ஏற்கெனவே, அசாமில் “தேசிய குடிமக்கள் பதிவேடு” செயல்படுத்தப்பட்டு, மண்ணின் மக்கள் யார், அயலார் யார் எனக் கணக்கெடுக்கப்பட்டு வரும் நிலையில்தான், இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்திலிருந்தே வடகிழக்கு மாநிலமான அசாமின் வளமான ஆற்றுப்பாசனப் பகுதிகளில் நிலங்களை வாங்கிக் கொண்டு, வங்காளிகள் குடியேறத் தொடங்கிய நிலையில், 1950களுக்குப் பிறகு மேற்கு வங்கத்திலிருந்தும், மேற்கு பாக்கித்தானிலிருந்தும் வங்காளிகள் அலை அலையாக அசாமில் குடியேறினர். பீகார் இந்திக்காரர்களும் குடியேறினர். முஜிபுர் இரகுமான் தலைமையில் வங்கதேச விடுதலைப் போராட்டம் தீவிரமான பிறகு அங்கிருந்து அசாமுக்குள் வருவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது.
இதன் காரணமாக, “அசாம் அசாமியருக்கே! வெளி யாரை வெளியேற்று!” என்று முழங்கி அசாமின் மாணவர்களும் அசாமியர்களும் பெரும் போராட்டங்களில் இறங்கினர். இதன் காரணமாக, 1971 மார்ச் 24-க்குப் பிறகு அசாமில் குடியேறிய அயலார் அனைவரும் கணக்கெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறும் “அசாம் ஒப்பந்தம்” அசாம் மாணவர் தலைவர்களுக்கும் (All Assam Students Union – AASU), இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ்காந்திக்கும் இடையே 1985ஆம் ஆண்டு கையெழுத்தானது.
எனினும், இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
அசாமில் உள்ள சிக்கல், அங்கு குடியேறியவர்கள் இந்துவா – இசுலாமியரா என்பதல்ல; அசாமியரா, அசாமியர் அல்லாதவரா என்பதே! ஆனால், 2001இல் ஆட்சிக்கு வந்த வாச்பாயி தலைமையிலான பா.ச.க. அரசு, அதை இந்து – இசுலாமியர் சிக்கலாக்கியது.
இந்நிலையில், 2013இல் அசாம் அமைப்புகள் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 1985ஆம் ஆண்டு கையெழுத்தான அசாம் ஒப்பந்தப்படி, அசாமில் அயலாரைக் கணக்கெடுத்து வெளியேற்ற “தேசியக் குடிமக்கள் பதிவேடு” மேம்படுத்தப்பட வேண்டுமென ஆணையிட்டது. அது சரிவர செயல்படுத்தப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் அக்கணக்கெடுப்பை நடத்த 2016 திசம்பரில் புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அசாமில் வாழும் மக்கள், இத்தீர்ப் பாயங்களில் தங்கள் குடியுரிமையை மெய்ப்பிக்க 19 ஆவணங்களில் ஒன்றை எடுத்து வர வேண்டுமெனக் கேட்கப்பட்டன.
இக்கணக்கெடுப்பின் முடிவில், அசாமில் பெருமளவில் குடியேறியுள்ளவர்கள் இசுலாமியர்களே என்ற பா.ச.க.வின் வாதம் பொய்யானது. ஏனெனில், அசாமின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் “அசாமியர் அல்லாத அயலார்” எனக் கணக்கெடுக்கப்பட்ட 19 இலட்சம் பேரில் வெறும் 5 இலட்சம் பேர்தான் இசுலாமியர்கள். மீதமுள்ள 14 இலட்சம் பேர், வங்காளதேச, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்துக்கள் ஆவர். இந்து பாதுகாவலராக காட்டி வந்த பா.ச.க.வுக்கு இதுவொரு புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
எனவே, “வங்கதேசத்திலிருந்து வந்தேறிய பெரும்பான்மை இசுலாமியர்” என்ற தங்கள் கூற்றை மெய்ப்பிக்கும் நோக்கில் வங்கதேசத்தை ஒட்டி நிலப்பரப்பைக் கொண்டுள்ள பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இக்கணக்கெடுப்பை நீட்டிப்பு செய்யும் எண்ணத்திற்கு பா.ச.க. வந்தது. தங்களுக்கேற்ப சில மாநிலங்களில் மட்டும் இதைக் கொண்டு வந்தால் எதிர்ப்பு வரும் என்பதை உணர்ந்து, இப்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் “தேசியக் குடிமக்கள் கணக்கெடுப்பு” நடத்தப்படும் என பா.ச.க. அரசு தடாலடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அசாமில் குடிமக்கள் பதிவேடு பதிவது போல், தமிழ்நாட்டுக்கும் வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தரை, வங்கதேசத்திலிருந்து குடியேறி வந்தவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஏதிலிகளாக இங்கு வந்த தமிழீழத் தமிழர்கள் கிட்டத்தட்ட அனைவருமே சட்டப்படியான ஏதிலியர் ஆவர். அவர்களை யாரும் சட்டப் புறம்பாகப் புலம் பெயர்ந் தோர் இல்லை!
