தமிழர்களுக்கு எதிராக, தலைநகரிலும் மலையகத்திலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் ஓர் அங்கமாகவே, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிந்த தமிழ்க் கைதிகளில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில், குட்டிமணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின் இறப்பு, இன்னும் பேசும்பொருளாகவே இருக்கிறது.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தாமல், எந்தவோர் அரசாங்கமும் இலங்கையில் ஆட்சி நடத்தியதில்லை. 1942 முதல் 2018 வரையிலும் 76 வருடகாலத்தில் இலங்கை மக்கள், அவசரகால, பயங்கரவாத சட்டங்களின் கீழ்தான் அடக்கியாளப்பட்டார்கள்; அழிக்கப்பட்டார்கள். 83இலும் அவசரகாலச் சட்டமே மறைமுகமாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இலங்கைக்கான புதிய பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவசரகால, பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் ஜெனீவாவில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன. அதனடிப்படையிலேயே அவசரகால சட்டம் 2011 நீக்கப்பட்டது. எனினும், அதிலிருந்த அதிகாரங்கள் பல, ஜனாதிபதிக்கு கைமாறின. 2018 மார்ச் 6, கண்டி- திகன சம்பவத்துக்குப் பின்னர், சில நாள்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டம், 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின், மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டங்களிலான வலிகள், வேதனைகளை நன்கு அனுபவித்தவர்கள் தமிழர்கள். 1983 ஜூலைக் கலவரம், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோதுதான் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின்போதும் இச்சட்டம் அமுலிலிருந்தது. அவசரகாலச் சட்டத்தின் வலிகளை, சகல இனத்தினரும் அனுபவிக்கின்றனர். இவ்விரு சட்டங்கள் தொடர்பிலும், நீதிமன்றத்தில் வைத்து குட்டிமணி, அன்று கூறியவை, தீர்க்கதரிசனமாக இன்றிருக்கிறது.
“நாங்கள், சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்கவந்தவர்கள் அல்லர். எங்களுடைய போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நாடிநிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி, நாளை உங்களுக்கு ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதல்ல; இந்த ஆட்சியில் மீறப்பட்ட மனித உரிமைகள், பொறுப்புகூறல், உள்ளிட்டவையும் உள்ளடங்குகின்றன என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் மீளாய்வு செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளமை குட்டிமணியின் தீர்க்கதரிசனத்துக்கான காலந்தாழ்த்திய ஞானமாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.
(Tamil Mirror)