காவிரிக்கரை நெடுக சோழர்கள் எழுப்பிய அற்புதமான கோயில்களைத் தேடி பயணிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, எல்லோரும் அடிக்கடி சென்று பார்க்கும் கோயில்களாக அவை இருக்கக்கூடாது, ஆனால் அற்புதம் நிறைந்ததவையாக இருக்க வேண்டும், இந்த திட்டத்தில் பயணிக்கத் துவங்கினோம், தெரியாத கோயில்கள் என்றால் அவை நிச்சயம் கிராமங்களுக்குள் தான் இருக்கும், அவற்றை தேட கார் சரிபடாது என்பதால் திருச்சியில் ரமேஷின் நண்பர் ஒருவருக்கு தொலை பேசி செய்து இருசக்கர வாகனம் வேண்டும் என்று கேட்டதும், திருச்சி பேருந்து நிலையத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.இடது பக்கம் காவிரி பாய, வலது பக்கம் விவசாய வேலைகள் நடந்துகொண்டிருக்க, சிலுசிலுவென காற்றுக்கிடையே, லேசான மேகமூட்டதுடன் கூடிய வானிலைக்கு நடுவே, குருவிகள் எழுப்பும் சத்தத்தை கேட்டபடி அழகான காலைப் பொழுதில் திருச்சி- நாமக்கல் சாலையில் காவிரியின் எதிர் திசையில் பயணிக்கத் துவங்கினோம். வழியில் சில அற்புதமான முற்கால சோழர் கோயில்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தோம். அதில் ஒரு கோயிலின் அழகு வேறு இடத்திற்கு நகர விடாமல் கட்டிப்போட்டது, அதுபோன்ற அழகான சிலைகள் உள்ள கோயிலை நான் இதுவரை பார்த்ததே இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எனக்கு மிக நெருக்கமானர்வர்களுக்கு மட்டும் அந்த கோயிலை அறிமுகப்படுத்துவது என்ற முடிவோடு அரை மனதுடன் வெளியே வந்தேன். நேராக ஸ்ரீனிவாசநல்லூர் சென்றோம். தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் காணவேண்டிய கோயில்களில் ஒன்று தான் இந்த ஸ்ரீனிவாசநல்லூர் “குரங்கநாதர் கோயில்”. இதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
அடுத்து எங்கு செல்லலாம்? காவிரிக்கு குறுக்கே இருந்த பாலத்தை கடந்து மறுமுனையை அடைந்து திருச்சி- கரூர் சாலையை வந்தடைந்தோம். குளித்தலையில் இருந்து மீண்டும் திருச்சி நோக்கிய பயணம், வழியில் ஒரு கிராமத்திற்குள் புகுந்தோம், காவிரி நீர் வாய்க்கால்களில் பாய்ந்து அந்த இடத்தை பச்சை போர்வை போர்த்தி இருந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். இதையெல்லாம் கண்டபடி சென்று கொண்டே இருந்த வண்டி ஒரு புதரைப் பார்த்ததும் நின்றது. கருவேல மரங்கள் சூழ்ந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்தது அந்த இடம். என்னாங்க இது? என்ற கேள்வியை எழுப்பி வாய்பிளந்தவாறு வானத்தை பார்த்தபடி ரமேஷ் நடக்கத் துவங்கினார்.
நானும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. இதில் சிறப்பு என்ன தெரியுமா? அந்த செங்கல் விமானமும் சோழர் காலத்தியது தான்! 1000 வருடங்களைக் கடந்து வந்துள்ளது. அந்த கோயிலில் எந்த மாற்றமும் இந்த இடைப்பட்ட 1000 ஆண்டுகளாக செய்யப்படவில்லை, அப்படியானால் அந்த சோழ தேசத்து மக்கள் கண்ட அதே கோயிலை என் கண்களால் நானும் காண்கிறேன், ஆனால் புதருக்கு நடுவே!.
அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை! எத்தனை முறை சுற்றிவந்திருப்போம் தெரியாது, ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ஒவ்வொரு புதுமைகளை கண்டோம். கொடுங்கை வரியில் பூதகணங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
வாசல் வந்து உள்ளே எட்டிப் பார்த்தோம், அய்யன் பரிதாபமாக இருந்தார். கருவறையின் 3 பக்கங்களிலும் வேலைப்பாடுகள் மிக்க 22 தூண்களைக்கொண்டு கருவறை கட்டப்பட்டுள்ளது. கருவறையையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய 3 பக்கங்களில் 10 தூண்களை கொண்டு சிறிய வடிவில் அர்த்த மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். “சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி “. அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க வேண்டும்!.இக்கல்வெட்டிலிருந்து மேட்டு மருதூர் என்ற இந்த ஊர் அன்று “மாதான மருதூர்” என்று அழைக்கப்பட்டுள்ளது, இறைவன் பெயர் “ஆராவமிதீஸ்வர்”.
இடைப்பட்ட இந்த ஆயிரம் வருடத்தில் எத்தனை திருவிழாக்கள், எத்தனை அபிஷேகங்கள், எத்தனை நிவந்தங்கள், எத்தனையோ ஆயிரம் மனிதர்களை இந்த கோயில் சந்தித்திருக்கும், ஆனால் அதை சுற்றி கழிப்பிடமாக்கும் நம்மை போன்ற ஒரு மோசமான தலைமுறையை பார்த்திருக்குமா என்பது சந்தேகமே! இடிந்தும் விண்ணை முட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்த அந்த விமானத்தை பரிதாமாக பார்த்தவாறு புறப்பட்டோம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவதைப் போன்று அழுதுகொண்டிருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சோழர்கள் எங்கிருந்தாவது வரமாட்டார்களா என்ற ஏக்கதுடன்!.
(Gv Venkatesan shared Sasi Dharan’s)