநாயகரின் உத்தரவு செல்லுமா என்பதை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பரிசீலிக்கலாம்.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து, பா.ஜ.கவின் சார்பில் எடியூரப்பா 105 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சரானாலும், குமாரசாமிக்கு இருப்பது போல், இவருக்கும் ‘நித்ய கண்டம் பூரண ஆயுசுதான்’ என்பதே நிலைமை.
ஏனென்றால், மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விடயத்தில், சபாநாயகர் போட்டுள்ள உத்தரவை மீதியிருக்கின்ற 13 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் விடயத்திலும் எடுத்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவியும் இல்லை; எஞ்சியிருக்கின்ற 46 மாதங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆக முடியாது என்ற நெருக்கடி உருவாகும்.
இந்த நெருக்கடி, முதலமைச்சராகும் எடியூரப்பாவுக்கும் பெரும் தலைவலியாக மாறும். 224 உறுப்பினர்கள் உள்ள கர்நாடக சட்டமன்றத்தில், 105 எதிர் 99 என்ற நிலையில் ஆட்சியைத் தொடர வேண்டிய கட்டாயம் வரும்.
அது மத்தியில் சொந்தக் கட்சி அரசாங்கம் இருப்பதால், எடியூரப்பாவுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், கர்நாடக மாநில பாரதிய ஜனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்டுக்கோப்பாக கடைசி வரை எடியூரப்பாவுக்குப் பின் நிற்பார்களா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
ஆட்சி மாறினாலும், ஸ்திரத்தன்மை இல்லாத அரசியல் சூழ்நிலை கர்நாடக மாநிலத்தில் தொடருகிறது. அதேநேரத்தில், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 34 வருடங்களுக்குப் பிறகு, வலுவாகக் கேட்கத் தொடங்கியுள்ள இந்தக் குரலுக்கு, ஏற்ற முடிவை, இந்திய நாடாளுமன்றம் எடுக்குமா? இதுதான் இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.