ஏழு கட்சி கூட்டு உணர்ச்சிகர மகஜரை உதவி இந்திய தூதுவர் மூலம், இந்திய பிரதமருக்கு அனுப்பிய செய்தி பார்த்ததும் மெய் சிலிர்த்தது. எட்டுத்திக்கும் எம் தமிழன் அடிவாங்குகிறான் என ஆதங்கப்பட்ட பாரதிராஜாவின் அறிக்கை ஆதங்கத்தை தந்தது. தமிழன் பொங்கினால் கன்னடம் தாங்காது என வைகோ பேசியதும், சீமான் சீறியதும் சிரிப்பை தந்தது. இந்த மேடை பேச்சின் வீராதி வீரர்கள் தம் இனத்துக்கு ஈழத்தில் நடந்த அநீதிக்கு, அன்று எண்ணை வார்க்கும் செயலை செய்துவிட்டு இன்றும் அதேபோல் மேடையில் சீறினால் சிரிப்பு தானே வரும்.
ஆயுதங்களை ஒப்படையுங்கள் போர்நிறுத்தம் செய்ய அழுத்தம் கொடுப்போம் என ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரம் கூற, சற்று காலம் கடத்துங்கள் வரப்போவது வாஜ்பாய் அரசு என தாம் தேர்தலில் வெல்ல, ஈழப்போராட்டத்தை மேடை பேச்சாக்கி வாக்குகளுக்காக வஞ்சக வலை விரித்து, எம் இனம் வேட்டையாடப்படும் செயலுக்கு விளக்கு பிடித்தவர் வைகோ. இறுதிப் போரில் இறந்தது பிரபாகரன் மட்டுமே என்றால், நான் என்றும் வைகோவின் செயலை வாஞ்சையுடன் போற்றுவேன்.
காரணம் எந்த விடயத்திலும் தான்தோன்றித்தனமாக நான் என்ற அகந்தையில், இது என்முடிவு, என் வழி, என் கனவு என, ஹிட்லருக்கு பின் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்தவர் பிரபாகரன். அவரின் செயலால் வீழ்ந்த புலி போராளிகள் முதல், எண்ணிக்கையற்ற அப்பாவி பொது மக்கள் அழிவிற்கும் காரணமானவரும் அவரே. கொன்றவனை விட கொல்ல சொன்னவனுக்கு தான் தண்டனை அதிகம். தாயக விடுதலை வேட்கையில் களமாட வந்தவரை, சகோதர வேட்டையாட செய்தவர் பிரபாகரன்.
அவரின் அழிவு அவரை கண்மூடித்தனமாக நம்பியவருக்கு மட்டுமே பேரிழப்பு. ஆனால் யாதார்த்த நிலை அறிந்த எவரும் அவரின் இழப்பை ஒரு துன்பியல் சம்பவமாக பார்க்கவில்லை. பலர் வீடுகளில் அன்று தீபாவளி கொண்டாட்டம் நடந்ததை நான் அறிவேன். மரணபயத்தை மனதில் விதைத்து, மக்கள் விடுதலையை பெறமுயன்றவரின் மரணம் பலருக்கு மகிழ்ச்சியை தந்தது. எங்கே யுத்தநிறுத்தம் வந்து மீண்டும் அவர் புத்துயிர் பெற்றுவிடுவாரோ என, பயந்தவர் மனதில் பால் வார்த்தது வைகோ செயல்.
ஆனால் கொடிய விலங்கிற்கு விரித்த வலையில் புள்ளிமான்களும் மாட்டுவதுபோல நீடித்த யுத்தத்தில் மாட்டிய மக்களும், முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு அராஜகத்துக்கு பலியானது மட்டுமல்ல, எந்த நிலையிலும் தங்கள் தலைவன் தீர்க்கமான முடிவுதான் எடுப்பான் என மூளைச் சலவை செய்யப்பட்ட, உண்மையில் விடுதலையை நேசித்து, தங்கள் இளவயது சுகங்களை தியாகம் செய்து, உறவுகளை துறந்து, தாம் தூங்கும் வேளையிலும் மக்களை காக்கும் ஆயுதங்களை அரவணைத்த, உன்னதமான போராளிகளும், நந்திக்கடலில் காவியமானது எல்லோர் மனதிலும் நெருடலை தந்தது நிதர்சனம்.
