காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?

 

விவசாயிங்களுக்கு இப்படி மாட்டைப் பத்திப் ஊர் உலகத்துக்குச் சொல்ல நெறைய விசயம் இருக்கு. நீங்கதான் சல்லிக்கட்டைத் தாண்டி எதையும் கேட்க தயாரா இல்லையே!” எனக்கு அவரிடம் பேச ஒன்றுமே இல்லை. பேச என்ன இருக்கிறது? விவசாயிகள் விஷயத்தில் காதுகளே இல்லாதவர்களாகத்தானே நாம் இருக்கிறோம்! நிறையக் குற்றவுணர்வு தந்த உரையாடல் அது. இனி மாடுகளைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் குற்றவுணர்வு கொல்லும்! -சமஸ்

அலங்காநல்லூர். இந்தக் குளிர்காலத்திலும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடுகிறார் செல்வம். வீட்டில் ஐந்து மாடுகள் நிற்கின்றன. இவற்றைத் தாண்டி உதவி என்று கேட்பவர்களின் மாடுகளைப் பராமரிக்கவும் ஓடுகிறார். “நமக்கு பால் மாடு வளப்புதான் பொழைப்பு. ஜல்லிக்கட்டு காளைகள பழக்குறது பொழுதுபோக்கு. ஆறு மாசக் கன்டா இருக்குறப்பவே காளய பழக்க ஆரம்பிப்பாய்ங்க. அதோட சேந்து நாமளும் நடக்கிறது, நீச்சல் அடிக்கிறது, குத்துப் பழக்குறதுன்னு விளையாடறப்ப நமக்கும் வயசு குறைஞ்சுரும்” என்கிறார்.

செல்வத்துடன் பேசிக்கொண்டே இருந்தால், ஒரு மாட்டை வாங்கிக்கொண்டு கிராமத்துப் பக்கமாகப் போய்விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு பிரியமான பேச்சு மாடுகள் மீது!

“பொறந்ததுலேர்ந்து மாட்டோடதான்யா கெடக்குறோம். மாடுங்க இல்லாட்டி வாழ்க்கையே இல்லை. நம்மளவிட யாருக்கு மாட்டைப் பத்தி தெரியப்போவுது? இந்தச் சல்லிக்கட்டு சமயத்துலதான்யா பூராப் பயலும் மாட்டு மேல அக்கறையிருக்கிற மாதிரிப் பேசிக்கிட்டு வர்றாய்ங்க. நல்ல நாள்ல இங்கெ மாடுக என்ன கதியில கெடக்குதுன்னு ஒரு பயலுக்கும் அக்கறை கெடையாது.

தமிழ்நாட்டோட பாரம்பரிய மாட்டினம் பூராவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு. ஒருகாலத்துல முப்பது நாப்பது ரகம் சொல்லுவாய்ங்க மாட்டுத் தரகருங்க. இப்ப அஞ்சாறு இனத்தைக் காப்பாத்துறதுக்கே போராடிட்டுருக்கோம். இது விவசாயிங்களோட பிரச்சினை மட்டும் இல்ல. பால் குடிக்குற ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை. எப்படின்னு சொல்றன்.

நம்ம நாடு முழுக்க பேர்போன சில இனங்கள் இருக்கு. கிர், சிவப்பு சிந்தி, வெள்ளை சிந்தி, சிவப்பு கராச்சி, முல்தானி, ஹலிக்கார், அம்ரிட்மஹால், கிலாரி, ஹரியானா, காங்ரெஜ், ஓங்கோல், கிருஷ்ணா, டோங்காரி இப்படி. வெளிலேர்ந்து இங்கெ கொண்டுவந்து கலந்துவுட்ட சில இனங்களும் இருக்கு. கலப்பு ஜெர்ஸி, கலப்பு ப்ரேஸியன் இப்படி. இதுமாரி, நம்மூரைச் சேர்ந்த முக்கியமான இனங்கள் காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி, புலிக்குளம் மாடுங்க; தோடா எருமைங்க. இது ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கு.

