சம்பந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு, அரசியல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தல் காலம் முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து விலகும் எண்ணம் எதையும், சம்பந்தன் இந்தத் தருணம் வரையில் வெளிப்படுத்தவில்லை.
மாறாக, தன்னால் செய்ய முடியாத காரியங்களை, தன்னுடைய நிழலாக கருதும் எம்.ஏ. சுமந்திரனை முன்னிறுத்தி அவர் செய்து வருகிறார். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகத் தன்னால் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களுக்கு, சுமந்திரனை அவர் முன்னிறுத்தி இருப்பதும் அதன் போக்கில்தான்.
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னராக தமிழர் அரசியலில், சம்பந்தனின் தலைமைத்துவம் என்பது தவிர்க்க முடியாத அம்சங்களைக் கொண்டது. விடுதலைப் புலிகளின் ஆளுகையோடு தோற்றுவிக்கப்பட்ட கூட்டமைப்பு, அவர்களின் காலத்தின் பின்னரும் ஓர் அரசியல் சக்தியாக நிலைத்து நின்றமைக்கு, சம்பந்தனின் அனுபவமும் அணுகுமுறையும் முக்கிய காரணங்களாகும்.
2010 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் வெளியேறி, தனிக்கட்சி அமைத்துக் கொண்ட பின்னரும், கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற தோரணையை தக்க வைப்பதற்காக, சம்பந்தன் மிகத் தீவிரமாக செயலாற்றினார். அதுதான், புலிகள் காலத்துக்குப் பின்னரான கடந்த 13 ஆண்டுகளாக, கூட்டமைப்பு நிலைத்திருப்பதற்கு காரணம்.
அத்தோடு, இந்தியாவோடும் மேற்கு நாடுகளோடும் அவர் பேணிக் கொண்ட இராஜதந்திர இணக்கம் (!) கூட்டமைப்பை பாரிய பிளவுகள் இன்றி நிலைபெறவும் காரணமானது. ஆனால், தன்னுடைய காலத்துக்குப் பின்னரான கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பில், அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
தமிழ்த் தேசிய அரசியலில் கட்சிகளும் இயக்கங்களும், பல்கிப்பெருகியமைக்கான அடிப்படைக் காரணம், அந்தக் கட்டமைப்புக்களுக்குள் பெரும்பாலும் ஜனநாயக வெளி பேணப்படுவதில்லை. அதுபோல, ஒற்றைத் தலைமைத்துவம் தொடர்பிலான பேராசையால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்வதற்கான சந்தர்ப்பங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அதனால், துரோகி அடையாளப்படுத்தல்கள் இலகுவாக முன்வைக்கப்பட்டு கட்சிகள், இயக்கங்களை விட்டு பலரும் விலக்கப்பட்டு இருக்கிறார்கள்; அல்லது, விலகியிருக்கிறார்கள். அதன் பின்னர், அவர்கள் துப்பாக்கிகளுக்கு இரையாகாமல் இருந்தால், புதிய கட்சி அல்லது இயக்கத்தை ஆரம்பித்து, தலைவர்கள் ஆவார்கள்.
அருணாச்சலம் மகாதேவாவை தமிழினத் துரோகியாக சித்திரித்த ஜி.ஜி. பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை தோற்றுவித்தார். அவர் போட்ட விதையே, அவரைத் தமிழரசுக் கட்சி வடிவில் கருவறுத்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியை பெரும் நம்பிக்கையாகக் கொண்டிருந்த இளைஞர்கள், அது தோற்றுப்போன தருணத்தில், ஆயுதப் போராட்ட இயக்கங்களைத் தொடங்கினார்கள். அப்போதும், கூட்டணியை ‘தமிழினத் துரோகி’கள் என்றே இளைஞர்கள் அடையாளப்படுத்தினார்கள்.
டெலோவும் புளொட்டும் தங்களின் இயக்கங்களுக்கு உள்ளேயே நிகழ்த்திய பல படுகொலைகளை, புலிகள் மீது சுமத்திவிட்டு தப்பித்துக் கொண்ட வரலாறும் உண்டு. இறுதியாக, புலிகள் அனைத்து இயக்கங்களையும் கட்சிகளையும் துப்பாக்கி முனையில் அடக்கிவிட்டு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆனார்கள்.
இந்த மனநிலையில் இருந்து, தமிழர் அரசியல் சிந்தனை பெரும் அனுபவங்களுக்குப் பின்னாலும் கூட, கற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவு போன்றதொரு படுகுழிக்குள் வீழ்ந்த பின்னரும் கூட, கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் பெரும் அபத்தம்.
துரோகி அடையாளப்படுத்தல் அரசியலை ஜி.ஜி. பொன்னம்பலம் என்று ஆரம்பித்து வைத்தாரோ, அது ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த பின்னரும்கூட, இன்னமும் அடங்கவில்லை. சம்பந்தன், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருக்கும் போது, பொன்னம்பலத்தின் பேரனான கஜன் பொன்னம்பலமும் அதே துரோக அரசியலை முன்னிறுத்திவிட்டுத்தான் புதிய கட்சி தொடங்கினார்.