இங்குள்ள சிக்கல் என்பதே, ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் வடமாநிலங்களிலிருந்தும், பிற மாநிங்களிலிருந்தும் தமிழ்நாட்டிற்குள் குடியேறிக் கொண்டுள்ள வெளி மாநிலத்தவர்கள்தாம்!
ஏற்கெனவே நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் “உள் அனுமதிச் சீட்டு” (Inner Line Permit) முறை இருக்கிறது. (இப்போது அது மணிப்பூருக்கும் நீட்டிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது). இதன்வழியே, தங்கள் மாநிலத்தில் யார் நுழைகிறார்கள், யார் போகிறார்கள் என்றெல்லாம் அவர்களால் தெரிந்து கொள்ள முடிவதுடன், வெளியார் குடியேற்றத்தையும் அவர்கள் தடுத்து நிறுத்தித் தங்கள் தாயகத்தைத் தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டின் நிலைமை மிகமிக மோசமானது!
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சற்றொப்ப 44 இலட்சம் பேர் வெளி மாநிலத்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்த பொருளியல் அறிக்கையில், 2001-க்கும் 2011-க்கும் இடையில் தமிழ்நாட்டின் அயல் மாநிலத்தவர் எண்ணிக்கை கடந்த கணக்கெடுப்பைவிட 36 மடங்கு அதிகரித்துள்ளது என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டது.
எனவே, இன்றுள்ள நிலவரப்படி, சற்றொப்ப 1 கோடி வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறியுள்ளனர். சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் வளர்ச்சி மாவட்டங்களில் தான் இவர்களின் குடியேற்றம் அதிகமாக உள்ளது.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1951இல் நடைபெற்ற முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, “தேசிய குடிமக்கள் பதிவேடு” முதன் முதலாக எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1956இல் மொழிவழி மாநிலங்களாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. மொழிவழி தேசிய இனத் தாயகங்களாக இம்மாநிலங்களை உறுதி செய்வ தற்கு மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம் உறுதி கூறியது. இந்நிலையில், 1956 நவம்பர் 1-க்குப் பிறகு, தமிழ்நாட்டிற் குள் வந்த அயலார் குறித்த கணக்கெடுப்பு தேவைப் படுகிறது. புலம் பெயர்ந்தோர் குறித்த விவரங்கள் 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் இல்லை.
இவற்றின் காரணமாக, 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தோர் குறித்த கணக்கெடுப்புடன் “குடிமக்கள் பதிவேடு” தேவை என்று நாம் கூறுகிறோம்.
இப்போது, இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் “ஆதார்” அட்டை என்பது “குடியுரிமைக்கான அடையாள அட்டை அல்ல” என்ற அறிவிப்போடுதான் வழங்கப்பட்டு வருகிறது. அன்றைக்கு அவர் எங்கு குடியிருக்கிறார் என்பதற்கான ஆதாரம் மட்டுமே அது! ஆனால், இந்த அட்டைகளின் வழியே அவர்களுடைய மரபான வாழ்விடம் எதுவென கண்டறிய முடியாத நிலை இருக்கிறது.
அசாமில் தான் நினைத்ததற்கு மாறாக வெளியேற்றப் பட வேண்டிய அயலார் கணக்கில் பெரும்பாலோர் இந்துக்கள் என வந்ததற்குப் பிறகு, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, அதன்பிறகு “தேசிய குடிமக்கள் பதிவேட்டை” செயல்படுத்தலாம் என பா.ச.க. அரசு திட்டமிடுகிறது.
“குடியுரிமைச் சட்டத்தில்” திருத்தம் (Citizenship Amend ment Bill) முன்மொழிந்துள்ள இந்திய அரசு, பாக்கித்தான், ஆப்கானித்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்த இந்துக்கள், கிறித்துவர்கள், பார்சிகள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் இத்திருத்தத்தை முன்வைக்கிறது.
