இதற்குத் தீவிர தமிழ்த் தேசிய தலைமைகள், உடனடியான பதிலைக் கொண்டிருப்பார்கள். அது, “எமது அரசியல் என்பது, சலுகைகளுக்கு அடிபணியும் அரசியல் அல்ல; மாறாக, கொள்கை வழி பயணப்படும் அரசியல்” என்ற உணர்ச்சி பொங்கும் தொனியில் அமையும்.
ஆனால், சௌமியமூர்த்தி தொண்டமான் குறிப்பிட்ட விமர்சனமானது, கொள்கையைச் சமரசம் செய்வது பற்றியோ, சலுகைகளுக்காகக் கொள்கைகளைக் கைவிடுவது பற்றியோ அல்ல! அது, நடைமுறைவாத அரசியல் சார்ந்த பார்வை.
சுதந்திர இலங்கையில் தமிழ், சிங்கள இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினையும், ஏறத்தாழ ஏக காலத்தில் உருவெடுத்த பிரச்சினைகள். ஆனால், பலத்த மேலும் கீழுமான திருப்பங்கள் மிகுந்த பயணத்தைக் கடந்திருந்தாலும், 2003இன் 35ஆவது இலங்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, அந்தப் பிரச்சினைக்கு முழுமையானதொரு தீர்வு எட்டப்பட்டது.
இந்த இடத்தில், இனப்பிரச்சினையையும் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினையையும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்கக் கூடியவையல்ல என்று, சிலர் வாதிடலாம். இரண்டும் வேறுபட்டவையாயினும், இரண்டும் இரண்டு தரப்புகளுக்கும் அரசியல் பிரச்சினைகள்; இந்நாட்டின் பெரும்பான்மை, இரண்டையும் அங்கிகரிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்திருந்தது.
ஆனால், ஒரு பிரச்சினை தொடர்பில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டு, அது தீர்க்கப்பட்டுவிட்டது. அதற்கு அந்தத் தலைமைகளின் அணுகுமுறை முக்கிய காரணம் என்பதையும் மறுத்துவிடமுடியாது.
மறுபுறத்தில், மற்றைய பிரச்சினை தீர்வதற்கான அறிகுறிகள்கூடத் தென்படவில்லை. அதற்குப் பலகாரணங்களுண்டு. அவற்றில் முக்கிய காரணங்களிலொன்று, இந்த இனப்பிரச்சினையானது இரு தரப்பு அரசியலினதும், அரசியல் மூலதனமாக மாறியிருப்பதாகும். நடைமுறை அரசியலை எடுத்துக்கொண்டால், அரசியல்வாதிகளுக்கு வடக்கு-கிழக்கில் தமிழ் அரசியல் செய்வதே, இலகுவானதாக இருக்கிறது.
தமிழ்த் தேசியம் என்ற உணர்வுக் கவர்ச்சிக்குள் தமது இயலாமைகள், திறமையின்மைகளை மறைத்துவிட்டு, மக்களுக்கு எதுவித நேரடி விளைபயனையும் ஏற்படுத்தாத வங்குரோத்து அரசியலை, வெற்றிகரமாக முன்னெடுக்கவல்ல அரசியற்களம், இலங்கையின் வேறெங்கேனும் இல்லை.
இலங்கையின் மற்றைய பாகங்களில், அரசியல் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, அரசியல் கொள்கை நிலைப்பாடுகளைத் தாண்டி, தமது வாக்காளர்களுக்கு நேரடி விளைபயனைத் தரக்கூடிய நிறைய விடயங்களைச் சாதித்துத்தர வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதைச் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் அது, அவர்களது வெற்றியைப் பாதிப்பதாக அமையும்.
ஆனால், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பரப்பின் நிலை இதுவல்ல; தமிழ்த் தேசியத்தின் பெயரால் மட்டுமே வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றுப் பதவிகளில் நீடிக்கக்கூடிய தன்மை, இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்குள், இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. இங்கு, தமிழ்த் தேசிய அரசியல் நடத்த, ஓர் அரசியல்வாதி, தமிழ்த் தேசியத்தை நம்புகின்றவராகவோ, தமிழ்த் தேசியத்தை விசுவாசிப்பவராகவோ, அவ்வளவு ஏன், தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று அறிந்தவராகவோ கூட, இருக்க வேண்டியதில்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரியது.
