ஆனால், யதார்த்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவோ, ஏன் ஒட்டுமொத்த ஐ.தே.கவோ, தமிழ் மக்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை வழங்க மாட்டார்கள். சிலவேளை, அவ்வாறு விருப்பமிருந்தாலும் அதனை அவர்களால் வெளிப்படுத்தவும் முடியாது.
இதுவே, இலங்கையின் 70 ஆண்டு காலக் கறைகள் படிந்த அரசியல் வரலாறு ஆகும். ஏனெனில், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வை, ஐ.தே.க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தினால், அதுவே அவர்களுக்கான சாவு மணி ஆகும். அதாவது, ‘தடியைக் கொடுத்து அடி வாங்கியதற்குச் சமம்’ ஆகும்.
அவ்வாறு நடந்தால், “தமிழ் மக்களுக்கு ஈழம் வழங்க உள்ளார்கள்; தனி நாடு வழங்க உள்ளார்கள்; அன்று புலிகளது ஆயுதங்களால் ஆற்ற முடியாததை, இன்று கூட்டமைப்புப் பெற்றுக் கொள்ள உள்ளது” என விசம் கலந்து, எதிர்த்தரப்பால் சிங்கள மக்களுக்குப் பொருள் மாற்றி ஊட்டப்படும்.
இதனால், ஐ.தே.க நம்பி உள்ள கணிசமான பௌத்த சிங்களப் பெரும்பாண்மை வாக்குகளை இழக்க நேரிடும். விளக்கைப் பிடித்துக் கொண்டு, கிணற்றில் வீழ்ந்த கதையாக, ஐ.தே.கவுக்கு அமையும். இது ஐ.தே.கவுக்கு என அல்ல; மாறாக, பொதுஐன பெரமுனவுக்கும் ஏற்புடையதே.
இதிலிருந்து இலகுவாக விளங்கிக் கொள்வது யாதெனில், பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த வேண்டுமெனின், சிறுபான்மைத் தமிழ் மக்களை, அவர்களது நியாயமான கோரிக்கைகளை அதிருப்திக்கும் அவதிக்கும் உள்ளாக்க வேண்டும் என்பதாகும்.
தற்போது தேர்தல்க் காலம்; ஜனாதிபதி வேட்பாளர்கள், தங்களது பரப்புரைகளில், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்; வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்; நாட்டைச் சுபீட்சமாக்குவோம் எனப் பொதுவான வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள்.
மாறாக, இனப்பிரச்சினையே எமது நாட்டின் மூலப்பிரச்சினை. அதை முதலில் நாம் எல்லோரும் கூடி, ஒற்றுமையாகத் தீர்ப்போம்; அது தீர்க்கப்பட்டால், ஏனைய பிரச்சினைகள் தானாகவே தீர்ந்து விடும் என, எவரும் வெளிப்படையாகவும் விருப்பத்துடனும் தெரிவித்ததாகத் தெரியவில்லை; தெரிவிக்கவும் மாட்டார்கள்.
இனப்பிரச்சினை ஏதோ, தமிழ் மக்களுக்கு மட்டுமே சொந்தமான பிரச்சினை போலவும் 2009 போர் நிறைவு பெற்றதன் பின்னர், அதுவும் தீர்க்கப்பட்டு, இலங்கை அனைத்திலும் தன்நிறைவு பெற்ற நாடு போலவுமே, சிங்கள மக்களுக்குக் காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
நிலைமைகள் இவ்வாறிருக்க, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் 25 இலட்சம் இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் எனவும் அவர்களில் கணிசமானோர், நாட்டுக்கு மீள வரமாட்டார்கள் எனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறி உள்ளார்.
பத்து ஆண்டுகளில் 25 இலட்சமெனின், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக இரண்டரை இலட்சம் எனவும் தினசரி 694 இளைஞர்கள் எனவும் இவ்வாறு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருப்பதாவது, நாடு எத்திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை ஊகிக்கவேண்டி இருப்பதாகவும் தெரித்திருக்கின்றார்.
அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞர் படை, போர் ஓய்ந்த வேளையில் இருந்து, ஓயாது புலம்பெயர்ந்து கொண்டு இருக்கின்றது; வீழ்ந்து போய்க் கிடக்கின்ற நாட்டை, மீளத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்புடைய இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியேறத் துடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்; ஒவ்வொரு இளைஞனின் இலட்சியக் கனவும் வௌிநாடு செல்லதாகவே இன்று மாறி உள்ளது.
இதனைத் தமிழ் மக்களின் பார்வையிலும் சிங்கள மக்களின் பார்வையிலும் இருவிதமாக நோக்கலாம். 2009இல் போர் ஓய்ந்தாலும், தமிழ் மக்களின் மனங்கள் இன்னமும் போராடிக் கொண்டே இருக்கின்றன. போருக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, போர்க்காலக் கவலைகள், நிழல்கள் போலக் கூடவே அவர்களுடன் உயிர்வாழுகின்றன.
தாங்கள் விரும்புகின்ற அரசியல்த் தீர்வு, அமைதியானதும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அற்றதுமான, இனிய சுதந்திர வாழ்வு தங்களுக்குக் கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை ஒளிக்கீற்றுக் கூட, அற்ற தமிழ்ச் சமூகமே இன்று வடக்கு, கிழக்கு மண்ணில் சீவிக்கின்றது.
இந்நிலையில், நிரந்தரமாக வெளிநாடு செல்வதற்கு ஏதாவது சந்தர்ப்பங்கள் கிடைத்தால், ஓடித் தப்புவோம் என்றே தமிழ் மக்கள் ஏங்குகின்றார்கள்.