புலம் பெயர்ந்த இசுலாமியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறுகிறது. இவ்வாறு புதிய குடியுரிமை வழங்குவதற்கு 2008ஆம் ஆண்டை வரையறுப்பு ஆண்டாக வைத்துக் கொள்கிறது. 2008லிருந்து 2014ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்குள் வந்த இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்காகவே இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
ஆனால், இந்தப் பட்டியலில் இலங்கை இல்லை!
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கீழ் இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள் இந்துக்களே ஆயினும், கிறித்துவர்களே ஆயினும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஆரிய இந்திய அரசு விரும்பவில்லை!
சிங்கள பௌத்த இனவெறி அரசின் இனப்படு கொலைக்கு அஞ்சி, தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக் கையில் தமிழீழ மக்கள் ஏதிலியராகத் தங்கியுள்ளனர். “தேசிய குடிமக்கள் பதிவேடு” கணக்கெடுப்பில், அவர்களையும் இணைத்து அவர்களில் விரும்புவோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியும், விருப்பமில்லாதவர்களுக்கு “ஏதிலியர்” தகுதி வழங்கியும் அவர்களை அங்கீ கரிக்க வேண்டும். “சிறப்பு முகாம்” என்ற பெயரில், தமிழீழத் தமிழர்கள் மட்டுமின்றி எந்தவொரு வெளிநாட்டவரையும் அடைத்து வைத்து சித்திரவதை செய்யக் கூடாது!
அசாமில் இறுதிக் கணக்கெடுப்பில் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாதவர்களை தனி முகாமில் அடைத்து வைக்கக் கூடாது! வங்கதேசத்தவரை அந்நாட்டுக்குத் திருப்பி அனுப்பிட ஏற்பாடு செய்ய வேண்டும். பிற மாநிலத்தவரை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் 1956 நவம்பர் 1-ஐ வரம்பு நாளாகக் கொண்டு, “இந்தியக் குடிமக்கள் பதிவேடு – தமிழ்நாடு” உருவாக்கப்பட வேண்டும். 2020இல் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப் போகிறார்கள். அப்போதே, குடிமக்கள் வரைவுப் பதிவேட்டையும் அணியப்படுத்திவிட முடியும். தனியே கணக்கெடுக்க வேண்டியதில்லை. அதேநேரம், மோடி அரசு முன் வைத்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். அது, மதச்சார்பின்மை என்ற அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது!
இவ்வாறு, வரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் “இந்தியக் குடிமக்கள் பதிவேடு – தமிழ்நாடு” எடுத்ததற்குப் பிறகு, வடமாநிலத்தையும், வெவ்வேறு மாநிலத்தையும் தங்கள் மரபு வாழிடமாகக் கூறும் வெளிமாநிலத்து இந்தியக் குடிமக்களை அவரவர் மாநிலத்திற்கு திரும்ப அனுப்ப தீர்ப்பாயம் போன்ற கட்டமைப்பு ஏற்பாடு களைச் செய்ய வேண்டும்.
இப்பதிவேட்டின்படி, “அயல் மாநிலத்தவர்” எனக் கண்டறியப்பட்ட யாருக்கும் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
அலை அலையாக தமிழ்நாட்டிற்குள் வரும் வெளி மாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலை – தொழில் – கல்வி வாய்ப்புகளை பறிப்பதோடு, தமிழர் தாயகத்தின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டு அரசியலிலும் குறுக்கிடு கிறார்கள்.
இப்போதே, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் பேர் வரை வெளி மாநில வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சிறுபான்மை வாக்காளர்களாக அவர்கள் வந்து விட்டனர். என்னதான் தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளான தி.மு.க. – அ.தி.மு.க. ஆகியவை இனத்துரோகம் செய்து, வடஇந்தியாவுக்குத் தமிழ் நாட்டைக் காட்டிக் கொடுத்தாலும், வடநாட்டு வாக்காளர்கள் பா.ச.க.வைத் தான் ஆதரிப்பார்கள். காங்கிரசுகூட அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான்! மாநிலக் கட்சிகளை அவர்கள் ஆதரிக்கவே மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என்கிறோம்.
மொழிவழி தேசிய இனத் தாயகமாக தமிழ்நாட்டை தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டில் “தேசிய குடிமக்கள் பதிவேடு” நடத்தப்பட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது! மாறாக, குடிமக்கள் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கிறது!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாத இதழின் 2019 திசம்பர் மாத இதழில் வெளியான கட்டுரை இது)