ஹிட்லரின் பேராசைக்காக மூளைச் சலவை செய்யப்பட்ட நாஸிகள் பயன்படுத்தபட்டது போலவே, பிரபாகரனின் நான் என்ற அகந்தைக்கு புலி போராளிகள் பலியாகினர். அவரின் செயலுக்கு சங்கூதும் செயல் செய்த வைகோவும் நாம் தமிழர் என சீறும் சீமானும், கன்னடா தாங்காது என மேடையில் பேசிய வேளையில் கன்னடத்தில் தமிழர் தாக்கப்பட்டனர், வீடுகள் சூறையாடப்பட்டன, தமிழருக்கு சொந்தமான சொகுசு பேரூந்துகள் எரியூட்டப்பட்டன, தமிழ் மாணவர்கள் தெருவில் வைத்து செருப்படி வாங்கினர், உடுத்தது உடுத்தபடி லட்சம் தமிழர்கள் தமிழகம் திரும்பினர்.
மேடையில் பொங்கிய வைகோவாலும் சீறிய சீமானாலும் ஒன்றும் புடுங்கமுடியவில்லை. எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்க்க மட்டுமே இந்த வாய்சொல் மேடை பேச்சு வீரர்களால் செய்ய முடிந்த காரியம். அடுத்தவர் பிரச்சனையில் தாம் ஆதாயம் தேடும் தமிழக அரசியல் வாதிகளின் தொற்று நோய் ஒரு காலத்தில் விடுதலை பயிற்சி முகாங்களை வைத்திருந்த, அங்கு உயிர்ப்பயம் காரணமாய் வாழ்ந்திருந்த எம்மவருக்கும் தொற்றிவிட்டதோ என்ற எண்ணம், அண்மையில் கன்னட தமிழர் மீதான தாக்குதல் பற்றி இந்திய பிரதமருக்கு மகஜர் அனுப்பிய, எம்மவர் பற்றிய செய்தியை பார்த்ததும் எனக்கு ஏற்ப்பட்டது.
தன் முதுகுவலிக்கு தீர்வு காணாது அடுத்தவன் பல்வலிக்கு, பரியாரியார் வீடுநாடும் பெரும்தகைகள் தான் இவர்கள் என்ற எண்ணம், என் மனதில் எழுகிறது. இரணைமடு நீர் விவகாரம் என் மண்டையுள் நண்டு புகுந்தது போல் குடைகிறது. கன்னட தமிழன் தாக்கப்பட்டது தண்ணீர் அரசியலால். அவன் கண்ணீருக்கு காரணமான அதே தண்ணீர பகிர்வு பற்றிய பிரச்சனை, வடக்கின் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களையும் சேர்ந்த மக்களை தம்முள் மோதவைக்கும் நிலையை உருவாக்காவிட்டாலும், அந்த மாவட்டங்களின் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற பிரதிநிதிகளை தம்முள் மோதவைத்தது உண்மை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் யாழ் நீர் பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்ட வேளையில் ஏற்ப்பட்ட முரண்பாடு அது.
இன்றுவரை அது அனுமன் வால் போல முடிவின்றி நீள்கிறது. அண்மையில் அதற்கான தீர்வுபற்றி முடிவுசெய்ய கூடுவதாக அறிவித்து வடமாகாணமுதல்வர் தலைமையில் கூடிய கூட்டில் அதுபற்றி எதுவும் பேசப்படவில்லை என்ற, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பத்திரிக்கை அறிக்கை, இரணைமடு விடயம் இப்போதைக்கு தீராது, தீர்க்கப்படாது என்ற எண்ணத்தை விதைக்கிறது. ஒரு விடயத்தை ஆறப்போட்டால் அப்போதைய தலையிடியில் இருந்து தப்பலாம் என்பதை விசாரணை குழு, கமிசன்கள் என அமைத்து அறிக்கைகள் பெறுவதன் மூலம் தவிர்க்கலாம் என்பதை, புதிய நடைமுறையாக கையாளும் தந்திரஅஸ்த்திரம் தற்போது வடக்கின் முதல்வர் வசம் அகப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் வருகிறது.
வடமாகாண சபையின் ஐந்து மாவட்டங்களில் அருகருகே உள்ள இரண்டு மாவட்டங்களும், தம்முள் நீராதாரத்தை பகிர்ந்திட முடியாத நிலை, இரணைமடு நீரை யாழ்ப்பாண குடிநீர் தேவைக்காக பயன்படுத்தவே திட்டமிடப்பட்டது. மாறாக யாழ்மாவட்ட விவசாய தேவைக்காக அல்ல. அதனையே தீர்க்க கூடி முடிவெடுக்காத தமிழ் கட்சிகள் இன்று விவசாய தேவைக்காக காவிரியில் நீதிமன்ற ஆணைப்படி திறக்கப்பட்ட தண்ணீரால் தாக்கப்பட்ட கன்னட தமிழரை காக்க, ஒன்று கூடி மகஜர் தயாரித்து இந்திய துணை தூதுவர் மூலம் பிரதமருக்கு அனுப்பியது, தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதாலா? அல்லது தொப்புள்கொடி உறவு துடித்ததாலா. காவிரிநீரால் கன்னடா அளவுக்கு தமிழகத்தில் தாக்குதல் நடைபெறவில்லை என்பதுமட்டுமே உண்மை. ஆனால் அங்கும் தாக்குதல் நடந்தது.