தமிழ்த் தேசியம் என்பது, ‘மக்களாதரவு நிறைந்த ஓர் அரசியல்தளம்’ என்பதைப் புரிந்துகொண்டவர்கள், தமது தேர்தல் வெற்றிக்காக, அதைச் சுவீகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பவாதமும் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் புதியதல்ல. ராஜபக்ஷர்களின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட, வடக்கு, கிழக்கில் தமது தேர்தல் அரசியல் வெற்றியைச் சாத்தியமாக்கிக்கொள்ள, தமிழ்த் தேசிய தேரை வடம்பிடித்து இழுத்த கதைகளை, தமிழ்த் தேசம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியம் என்பது, வாக்குப் பொன்முட்டையிடும் வாத்து. அதை அறுத்தேனும், வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, அவர்கள் தயங்கார்.
தமிழ்த் தேசம் என்பது, பெருமளவுக்குக் கொள்கை, விசுவாசமுள்ளதாயினும், அதனது கொள்கைப் புரிதல் என்பது, மேம்போக்கானதே. இதனால்தான், அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு, வெறும் வார்த்தைஜாலங்கள், கவர்ச்சிகர நாடக நடவடிக்கைகள் போன்றவற்றால், தமிழ்த் தேசத்தின் ஆதரவை, இலகுவாகக் கவர்ந்துகொள்ள முடிகிறது.
அதாவது, தமிழ்த் தேசியம் என்றால், என்னவென்று தெரியாமலே, தமிழ்த் தேசியத்தை நம்பாமலே, நேசிக்காமலே, விசுவாசிக்காமலே, தமிழ்த் தேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகிறது. ஆக மொத்தத்தில், தமிழ்த் தேசியம் என்பது, மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு கருவியாகச் சுருங்கிப்போயுள்ளது.
இது, இன்னொரு கேள்வியை, இங்கு எழுப்புகிறது. அரசியல் சந்தர்ப்பவாதிகள் தமிழ்த் தேசியத்தை தேர்தலில் வெற்றிபெறுவதற்கான கருவியாக் பயன்படுத்த, தமிழ்த் தேசிய கட்சிகள், ஏன் இடமளிக்கின்றன? தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுள், தலைமைகளின் பாதுகாப்பின்மை உணர்வு, நிதித் தேவைப்பாடுகள் என்பவை, இந்தவிடயம் தொடர்பில் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகின்றன.
தமிழ்த் தேசிய தலைமைகள், அடுத்த கட்டத் தலைமையை வளர்ப்பதில் மெத்தனப் போக்கைக் காட்டுகின்றன. இதற்கு தலைமைகளின் பாதுகாப்பின்மை உணர்வு, ஒரு முக்கிய காரணியாகும். ஏனைய உத்தியோகங்களைப் போல, அரசியலுக்கு வயதெல்லை கிடையாது. ஆகவே, தாம் மரிக்கும் வரை பதவியில் ஒட்டியிருக்க விரும்பும் தலைமைகள், தம்மைத் தாண்டி வளர்ந்துவிடக் கூடிய தலைமைகளை வளர விடுவதில்லை; அல்லது, முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றார்கள். இது ஒரு விஷச்சக்கரம்; ஒவ்வொரு தலைமையும், தன்னிலும் திறமை குறைவானவர்களையே முன்னிறுத்தும் போது, தமிழ்த் தலைமைகளின் எதிர்காலம், சூனியத்தை நோக்கியே செல்லும். தமிழ்த் தலைமைகள், இந்தக் குறுகிய மனப்பான்மையிலிருந்து வௌிவர வேண்டும்.
