இனவாத சிந்தனை கொண்ட சிலர், ஜனாஸாக்களை எரிக்கும் நடைமுறைக்கு ஆதரவான கருத்துகளை வெளியிடத் தொடங்கி இருக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒரு விவகாரமாக இருந்த இப்பிரச்சினையில், இன்று சிங்களத் தேசியமும் தனது கவனத்தைக் குவித்திருக்கின்றது. எனவே, ஜனாஸாக்களை வலிந்து எரிப்பதற்கு எதிரான, எதிர்ப்புக்காட்டல் நடவடிக்கைகளை முஸ்லிம்கள் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்குப் பின்னால் இருக்கின்ற விஞ்ஞான ரீதியான காரணங்களை விட, அரசியல், இனவாதம், மதவாதம் சார்ந்த குறுகிய மனப்பாங்குகள் அளவுக்கதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது ஓரளவுக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. இதனாலேயே, முஸ்லிம்களின் கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஏனைய இன மக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், முஸ்லிம் சமூகம் சமாந்திரமாக பலவழிகளில் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. ஜனாஸாக்களைப் பொறுப்பேற்பதில்லை என்ற ஒரு நூதனப் போராட்டத்தை, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மேற்கொண்டு வருகின்றன. இது உண்மையில், அரசாங்கம் எதிர்பார்த்திராத ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது.
அத்துடன், கொழும்பில் பச்சிளம் குழந்தையின் ஜனாஸா எரிக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில், ஆரம்பிக்கப்பட்ட வெள்ளைத் துணி கட்டும் முன்னெடுப்பும் இன்று நாடெங்கும் வியாபித்துள்ளது. முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்கள, தமிழ் மக்களும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை முக்கியமானது.
எதிரணியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத்தினரைச் சந்தித்து, இதுவிடயமாகப் பேசி வருகின்றனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குத் தடைபோடக் கூடிய கடும்போக்காளர்கள் ஓரிருவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளமை, அண்மையில் பௌத்த துறவி ஒருவர் வெளியிட்ட கருத்தில் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்தப் பின்னணியில், ஜனாஸாக்களை வலுக்கட்டாயமாக எரிக்க வேண்டாம் என்று பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
அதன் பின்னர், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரைக்கும் உடல்களைப் பாதுகாக்க முடியும் என்று தாங்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, ஜனாஸாக்களைப் பேணுவதற்கு குளிர்பதன கொள்கலன்களை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர், அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதன்படி, குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு, குளிர்பதன கொள்கலன்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.
இது உண்மையில், ஆறுதலான ஒரு விடயமாக அமைந்தது. இதை வைத்துப் பார்க்கின்ற போது, ஜனாஸா எரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளதான தோற்றப்பாடு ஏற்பட்டது. இதை, நல்ல முடிவு கிடைப்பதற்கான சமிக்கையாகவே முஸ்லிம் சமூகம் பார்த்தது. ஆயினும், அந்த நம்பிக்கை இரு நாள்களுக்குள்ளேயே வீண்போனது.
அளுத்பொத்த, களுத்துறை, கரவனல்ல உள்ளிட்ட பிரதேசங்களின் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் புறக்கணித்து, காலி, கெத்துடுகொட பிரதேசத்தில் இறந்த ஒரு முஸ்லிமின் ஜனாஸா, வலுக்கட்டாயமாக அரச செலவில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்னுமொரு கடிதத்தை வைத்தியசாலைகளுக்கு அனுப்பியிருந்தார். மேலே குறிப்பிட்ட கடிதம், தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தான் அவ்வாறு (எரிக்காமல் பாதுகாக்குமாறு) கூறவில்லை என்றும், சடலங்கள் அளவுக்கதிகமாக உள்ள வைத்தியசாலைகளுக்கு குளிர்பதன கொள்கலன்களை வழங்குமாறே கோரியிருந்தோம் என்றும் விளக்கியிருந்தார்.
ஜனாஸா எரிப்பை, அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தி, குளிர்பதன கொள்கலன்களில் பாதுகாக்கின்றது என்று எண்ணியிருந்த முஸ்லிம் சமூகம், அதன்பிறகு மேற்குறிப்பிட்ட இடங்களில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டதற்கு விசாரணை நடத்தப்படலாம் எனக் கருதியது.
ஆனால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுப்பிய கடிதத்தின் கடைசி வாக்கியமானது, எரிப்பு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொன்னது. இவ்வாறான, முரண்பட்ட செயற்பாடுகள் என்னதான் நடக்கின்றது, என்ற பெரும் குழப்பத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது.