உம்பளச்சேரி காளைங்க தொடை வரைக்கும் சேறு இருந்தாலும் ஏர் இழுக்கும். என்னா வெயிலா இருந்தாலும் சரி, ஏழெட்டு மணி நேரம் அசராம இழுக்கும். உழவுக்குன்னே பொறந்தது. காங்கேயம் காளை பாரம் இழுக்குறதுல கெட்டி. உம்பளச்சேரி காளைங்களை வண்டில பூட்டினா, ரெண்டரை டன் வரைக்கும் இழுக்கும்னா, காங்கேயம் காளைக அஞ்சு டன் வரைக்கும் இழுக்கும். பர்கூர் காளைக கரடுமுரடுக்கும் காடு மலைக்கும் தோதானதுக. மலைப்பாங்கான மண்ணுல கடுமையா உழைக்கும். புலிக்குளம் காளைக காங்கேயம் காளைகளவிட மூர்க்கமானதுக. பயங்கர சுறுசுறுப்பா இருக்கும். ஆனா, வேலை வாங்க முடியாது. உழவுக்கும் லாயக்குப் படாது, பாரம் இழுக்கவும் லாயக்குப் படாது. ஆனா, சல்லிக்கட்டுல அதை அடிச்சிக்க ஆளேயில்ல.

இந்த இனப் பசுக்கள் எல்லாமே ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர்லேர்ந்து நாலு லிட்டர் வரைக்கும்தான் பால் கொடுக்கும். ஆனா, நல்ல சத்து. புரதம் அதிகம். கொழுப்பு கம்மி.

தோடா எருமைக நீலகிரி மலைப்பகுதிலேர்ந்து பரவுச்சி. எந்த எருமையையும் இதுங்ககூட ஒப்பிட முடியாது. உடம்பு பூராம் முடியா இருக்கும். எப்பவும் அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிக்கிட்டிருக்கும். தொல்லை தராம அதுபாட்டுக்கு மேயும். தோடர்கள் பொண்ணுக்குக் கல்யாண சீதனமா ஒரு எருமையைக் கொடுக்குறது இன்னைக்கும் வழக்கத்துல இருக்கு. அது வளந்து, அது வம்சம் விருத்தியாயிட்டாலே அந்தக் குடும்பத்துக்குக் காசுப் பிரச்சினை கவலை இல்லாமப்போயிடும்கிறது கணக்கு.

இப்ப இந்தப் பாரம்பரிய இன மாடுக எல்லாமே அழிஞ்சுக்கிட்டுருக்கு. விவசாயத்தை முழுக்க இயந்திரமயமாக்கிட்டதால, காளைக பயன்பாடு கொறைஞ்சுருச்சு. பால் அதிகம் கொடுக்கும்னு கலப்பு பசுக்களைக் கொண்டுவந்து இங்கு ஊக்குவிச்சதுல, நாட்டுப் பசுக்களும் அழியுது. நம்மூரு கொட்டகை முழுக்க இப்ப ஜெர்ஸி, பீரேஸியன் கலப்பு மாடுகதாம் ஆக்கிரமிச்சுக்கிட்டு கிடக்துக. காரணம், நம்மூர் பசுக்களைவிட இதுக அஞ்சாறு மடங்கு வரைக்கும் அதிகம் பால் தரும். உம்பளச்சேரி பசு ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தந்தா, ஜெர்ஸி பசு பதினெட்டு லிட்டர் தரும்.

மேய்க்க இடம் இல்லை. மாட்டுக்கு ஒரு நாளைக்கு பத்து கிலோ தீவனம் போடணும். இதுக்கெல்லாம் உதவாத அரசாங்கம், பால் வெலைய நிர்ணயிக்கும்போது மட்டும் இவ்வளவுக்குத்தான் விக்கணும்னு அதிகாரத்தைத் தூக்கிக்கிட்டு வந்துடுது. வெவசாயிங்க என்ன பண்ணுவாய்ங்க? அரசாங்கம் காட்டுற வழியிலதான் போவாய்ங்க. அரசாங்கத்தோட போக்கு கலப்பினப் பசுக்களத்தான் ஊக்குவிக்குது.

