(விஸ்வா)
வடக்கை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கும் வேலைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு குற்றச் செயல் நடந்தால் அதனை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்தும் விதமான கருத்துக்கள் அக்காலங்களில் பரப்பப்பட்டன. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைவதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். பொது மக்கள் மேற்கொள்ளும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை குழப்புவதற்கு தயாராக பாதுகாப்பு தரப்பிலிருந்தே பலர் செயற்பட்டனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவுகளையும், விசாரணைகளையும் மேற்கொள்ள அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு செல்லவே மக்கள் அச்சமுற்றனர். காணாமல் போனவர்களின் உறவினர் வீடுகளுக்கு சென்று அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்றன.
முன்னாள் போராளிகள் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளுக்குச் செல்பவர்களால் அங்கிருக்கும் பெண்கள் கூட அச்சுறுத்தப்பட்டனர்.
ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்தனர். அவர்களால் மேற்கொள்ளப்படும் கருத்தரங்குகள் போன்றவை கூட குழப்பப்பட்டன. தெற்கில் நடைபெறும் ஊடக கருத்தரங்குகளுக்கு செல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊடகவியலளர்கள் சென்ற வாகனத்தை மறித்து அதற்குள் கஞ்சா கண்டுபிடித்தனர்.
இவற்றை விடவும், மத ரீதியான குழப்பங்கள் தெற்கில் மோசமாக நடைபெற்று வந்தன. முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்துக் கோவில்கள் என்பன தாக்கப்பட்டன. காவி உடையுடன் காவாலித்தனங்கள் அறங்கேற்றப்பட்டன.
முன்னைய அரசாங்கம், குற்றவாளிகளாக இருந்தாலும் தங்களுக்கு ஆதரவாக இருக்கின்றவர்களை- அடிவருடிகளாக செயற்படுகின்றவர்களை காப்பாற்றவும் அவர்களைப் பேணவும் தயாராக இருந்தது. விமர்சனம் செய்பவர்களைக் கூட எதிரிகளாகவே பார்த்தது.
நாட்டில் ஆட்சிமாற்றம் எற்பட்டதன் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையினை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமே. இந்த மாற்றத்தை பேணவும், முழுமையானதொரு ஜனநாயக சூழலை உருவாக்கவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதுதான் சரியானது.
இந்த நிலைமைகளை குழப்புவதோ, மீண்டும் ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க முயல்கின்ற சக்திகளுக்கு துணை போகும் நடவடிக்கையை மேற்கொள்வதென்பதோ அமைதியை விரும்பும் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
கடந்த வாரம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பானது அதிர்ச்சியையும், அதே வேளை பெரும் துயரத்தையும் ஏற்படுத்திய சம்பவமாகும். அதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்பு நிகழ்வுகளும் நியாயமானதே.
அடுத்ததாக, சுன்னாகத்தில் நடந்த புலனாய்வாளர்கள் மீதான வாள்வெட்டு சம்பவம் இந்த நிலைமைகளை வேறு திசைக்கு திருப்பும் ஒன்றாக அமைந்து விட்டது. இப்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம் ஒன்றும் வெளியானது. மரணித்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் படங்களையும் பிரசுரித்து ‘அசுத்தங்களை அகற்றுவோம்’ என்ற தலைப்பில் ‘ஆவா’ என்ற குழுவின் பெயரால், அந்த பிரசுரம் வெளியிடப்பட்டது. இனந்தெரியாத சிலர் அந்த பிரசுரங்களை பொதுமக்களுக்கு சில பகுதிகளில் விநியோகித்தும் உள்ளனர்.
இந்த பிரசுரத்தை வெளியிட்டவர்கள் முன்னைய காலத்தில் மக்களை அச்சுறுத்தும் வேலைகளை செய்தவர்கள் என்றே நம்பப்படுகின்றது. புலிக்கொடிகளுடன் இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிளில் முன்னர் வந்த ஆட்களே இதனையும் செய்திருக்கின்றார்கள்.
யுாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, களவு, போன்ற வன்செயல்களை புரிந்த ‘ஆவா’ எனப்படும குழுவின் பெயரால் இந்த பிரசுரம் வெளியிடப்பட்டதும், இப்போது அது தொடர்பில் பாதுகாப்பு படையினர். ஆராய்ந்து வருவதாக செய்திகள். வெளியாகியுள்ளன. வடக்கில் பல பாதாள குழுக்கள் இயங்குவதாகவும் புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் நிலையே உருவாகியுள்ளது.
மாணவர்களின் மரணம் தொடர்பிலும், சுன்னாகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலும் தென்னிலங்கையில் பல்வேறு கதைகள் அங்கிருக்கும் இனவாத சக்திகளால் பரப்பி விடப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெறும் சில சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக வைத்து அரசியல் நடத்தும் மஹிந்த அணியினரை கண்டிப்பதாக அமைச்சர் ஹரிசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அண்மையில் இவ்விடயங்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்திருக்கும் கருத்துக்கள் நேர்மையானதும் பொறுப்பு மிக்கதாகவும் அமைந்துள்ளமையினை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளமையினை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஒப்புக் கொண்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவங்களோ, குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோ அல்லது உயிரச்சுறுத்தல் போன்ற துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த சம்பவத்தை உடனடியாக அறிவிக்காமை அந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறு என்றும், அது தெளிவான விதி மீறல் செயற்பாடு என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
அந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வரையிலான காலத்தில் பெற்றோர் பட்ட கஷ்டங்களையும், இரண்டு உயிர்களின் பெறுமதியையும் நினைக்கும் போது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்துடன் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமானது குறித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளும் சீருடையில் இருக்காத காரணத்தினால், அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்பது அறியாமலேயே அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
இது ஒரு பொறுப்பான அதிகாரியின் பொறுப்பு மிக்க கருத்துக்கள் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஒரு சம்பவத்தை ஊதிப் பெருப்பித்து குழப்பநிலையை ஏற்படுத்தும் தரப்பினர் தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கிலும் இருக்கவே செய்கின்றார்கள்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் பொலிஸ் நிலையங்கள், சிறு இராணுவ முகாம்கள் மீது இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதை மனதில் வைத்து ‘குளவிக் கூட்டைக் கலைக்காதீர்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் செங்கை ஆழியான் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அப்போது அவரை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயங்கங்கள் கண்டித்தன.
இப்போதும் குளவிக் கூட்டை கலைப்பவர்கள் இருக்கத்தான செய்கின்றார்கள். குளவிக்கூடுகள் இன்னமும் அகற்றப்படவில்லை. அவை இருக்கவே செய்கின்றன.; அதற்கு கல்லெறிந்து, அவற்றைக் கலைத்து பொதுமக்கள் அதனால் தாக்கப்படும் நிலைமையை ஏற்படுத்த முயல்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாகவே இருக்க வேண்டும்.