(புருஜோத்தமன் தங்கமயில்)
வலிகாமம் வடக்கில், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் ஒரு தொகுதி (638 ஏக்கர்), கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், அடுத்தவர் வீடுகளிலும் அகதி வாழ்க்கைக்கு வலிந்து தள்ளப்பட்ட மக்களுக்கு, தமது சொந்த வீடு, வளவைக் காணுதல் என்பது பெரும் கனவு. யாராவது, எப்படியாவது தங்களது காணிகளை மீட்டுத்தந்துவிட மாட்டார்களா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தவிக்கிறார்கள்; போராடிச் சாய்கிறார்கள்.
அப்படியான நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும் தமது காணிகளை நோக்கிச் செல்லும் மக்களிடம் மகிழ்வு, ஆர்ப்பரிப்பு, ஏக்கம், ஏமாற்றம் என்கிற எல்லா மனநிலையும் கலந்தே இருக்கும். கடந்த வெள்ளிக்கிழமையும் அவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகளை, மக்கள் வெளிப்படுத்தினார்கள்.
அன்றைக்கு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிக்கொண்டு, காவடி நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்லும் ஒருவர், ஊடகங்களின் கமெராகளில் பதிவானார். சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டார்; விமர்சிக்கப்பட்டார். அவரின், பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளெல்லாம் செய்து முடிக்கப்பட்டது.
அந்தப் படத்தைப் பார்த்ததும், இராணுவ வற்புறுத்தலின் பேரில், குறித்த நபர் படங்களைத் தன்னுடலில் கட்டிக் கொண்டு சென்றாரா, அல்லது உண்மையிலேயே சுயவிருப்பின் பேரில்தான் கட்டிக்கொண்டாரா? என்கிற கேள்வி எழுந்தது. இராணுவ வற்புறுத்தலின் பேரில்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்றால், அது தொடர்பில் அந்த நடுத்தர வயது நபரை, பெரிதாகக் குற்றஞ்சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஏனெனில், இலங்கை இராணுவமும் தேசியப் புலனாய்வுத் தரப்பும் எவ்வாறான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நாளாந்தம் தமிழ் மக்கள் மீது வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒரு பகுதியாகவே, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எதிராகப் போராட வேண்டும்.
ஆனால், அவர் தன்னுடைய சுய விருப்பின் பேரில்தான் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரின் படங்களைத் தன்னுடலில் கட்டிச் சுமந்தார் என்றால், அது குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் பல உண்டு.
ஏனெனில், அது தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது மட்டுமல்ல. அது, அரசியலோடும், எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்டது.
ஒருவரின் பூர்விகத்தை ஆய்வு செய்து பழித்துவிட்டு, ஆத்திரங்களைத் தீர்த்துக் கொள்வதால், பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. உண்மையில், அந்த நடுத்தர வயது மனிதரின் மனநிலையைப் பற்றி ஆராய வேண்டும்.
குறித்த படத்தைப் பற்றிய உரையாடலின் போது, செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவில் 2014ஆம் ஆண்டு, தான் சந்தித்த அனுபவமொன்றை இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.
இறுதி மோதலின் போது, முள்ளிவாய்க்கால் வரை சென்று, காயம் பட்டு முகாமில் இருந்து மீண்ட ஒருவர், தன்னுடைய ஏழு வயது மகன், இராணுவம் நடத்திய நடனப் போட்டியில், பரிசு பெற்றதைப் பெருமையாகக் கூறினாராம்.
இறுதி யுத்தத்தின் கோர வடுவை, தன்னுடலில் தாங்கியிருக்கின்ற அவர், அதற்குக் காரணமான இராணுவத்திடமே மகன் பரிசு பெற்றதை, அங்கிகாரமாகக் கருதுகிறார் என்றால், அதற்கான சூழல் ஏன் உருவானது? அதற்கான காரணங்கள் என்ன? என்றெல்லாம் ஆராயப்பட வேண்டும் என்றார்.
தமிழ்த் தேசியப் போராட்டம், தமிழர் தேசத்தையும் தமிழ் மக்களையும் அதிகாரங்களோடு தக்க வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகளும் அதுசார் அதிகாரமுமே ஒரு சமூகத்தின் நீட்சிக்கும் முன்னேற்றத்துக்குமான அடிப்படை. அதிலிருந்துதான், அடுத்த கட்டங்கள் சார்ந்து சிந்திக்கவே முடியும்.