சிக்கல் எங்கெ வரும்னா, எல்லா மாட்டுப் பாலும் குடிக்கிறதுக்குத்தான்னாலும், எல்லா மாட்டுப் பாலும் ஒண்ணு கெடையாது. நம்மூர் மாடுங்க எல்லாமே கொஞ்சமா தின்னுட்டு, கடுமையா உழைக்கும். எப்பிடியாப்பட்ட வறட்சியில யும், பஞ்சத்திலேயும்கூடப் பனையோலை, எள்ளுசக்கை, சோளத்தட்டை, கரும்புத்தோகை, வேப்பங்கொழனு கெடைக்குறதைத் தின்டு உயிரைக் காத்துக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி ஜாஸ்தி. பாலும் அப்படித்தான்.

மேலைநாட்டு ஜெர்ஸி அங்கயிருக்கிற சீதோஷ்ண நிலைக்கு ஏத்தது. அதை எப்படியோ இங்கேயும் தாக்குப் புடிக்கிற மாரி ஒண்ணு கலந்து கொண்டாந்து விட்டுட்டாய்ங்கன்னு வெச்சுக்குங்களேன். பாவம், கொஞ்சம் வெயில் ஏறுச்சுன்னா நாக்கைத் தொங்கவிட்டுடும். வாநீயா ஊத்தும். பொசுக்கு பொசுக்குன்னு உடம்புக்கு நோவு வந்துடும். ப்ரேஸியன் பசு நெலமை இன்னும் மோசம். மாடு எப்படி இருக்கோ, அப்படித்தானே பாலும் இருக்கும்?

கால்நடை வளர்ப்புல நம்மூர்ல இருந்த கலாச்சாரம் வெளிநாட்டுக்காரனையெல்லாம் அசர வைக்கும்யா. கோயில் காளைனு சொல்வாய்ங்களே, கேள்விப்பட்டிருக்கீகளா? நல்ல பொலி காளையா இருக்கும். பார்க்க எடுப்பா, மிடுக்கா, கம்பீரமா, வீரியமா இருக்கும். ஊருல பொதுவா விட்ருவாய்ங்க. அது பாட்டுக்கு எங்கே வேணும்னாலும் பூந்து மேயும். யாரும் விரட்ட மாட்டாய்ங்க. ஏன்னா, ஊருல ஜோடி இல்லாத பசுக்களுக்கு அவருதான் தொணை. பசு பருவத்துக்கு வந்துடுச்சுன்னா, அது ஒரு மாதிரி கொரல் கொடுக்கும். இவுரு மோப்பம் புடுச்சிக்கிட்டே கரெக்டா அங்கேயே போயிருவாரு. ரெண்டு பேரும் ஒண்ணு சேருவாங்க. விவசாயிக்குத் தரமான கன்னுக்குட்டி கெடைக்கும்.

காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கலாம். இன்னைக்கு காயடிக்காத காளையே இல்லன்னு ஆயிடுச்சி. பூராம் செயற்கைக் கருவூட்டல்தாம். ஊசிப் போட்டு பசுவை சினையாக்குறாய்ங்க. அதுவும் வெளிநாட்டுக் கலப்பின மாட்டோட விந்து. இப்படிச் சினையாவுற மாடு கொடுக்குற பால் மட்டும் எப்படி இருக்கும்? விவசாயிங்களுக்கு இப்படி மாட்டைப் பத்திப் ஊர் உலகத்துக்குச் சொல்ல நெறைய விசயம் இருக்கு. நீங்கதான் சல்லிக்கட்டைத் தாண்டி எதையும் கேட்க தயாரா இல்லையே!”

எனக்கு அவரிடம் பேச ஒன்றுமே இல்லை. பேச என்ன இருக்கிறது? விவசாயிகள் விஷயத்தில் காதுகளே இல்லாதவர்களாகத்தானே நாம் இருக்கிறோம்! நிறையக் குற்றவுணர்வு தந்த உரையாடல் அது. இனி மாடுகளைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் குற்றவுணர்வு கொல்லும்!

(ஜனவரி, 2016, ‘தி இந்து’)