கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 04ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் இணைக்கப் பெற்றிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2007ம் ஆண்டு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பெற்ற பின்னர் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் பல மறைத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகின்றது. மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்குப் பாடுபடக் கூடியதாகக் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் மயப்படுத்தப்பெற்றதும் வினைத்திறன் மிக்கதுமான பொதுவான – பலமான மக்கள் அமைப்பொன்று முழுக் கிழக்கு மாகாணமும் தழுவியதாக இல்லை.
இந்தப் பின்னணியில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய “பொறிமுறை” யொன்றினை உருவாக்குமுகமாக த.சிவநாதன், (சிரேஸ்ட சட்டத்தரணி) மற்றும் செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட மட்டக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி மட்டக்களப்பு, கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் பொது மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடலின் பின்னர் பின்வரும்; தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பெற்றது.
“எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்து ஓரே அணியில் போட்டியிட வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.
இத்தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் பிரதேச ரீதியாகத் தெரிவு செய்யப்பெற்ற செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய நடவடிக்கைக்குழுவும் இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பெற்றது. இப்புதிய அமைப்புக்குக் “கிழக்குத் தமிழர் ஒன்றியம்” எனப் பெயரிடப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இதனைப் போன்று அம்பாறை மாவட்டத்திற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 21ம் திகதி அக்கரைப்பற்று, குருக்கள் வீதி, இந்து இளைஞர் மன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடலின் பின்னர் கடந்த ஜனவரி 06ம் திகதி அன்று நடைபெற்ற மட்டக்களப்புக் கூட்டத்தின் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொள்வதாக அக்கரைப்பற்றுக் கூட்ட (அம்பாறை மாவட்ட) அவையும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் அம்பாறை மாவட்ட நடவடிக்கைக் குழுவும் தெரிவு செய்யப்பெற்றது.
திருகோணமலை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பங்களிப்பினை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.