ஏன், சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு, முதலமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்க்கப்பட்ட சி.வி. விக்னேஸ்வரனும்கூட, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை நோக்கி துரோக பாடல் பாடித்தான், புதிய கட்சியை ஆரம்பித்தார். இன்றைக்கு அவர், ரணிலுக்கு ஆதரவளித்து செயற்படுகின்ற நிலையை, அவரது கட்சியைச் சேர்ந்த கந்தையா அருந்தவபாலனே துரோக அரசியலாக சித்திரிக்கிறார். கட்சியினரிடம் கலந்தாலோசிக்காது, விக்னேஸ்வரன் தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
தமிழர் அரசியலில் ஜனநாயக மாண்பு பெரும்பாலும் பேணப்படுவதில்லை. அல்லது, அதற்கு யாரும் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டதில்லை என்பதற்கு, கூட்டமைப்புக்கு உள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளும் விக்னேஸ்வரனின் கட்சிக்கு உள்ளும் தலைமைத்துவத்துக்கும் இரண்டாம் கட்ட தலைமைகளாக அடையாளம் பெறுபவர்களுக்கும் இடையில் நிகழும் முரண்பாடுகள், முட்டல் மோதல்களைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்த் தேசிய அரசியலில் ஒருவர், கட்சி அல்லது இயக்கமொன்றுக்கு தலைவராக வந்துவிட்டால், அவரின் ஆயுள்பூராவும் அந்தப் பதவியில் இருந்துவிட நினைக்கிறார்கள். சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, கஜன் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன் என்று, இன்று இருக்கின்ற அனைவருமே அதற்கான சாட்சிகள்.
அப்படியான நிலையில், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து, சம்பந்தனை விலகக் கோரும் நிலை என்பது ஆச்சரியத்துக்குரியது.
ஏனெனில், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்,து சம்பந்தனை விலகக்கோரும் செல்வம் அடைக்கலநாதன், டெலோவின் தலைமைத்துவத்துக்கு வந்ததில் இருந்து, அதன் அதிகார பதவியில் மாற்றங்களைச் செய்ய, அவர் ஒருபோதும் சம்மதிக்கவில்லை. பெயருக்கு பதவிகளை உருவாக்க அவர் இணங்கி இருக்கிறாரே அன்றி, அந்த இயக்கத்தின் அதிகாரம்மிக்க தலைவராக செல்வமே இன்றுவரை இருக்கிறார்.
செல்வத்துக்கோ கூட்டமைப்பின் இன்னொரு கட்சியின் தலைவருக்கோ, சம்பந்தனின் பதவி விலகல் அவசியமாகத் தோன்றுவது, சம்பந்தனின் காலத்துக்குப் பின்னராக, கூட்டமைப்பில் தங்களின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் சார்ந்த போக்கிலாகும்.
ஏனெனில், சம்பந்தனின் தலைமைத்துவத்தில் இருந்தது போன்றதொரு சூழல், சம்பந்தன் இல்லாத கூட்டமைப்பில் தங்களுக்கு வாய்க்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், கூட்டமைப்பைப் பதிவு செய்து, அதில் தங்களின் இடத்தை உறுதிப்படுத்த நினைக்கிறார்கள்.
சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது, கூட்டுத்தலைமையால் வழிநடத்தப்பட வேண்டும் என்கிற விடயமும் செல்வத்தாலும் சித்தார்த்தனாலும் முன்வைக்கப்படுவதும் அதன்போக்கில்தான்.
அத்தோடு, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இதுவரை காலமும் தமிழரசுக் கட்சி வைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே, எதிர்காலத் தலைமை சுழற்சி முறையில், டெலோவுக்கு அல்லது புளொட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற விடயம் முன்வைக்கப்படுவதும் அதனால்தான்.
கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், அதைக் கட்சியாக பதிவு செய்ய சில நடவடிக்கைகள் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான யாப்பை எழுதும் பணிகளும் நடந்தன. ஆனால், கூட்டமைப்பைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்களுக்கு, கிளிநொச்சியில் இருந்து தொலைபேசி அழைப்பெடுத்த சுப. தமிழ்ச்செல்வன், அவ்வாறான நடவடிக்கைகள் தேவையில்லை என்றார்.
கூட்டமைப்பைப் பதிவு செய்யப்படுவதை புலிகள் விரும்பவில்லை. அதனால்தான், அது பெயரளவிலான கூட்டமைப்பாக, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்குள் சுருங்கும் நிலை ஏற்பட்டது. அந்த நிலையை, புலிகளின் காலத்துக்குப் பின்னர், தமிழரசுக் கட்சி கெட்டியாக பிடித்துக் கொண்டது.
கூட்டமைப்பு என்றால் வீட்டுச் சின்னம்; அதைத் தமிழரசுக் கட்சி என்றைக்கும் விட்டுக் கொடுக்காது. அதுபோல, சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரும் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுக்காது.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டங்களுக்குள் நடைபெறும் வெட்டுக் குத்துகள், குளறுபடிகளைப் பார்த்தாலே, அது புரிந்துவிடும்.
அதுபோல, சம்பந்தன்கூட தன்னுடைய காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியிடம் இருக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றார். எந்தவொரு தருணத்திலும் அது, டெலோவிடமோ புளொட்டிடமோ செல்வதை அவர் விரும்பவில்லை.
ஏனெனில், தமிழரசுக் கட்சிக்கு ஜனநாயக அரசியலில் பெரும் பாரம்பரியம் இருப்பதாகவும் தமிழ் மக்களை வழிநடத்தும் தகைமை அதற்கே இருப்பதாகவும் சம்பந்தன் நம்புகிறார்; அல்லது, அந்த மேலாதிக்க நிலைப்பாட்டில் இருக்கிறார்.
அப்படியான கட்டத்தில், சம்பந்தன் உயிரோடு இருக்கும் போதே கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றங்களைச் செய்துவிடலாம் என்று நினைத்தால், அது பகற்கனவாக மாத்திரமே இருக்கும்.