இந்திராவின் கரிசனையை ஈழவிடுதலை போராட்ட காலத்தில் பெற்ற நாம் இந்திய அமைதிப்படையை எதிர்த்தபோது இழந்தோம். அதன் பின் பிரபாகரன் இந்தியாவின் தலைவரையே பரலோகம் அனுப்பும் செயலை செய்ததால் வெறுப்புக்கு ஆளானோம். ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய கொள்கைவகுப்பாளர் பல மாநிலத்து பலமொழிபேசும் அதிகாரிகள். விஜய் நம்பியார் ஐ நாவில் எமக்கு எதிரான செயலில் ஈடுபட்டார் என கூறி, மலையாளி என முத்திரைகுத்தி கேரளத்தை முறைத்தோம். திருப்பதியில் விசேட தரிசனம் மகிந்தவுக்கு வழங்கப்பட்டதால் ஆந்திரரை வெறுத்தோம். இப்போது கன்னட கலவரம் பற்றி இந்திய பிரதமரிடம் முறையிடுகிறோம். ஆக ‘’நாம் தமிழர் இயக்க’’ சீறும் சீமானின் வாரிசுகளாக, அவர் வழி தொடர்பவர்களாக நாமும் மாறுகிறோமா?
இணைந்திருக்கும் உள்ளூர் மாவட்ட, குடி நீர் பிரச்சனையில் ஒன்றுபடாத நாம், அயல்நாட்டு மாநில விவசாய நீர் பிரச்சனையால் ஏற்பட்ட, கன்னட கலவரத்தில் மட்டும் ஒன்றுபட்டு மகஜர் கையளிப்பது நீலிக் கண்ணீருக்கு சமம். தவிரவும் தன் நாட்டு மாநில பிரச்சனைகளில் ஓடும் புளியம்பழமும் போலவே செயல்ப்படும் இந்திய பிரதமர், இலங்கை தமிழர் விடயத்தில் இதுவரை என்ன காத்திரமான செயலை செய்தார் என்பதை அறிந்தும் அறியாதவர் போலவே இவர்கள், கன்னட தமிழரை காத்திட வேண்டி தோத்திரம் சொல்கின்றனர். ஈழத் தமிழர் பிரச்சனை போலவே காவிரி நீர் பிரச்சனையும் நீண்ட வரலாற்று பின்னணி கொண்ட, ஏறச் சொன்னால் எருதுக்கும், இறங்கச் சொன்னால் முடவனுக்கும் ஏற்படும் மன நிலை போன்றது.
முதலில் உள்வீட்டு பிரச்சனையில் ஒன்றுபட்டு, குடாநாட்டு குடிநீர் பிரச்சனக்கு ஒத்த முடிவு எடுங்கள். அதற்கு ஏழு கட்சிகள் மட்டும் அல்ல, இருக்கும் அத்தனை தமிழ் கட்சிகளும் ஓரணியில் வாருங்கள். உங்கள் ஒன்றுபட்ட செயல் மூலம் அடம்பன் கொடிபோல் திரண்டால் எதை சாதிக்கலாம் என்பதை நிரூபியுங்கள். அதன் பின் உலகத்தமிழர் யாருக்கு இன்னல் நேர்ந்தாலும் அந்த நாட்டு தலைவருக்கு மகஜர் அனுப்புங்கள். தற்போதைக்கு வேண்டுமானால் பிரான்ஸ் அதிபருக்கு அங்கு நடக்கும் தமிழர் நிகழ்வுகளில் மிளகு//மிளகாய் தூள் கலந்த கண்ணீர் புகை அடிக்கும் காடையர்களிடம் இருந்து அப்பாவி தமிழரை பாதுகாக்கும்படி அவசர தந்தி அனுப்புங்கள். உங்கள் தேர்தல் காலத்து காமதேனுக்களை காத்து, உங்கள் ஆசனங்களை தக்கவைக்க விரைந்து செயல்ப்படுங்கள்.
(ராம்)