இந்நிலையிலேயே, வெள்ளைத் துணி போராட்டத்தின் இன்னுமொரு கட்டமாக பொரளை பொதுமயானத்துக்கு முன்னால் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முஸ்லிம் எம்.பி.க்கள் பலர் இதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், உண்மையில் இவ் ஆர்ப்பாட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. அதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாத மக்களும் அரசியல் பிரதிநிநிகளும் கலந்து கொண்டமையாகும்.
வெள்ளைத் துணி சாத்வீகப் போராட்டம் என்பது, மிகவும் கனதியான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் அனுதாபம் ஏற்படுவதற்கும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கும் வழிசமைத்துள்ளது. அரசாங்கம் தமது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வருவதற்கு இது முக்கிய காரணம் எனலாம்.
ஆனால், ஒரு வெகுஜனப் போராட்டம் அரசியல்மயப்படுவது இலங்கைச் சூழலில் முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமானதல்ல. நூறுசதவீத ஜனநாயகமும் பலமான எதிர்க்கட்சியொன்றும் இருக்கின்ற நாட்டிலேயே, எதிரணியின் ஆர்ப்பாட்டங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கும்.
ஆனால், இலங்கையில் அப்படியான நிலை இல்லை. மாறாக, அரசியல், இனவாத சாயம் பூசப்பட்டு, மழுங்கடிக்கப்படும் நிலைமைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன; உருவாகலாம்.
அரசியல்வாதிகள் முன்னிற்காத விதத்தில், சிவில் சமூகம் மேற்கொள்கின்ற வெகுஜனப் போராட்டங்களே மிகச் சிறந்தவை. வெள்ளைத்துணி போராட்டம் அவ்வாறான ஒரு வெகுஜன முன்னெடுப்பாக இருந்ததாலேயே, சகோதர இன மக்களும் ஆதரவளித்தனர் என்பதை மறந்து விடலாகாது.
மக்களால் ஏற்பாடு செய்யப்படும் பேரணியில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வது நல்லதே. ஆனால், அரசியல் கட்சிகளால் அது ஏற்பாடு செய்யப்படுமாயின் அதற்கு எதிரான முகாமில் உள்ள கட்சிகள், பௌத்த கடும்போக்கு சக்திகள், ஜனாஸாக்கள் ஏட்டிக்குப் போட்டியாகப் பேரணி நடத்தும் ஆபத்து இருக்கின்றது.
ஏன், இதை வைத்து அரசாங்கம் கூட இனவாத அரசியலைச் செய்ய விரும்பினால் அதைச் செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி நடந்தால், இவ்விவகாரம் இன்னும் இடியப்பச் சிக்கலாகி விடலாம் என்பதற்கு, இலங்கை வரலாற்றில் நிறையவே படிப்பினைகள் உள்ளன.
பொரளையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், முருத்தொட்டுவே ஆனந்த தேரர், நாரம்பனவே ஆனந்த தேரர் உள்ளிட்ட சில தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகளும், ‘நினைத்தால் நாங்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம்’ என்ற தொனியில், கடும்போக்கு சக்திகள் கூறுகின்றமையும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். ஆனாலும், நிலைமைகள் இன்னும் கைமீறிப் போகவில்லை.
இவ்விவகாரத்தில், அரசாங்கத்தில் ஒரு பகுதியினர், சாதகமான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். ஜனாதிபதி இதுபற்றி எவ்விதக் கருத்துகளையும் வெளியிடாத போதிலும் பிரதமர் சாதகமான கருத்துநிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. புதிய நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, ‘கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அவர்களது மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு’ அமரபுர, ராமான்ய மகா சங்க சபைகள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன. சிலர் கடும்போக்கான நிலைப்பாடுகளை எடுத்துள்ள சூழலிலும், முக்கியமான இரு நிக்காயாக்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளமை, முஸ்லிம்களுக்கு ஓர் ஆறுதலையும் அரசாங்கத்துக்கு அழுத்தத்தையும் தந்திருக்கின்றது. அரசாங்கத்துக்குள் இரண்டு விதமான நிலைப்பாட்டை கொண்டவர்கள் உள்ளனர். தேவையேற்படின் அவர்களே குட்டையைக் குழப்பி விடுவார்கள்.
எனவே ‘முள்ளில் விழுந்த சேலையை’ கழற்றி எடுப்பது போல, மிகவும் கவனமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஏனைய இனங்களின் சிவில் சமூகத்தையும் இணைத்துக் கொண்டு, இவ்விடயத்தில் வெற்றிகாண வேண்டுமே தவிர, நிலைமைகளை இன்னும் சிக்கலாக்கி விடக் கூடாது.