ஆனால், போராட்ட வடிவமும் அதன் போக்கும் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியான தோரணையோடு இருக்க வேண்டியதில்லை. அது காலத்தையும் சூழலையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்; சந்தர்ப்பங்களைச் சரியாகக் கையாளும் சமயோசிதத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இல்லையென்றால், போராட்டங்கள் மீது, யாருக்காகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதோ, அந்த மக்களே நம்பிக்கை இழப்பார்கள்.
அவ்வாறான கட்டத்தை நோக்கி, ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும் தமிழ் மக்களும் குறிப்பிட்டளவு நகர்ந்துவிட்டார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் யாரும் எதிர்பார்க்காத அளவு, தென்னிலங்கைக் கட்சிகள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கின்ற ஒன்றிணைந்த எதிரணியே வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் பேசும் போது கூறினார். “தேர்தலில் நிற்குமாறு பல கட்சிகளும் என்னிடம் கோரின. ஆனால், நான் (மத்தியை) ஆளும் கட்சியிலேயே நிற்க விரும்பினேன். ஏனென்றால், தேர்தலில் வென்றபின் மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ்க் கட்சிகளில் நின்றால் அவற்றைச் செய்ய முடியாது. சும்மா பெயருக்கு உறுப்பினராகவே இருக்க முடியும்” என்றார்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக கடந்த ஒன்பது வருடங்களில், பல கட்டங்களைத் தமிழ் மக்கள் கண்டுவிட்டார்கள். போராட்டத்தின் மீதான பற்றுறுதியை மக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தாலும், நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் போராட்டத்தின் மீதான பற்றுறுதியையும் தாண்டியதாக இருக்கும்போது, சிக்கல் உருவாகின்றது.
அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான உத்திகளையும் மக்கள் தேட வேண்டியேற்படுகின்றது. தமிழ்த் தேசியப் போராட்ட வடிவம், தொடர்வதிலுள்ள குறைபாடுகள், ஒவ்வொரு தடவையும் மேலெழும்போது, அதை ஆராயாமல், உணர்ச்சி மேலிடல்களை மாத்திரம், பேசிக் கடந்துவிட முடியும் என்பதே, தமிழ்த் தேசியத்தின் வேர்களை மெல்ல மெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்றது.
ஏனெனெில், தமிழ்த் தேசியப் போராட்டங்களை, இதுவரையும் தூக்கிச் சுமக்கிறவர்கள் மக்களே; அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தலைவர்களும் அதை வழிப்படுத்தி இருக்கிறார்கள். அவ்வளவுதான்!
மக்களின் ஒருங்கிணைவும் ஓர்மமும் இல்லையென்றால், தமிழ்த் தேசியப் போராட்டங்கள் இவ்வளவு காலமும் நீடித்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியான நிலையில், மக்களின் ஒருங்கிணைவு, ஓர்மத்தைத் தாக்கும் அக- புறக் காரணிகளை ஆராய வேண்டும். அவற்றை, ஆராயாமல் தமிழ்த் தேசியத்தின் தொடர்ச்சி என்பது கேள்விக்குரியதுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்று எந்தத் தரப்பாக இருந்தாலும், இவர்கள் மீதான நம்பிக்கையிழப்பை மக்கள் வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பது என்பது, அரசியல் தோல்வியாகவே கொள்ள வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் இடையில் பகிரப்பட்டிருந்தால் அதிகமாக அலட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால், (ஈ.பி.டி.பியைத் தாண்டியும்) சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த தரப்புக்கும் விழுந்திருக்கின்ற வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அது கிட்டத்தட்ட சண்டைக்காரர்களின் காலில் விழும் நிலை.
கால் நூற்றாண்டுகளுக்கு முன், தன்னுடைய சொந்த வீடு, வளவிலிருந்து விரட்டியடித்த இராணுவத்துக்கே, காணி விடுவிப்புக்கான நன்றி சொல்லும் மனநிலை உருவாகுமாக இருந்தால், அதுவும் தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே.
அது, எவ்வாறான நிலையை உணர்த்துகின்றது என்றால், தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் என்கிற தரப்புகளைத் தாண்டி, இலங்கை அரச இயந்திரமும், அதன் கூறுகளும் மக்களிடம் தாக்கம் செலுத்த வல்லவை.
அவை, எடுக்கின்ற முடிவுகளின் பிரகாரம் மக்களை இயக்கக் கூடியவை என்கிற கட்டங்களைக் காட்டுகின்றன. இது, தொடருமாக இருந்தால், தனது உடல்களில் படங்களை ஏந்திச் செல்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.