கார்த்திகை மாத நினைவு…?.

காவோலைகள் பற்றவைத்த தீயில் தம்மை ஆகுருதியாக்கிய, குருத்தோலைகள் எரிந்த எம் இன வரலாற்றின் கறுப்பு அத்தியாயம், ‘ஈழ விடுதலை போராட்டம்’. எந்தவித தயாரிப்புகளும் இன்றி, எவரின் ஆதரவும் இன்றி வெறுமனே வெற்றுக் கோசங்களும், வீராப்பு பேச்சுகளும் மட்டும் எம் இனத்துக்கு விடுதலையை பெற்றுத்தந்துவிடும் என்பதுபோல செயற்பட்ட, மூத்தோர் மூட்டிய தீயால் கருகிப்போன இளையவர் நினைவு கூரல் மாதம் கார்த்திகை மாதம்.

பிரபாகரன் தலைமையை ஏற்று களமாடியவர் மரணித்த மாவீரர் மாதம் என்று மட்டும், இதனை பார்க்கும் மன நிலை எல்லோர்க்கும் இல்லை. காரணம் ஈழ விடுதலை போரில் தம்மை இணைத்த பலரும், அதன் தலைவர் யார், அதன் கொள்கை என்ன என்று பார்த்து, பரிசீலித்து இணைந்ததை விட அதிகமாக, தன் அண்ணன், தன் உறவுகள், தன் ஊரவன், முக்கியமாக நண்பர்கள் எந்த இயக்கத்தில் இணைந்தனரோ, அந்த இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டது தான் உண்மை.

மாவீரர் என்றால் தனியே பிரபாகரன் தலைமையில் களமாடிய விடுதலை புலிகள் மட்டுமே என போற்றுவதில் அனைவர்க்கும் உடன்பாடில்லை. ஈழவிடுதலைக்காக களமாடி தங்கள் இன்னுயிரை ஈய்ந்தவர் அத்தனைபேரும் மாவீரரே. ஈழ விடுதலை போராட்டத்தில் ஏக தலைமைதத்துவம் என்ற எண்ணமே, எமக்கு பெரும் இழப்புகளை மட்டுமல்ல, போராட்டத்தில் இருந்து பலர் விட்டு விலகவும் காரணமாயிற்று. அதுவரை எதிரியின் அடக்குமுறை இராணுவம் முகாங்களுக்குள் முடக்கப்பட்டே இருந்தது.

அத்தனை இயக்க போராளிகளும் இராணுவம் வெளியேறாமல் ஒருமித்து செயற்படும்வரை, எமது பலம் வெளிப்பட்டது. எமக்குள் மோதல் உருவானபோதே நாம் பலவீனம் அடைந்தோம். அதுவரை களப்பலியான அனைத்து இயக்க போராளிகளும் மாவீரர்கள் தான். இயக்க மோதல் ஏற்பட்டபோது கிழக்கின் போராளிகள் வடக்கில் திசை தெரியாது ஓடி, தப்பிக்க முடியாது பிடிபட்டு, சந்திக்கு சந்தி டயர் போட்டு எரிக்கப்பட்டார்களே, அவர்களும் மாவீரர் தான்.

தங்களை விமர்சித்தார்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்களை விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்து, அவர்மீது புரிந்த தாங்கமுடியாத கொடுமையான சித்திரவதைகளால் மரணித்துப்போன பொது மக்களும் மாவீரர் தான். விடுதலை வேட்கையில் இணைந்தவர் தம் தலைமைகள் விடும் தவறுகளை சுட்டிக்காட்ட முற்பட்ட வேளை, அவர்களை சுட்டுக்கொன்ற நிகழ்வுகள் இடம்பெற்ற இயக்கங்களில் மரணித்தவர் அனைவரும் மாவீரர் தான்.

துளிர்விடும் மரங்கள் நடுகை மாதம் என போற்றப்படும் கார்த்திகை மாதத்தில், களப்பலியான எம் இளம்தளிர்கள் நினைவு கூரப்படல் நன்று. ஆனால் அதில் கூட பாகுபாடும் பிரிவினையும் காட்டப்படல் நன்றன்று. அன்று ஒன்றாய் இருந்தவேளை அனைவரும் போராளிகள். ஆனால் பிரிவுகள் வந்தபின் துரோகிகள் என, கூட இருந்த எம்மவரை எம்மவரே வசைபாடல் ஏற்புடையதல்ல. தலைமைத்துவ தவறுகள் மட்டுமே பிரிவினைக்கு வித்திட்டது. தவிரவும் களமாட வந்த போராளிகளால் அல்ல.

கும்பகோணம் சிவபுரம் பயிற்சிமுகாமில் எறிகணை பரீட்சாத்தத்தின் போது மரணித்த தோழர்கள், தஞ்சாவூர் ஓரத்து நாட்டில் படுகொலை செய்யப்பட்ட இளையவர், பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில் கடலில் காவியமான போராளிகள் என, எண்ணற்றவர்கள் தமது ஈழக்கனவில் தான் தம் இன்னுயிர் நீர்த்தனர். தமது இளமைக் கால இன்ப வாழ்வினை தம் இனத்தின் விடுதலைக்காக துறந்து களமாட துணிந்த, எல்லோருமே மாவீரர்கள் தான்.

தலைமைமீது கொண்ட அதீத நம்பிக்கையால், முள்ளிவாய்க்கால் வரை சென்று நந்திக்கடலில் தம்மை கரைத்தவர் மட்டுமல்ல, வெள்ளை கொடி ஏந்தி யுத்ததர்மம் பேணப்படும் என நம்பி முன்னேறி சென்றவர் முதல், சர்வதேச சட்டங்கள் பேணப்படும் என முள்வேலியில் முடங்கியவரும், மாவீரர் தான். எதிரியே அடைக்கலம் தருகிறேன் என் முகாமுக்கு வா என அழைப்பு விட்ட, கடந்த கால வரலாற்றை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்,

களமாடி மரணித்த அனைத்து போராளிகள், சகோதர படுகொலையால் வீழ்ந்துபட்ட இளையவர், இயக்க தலைமைகளுக்கு ஏற்பட்ட அதீத மனநோயால், படுகொலை செய்யப்பட்ட தளபதிகள், கல்விமான்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் நினைவு கூரப்படும் மாதமாக, கார்த்திகை மாதம் அமையவேண்டும். இந்த கார்த்திகை மாத நிகழ்வில் இருந்தாவது ஈழ விடுதலை என்ற பெயரில் வீழ்ந்த, வீழ்த்தப்பட்ட அனைவரையும் மாவீரர் என நினைவுகூரும் மரபு உருவாகவேண்டும். அன்று ஒருமித்த மனத்துடன் அனைவருக்கும் தியாக தீபம் ஏற்றுவோம்,, எம் இனத்தின் விடிவுவேண்டி…?!

(ராம்)