இந்நாட்டின் மூத்த குடி மக்களாக இருந்தாலும், இங்கு இரண்டாந்தரப் பிரஜையாக இருப்பதைக் காட்டிலும், வேற்று நாட்டில் குடியேறி முதல்த் தரப் பிரஜையாக, கௌரவமாக வாழ விரும்பும் தமிழர்களின் எண்ணம் நியாயமானதே.
குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்களின் பிரகாரம், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆகாரம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக 50 ஆயிரத்து 500 ரூபாய் தேவைப்படுகின்றது என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அண்மையில் தெரிவித்து உள்ளார்.
ஆனால், ஓர் எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, அரச நிறுவனங்களில் பணியாற்றும் பட்டதாரி அலுவலர்கள், மாதாந்த மொத்தச் சம்பளமாக சராசரியாக நாற்பது ஆயிரம் ரூபாய்க்கும் உட்பட்ட தொகையையே பெறுகின்றார்கள்.
இவ்வாறானவர்கள், தங்களது குடும்பங்களைப் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே கொண்டு நடத்துகின்றார்கள். அவர்களும் தங்களது அறிவு, ஆற்றல், அனுபவத்துக்கு ஏற்றமாதிரியாகத் தொழில்வாய்ப்புகள் வெளிநாடுகளில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், அங்கு சென்று குடியேறவே விரும்புகின்றார்கள்.
இவ்வாறாக, நாட்டை விட்டு நிரந்தரமாகப் புலம்பெயர்பவர்கள் சிறிது காலத்தின் பின்னர், தங்களது வாழ்க்கைத் துணையையும் (கணவன் அல்லது மனைவி) பிள்ளைகளையும் தாங்கள் வதியும் நாடுகளுக்கு வரவழைத்துக் கொள்கின்றார்கள்.
இந்நிலையில், இவர்களது வயது முதிர்ந்த பெற்றோர் காலப்போக்கில் கவனிக்க ஆட்களற்று, முதியோர் இல்லங்களில் தங்க வேண்டிய நிலையும் அநாதரவான நிலையில் சொந்த ஊரையும் உறவையும் பிரிந்து, ஊர் ஊராகத் திரிய வேண்டிய நிலை போன்ற சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
துயரங்களிலும் துயரமாக, வீட்டுப்பணிப் பெண்களாகப் பல்லாயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றார்கள். இவர்களது வெளியேற்றம், அவர்களது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அதேவேளை, பல்வேறு வழிகளிலும் சமூக கலாசாரச் பின்னடைவுகள் ஏற்படவும் வழி வகுக்கின்றது. தங்களது தனிப்பட்ட கனவுகளைத் துறந்து, குடும்பத்துக்காகவே சிரித்த முகத்துடன் செல்லும் இவர்களில் சிலர், மூடிய பிரேதப்பெட்டிகுள் வீடு வந்து சேர்வதும், வராது விடுவதுமாகவும் சோகங்கள் தொடர்கின்றன.
மேலும், வைத்தியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் எனக் கணிசமான துறைசார் அரச ஊழியர்கள், மாறி மாறித் தங்களது சம்பள உயர்வு தொடக்கம், ஏனைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனப் பணிப்புறக்கணிப்புகளை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் உள்ள அரச செயலகங்களுக்கு முன்பாக, வேலை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். இதைவிடப் பட்டதாரிப் பயிலுநர்களாக மாதாந்தம் 20,000 ரூபாய் கொடுப்பனவுகளுடன் நியமிக்கப்பட்ட பட்டதாரிகள், “எங்களது படிப்புக்கு இதுவா சம்பளம்; இதுவா வேலை” என உள்ளூரப் புழுங்குகின்றார்கள்.
இதைவிடக் கொழும்பு மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பகுதி, ஆர்ப்பாட்டங்களுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் ஒதுக்கப்பட்ட பிரதேசம் போல ஆகிவிட்டது. தினசரி ஏதாவது ஆர்ப்பாட்டங்களும் அடையாள உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. கொட்டகைகள் அமைத்து, கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
வரலாறு, விந்தைகள் நிறைந்த விடயம் ஆகும். அதிலிருந்து நாம், எங்கள் நாட்டின் எதிர்காலத்தை எப்படித் தீர்மானிக்க வேண்டும் எனவும், எப்படித் தீர்மானிக்கக் கூடாது எனவும் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வரலாற்றையே தீர்மானிக்கின்றவர்கள் (இளைஞர்கள்) நாட்டை விட்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
‘ஆசியாவின் ஆச்சரியம்’ எனவும் மைத்திரி ஆட்சி ‘பேண்தகு யுகம்’ எனவும் நல்லிணக்கத்துக்கு ஊடாக வளமானதும் வளமிகுந்ததுமான எதிர்காலம் எனப் போடப்பட்ட கோசங்கள், வெறும் வெற்றுக் கோசங்கள் என ஆகி விட்டன.
“புலிகளும் அவர்களது பயங்கரவாதமுமே நம்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வருகின்றன. அவர்கள் மட்டும் ஒழிந்தால் நாடு எல்லா விதத்திலும் ஒளிரும்” எனக் கூறினார்கள்; உலகமே நம்பியது.
ஆனால், புலிகள் இல்லாத பத்து ஆண்டுகள் கடந்தும் தீர்வும் இல்லை; நாட்டில் ஒளி ஏற்றவும் முடியவில்லை. அவ்வாறெனின், பிரச்சினை எங்கு உள்ளது?
(Editorial, Tamil Mirror)