தமது வயது, இயலுமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, ஒதுங்கி, அடுத்த தலைமுறையில் மிகப்பொருத்தமானவர்களுக்கு வழிவிடவேண்டும். ‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்’ என்பது, தமிழ்த் தலைமைகள் நினைவிற்கொள்ள வேண்டிய குறள்.
அரசியல் செய்ய நிதி அவசியம். அதுவும் இன்றைய சூழலில் அரசியற்செலவு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள நிலையில், நிதிவளமின்றி எந்த அரசியல் இயக்கத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. முறையான திட்டமிடல், கட்சிக் கட்டமைப்பு, மக்களாதரவு என்பவற்றின் ஊடாக நிதிதிரட்டல் என்பது, இயலாத காரியமல்ல. ஆனால், அது கடினமான பாதை.
தமிழ்க் கட்சிகள், இந்தக் கடினமாக பாதையைவிடுத்து, இலகுவான வழிகளைத் தேர்தந்தெடுக்கின்றன. இதனால்தான், தமிழ்த் தேசியம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூட, தமிழ்த் தேசிய கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்களாகத் தேர்தலில் நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள், தமது நிதிவளத்தைக் கொண்டு, தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை விலைகொடுத்து வாங்கிவிடுகிறார்கள்.
ஏற்கெனவே, தமிழ்க்கட்சிக்கு உள்ள வாக்குகள் ஒருபுறமிருக்க, தமது விருப்பு வாக்கினை அதிகரித்துக்கொள்ள, கொஞ்சம் தமிழ்த் தேசிய பகட்டாரவாரப் பேச்சு, இளைஞர் கழகங்களுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்குமான நிதியுதவி, பரபரப்பைக் கிளப்பும் அதிரடி நாடகங்கள், தற்காலத்துக்குத் தேவையான சமூக ஊடகப் பிரசாரங்கள் ஆகிவற்றை முன்னெடுத்து, வெற்றிகாணுதல் என்று, இந்த வெற்றிச்சூத்திரம் இலகுவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசமும் உணர்வுக் கொந்தளிப்பால், தனது வாக்குகளை அள்ளி வழங்கிவிடும். நாளையே குறித்தவர்கள், தமிழ்த் தேச நலனுக்கு எதிராக நடக்கும் போது, அவர்கள் துரோகமிழைத்துவிட்டார்கள் என்று தமிழ்த் தேசம் கதறும்.
தமிழ்த் தேசமானது, ஒரு கணம், இந்தப் பிரசார மாயத்திரையை விலக்கி ஆராய்ந்து பார்த்திருக்குமானால், இந்த நிலை உருவாகியிருக்காது. ஆனால், பாவம் தமிழ்த் தேசம்! அது அப்பாவியானது; உணர்வுவயப்பட்டது; அதனால் சிலவேளைகளில் ஏமாளியாகிவிடுகிறது.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசம் இப்படியே இருப்பது அவர்களுக்கு வசதியானது. வெறும் வாய்ச்சொல் அரசியலால், அதிரடி பரபரப்பு நாடகங்களால் தமிழ்த் தேசிய வாக்குவங்கியை மிக இலகுவாக கவர்ந்துகொள்ள முடிகிறது.
பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய எந்தத் தொலைநோக்குத் திட்டங்களுமின்றி, அரசியலைக் கொண்டு நடத்தக்கூடிய வாய்ப்பை, அவர்கள் கெடுத்துக்கொள்வார்களா என்ன? இனியேனும், இந்த ‘அனல் பறக்கும்’ உரைகள், அதிரடி சண்டைக் காட்சிகள் என்பவற்றுக்குப் பின்னாலுள்ள விளைபயனை, தமிழ்த் தேசம் ஆராய்ந்து பார்க்காது, கண்மூடித்தனமாகவே உணர்வுவயப்பட்டு இயங்கிக் கொண்டிருக்குமானால், இந்தக் கவர்ச்சி அரசியல், தமிழ்த் தேசிய அரசியலை வங்குரோத்து நிலைக்குள் ஆழ்த்திவிடும் என்பது மட்டும் திண்ணம்.