(புருஜோத்தமன் தங்கமயில்)
காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர்களும், அது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.
அண்மைய நாட்களில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் இடையில் மேற்சொன்ன திருமணம் மாதிரியான, சூழலொன்று தமிழ் மக்கள் பேரவையினாலும், சில பொது அமைப்புகளினாலும் உருவாக்கப்பட்டது.
ஆனால், அது 21 நாட்களுக்குள்ளேயே முறிந்து போயிருக்கின்றது. நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுரேஷ் பிரேமசந்திரனும் கடந்த சில நாட்களாக, ஊடகங்களிடம் தமது பக்க நியாயங்களைப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் இருவரையும் நம்பியிருந்தவர்கள், விரக்தியின் உச்சத்தில், சமூக ஊடகங்களில் அழுது புலம்புகிறார்கள். ஆனால், பேரவைக்காரர்களோ, பொது அமைப்புகளின் முக்கியஸ்தர்களோ இந்த முறிவு பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தமது வேலைகளில் மூழ்கிவிட்டார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், அவரைக் கட்சித் தலைவராக முன்னிறுத்துமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அந்தக் கோரிக்கையை புறந்தள்ள முடியாத மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைமைப் பொறுப்பை மைத்திரியிடம் விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது.
ஆனால், கட்சித் தலைமைப் பொறுப்பை விட்டுக்கொடுத்தாலும், கட்சிக்குள் தன்னுடைய ஆளுமையைச் செலுத்த வேண்டும் என்பதில் அவரும், அவருக்கு ஆதரவான தரப்பினரும் குறியாக இருந்தனர்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கூட்டு அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படாத மஹிந்த தரப்பினர், கூட்டு எதிரணியாகப் பலம்பெறுவது சார்ந்து சிந்தித்தனர்.
இன்றைக்கு, மைத்திரிக்குப் பெரும் தலையிடியாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள்.
அதற்காக, கூட்டு எதிரணி எடுத்த அஸ்திரம் மிகப்பெரியது. அதாவது, சுதந்திரக் கட்சிக்குள் மீளவும் ஆளுகை செலுத்துவதற்காகப் புதிய கட்சியொன்றை பஷில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு உருவாக்கியிருக்கின்றது. தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து, தாமரை மொட்டுச் சின்னத்தையும் பெற்றிருக்கின்றது.
ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள நினைப்பதாகக் கூறிக்கொண்ட (தமிழ் மக்கள் பேரவை) ஒருங்கிணைத்த அணியினால், பொதுச் சின்னத்தைப் பெற முடியவில்லை. அல்லது, சின்னம் தொடர்பிலான இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை. அதனாலேயே, அந்தத் கூட்டணி முறிந்து போயிருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக, இந்தக் கூட்டணியை அமைப்பதற்காக, நாளுக்கு நாள் இருதரப்பு, முத்தரப்பு பேச்சுகள் என்று பல மணிநேரங்களைப் பேசியே கழித்திருக்கின்றார்கள்.
பேரவை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றன. ‘பேரவை அரசியல் கட்சியாக மாறாது’ என்று சி.வி.விக்னேஸ்வரனை இணைத்துக் கொள்வதற்காக பேரவைக்காரர்கள் ஆரம்பத்தில் வேண்டாவெறுப்பாக கூறினாலும், பேரவையை தேர்தல் அரசியலில் ஆளுமை செலுத்தும் தரப்பாக முன்னிறுத்த வேண்டும் என்பது பிரதான குறியாகவே இருந்தது.
ஆனால், அரசியல் நோக்கமும் விரும்பமும் மாத்திரமே எல்லாவற்றையும் தந்துவிடுவதில்லை. அவற்றை அடைவதற்கான செயற்திறனும் அர்ப்பணிப்புமே வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன.
‘பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் இல்லையென்றால், ‘எழுக தமிழ்’ போன்ற நிகழ்வுகளைப் பேரவையிலுள்ள வைத்தியர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகளின் முக்கியஸ்தர்களினால் ஒழுங்கமைக்க முடியாது. ஏனெனில், அவர்கள் ‘வியர்க்க விறுவிறுக்க’ வீதியில் இறங்கி வேலைசெய்யும் செயற்பாட்டாளர்கள் அல்ல; மாறாக, மூடிய அறைகளுக்குள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள்.’ என்று, பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலம்முதலே, இந்தப் பத்தியாளர் கூறிவருகின்றார்.
பேரவை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்கிற தனி ஆளுமையை மாத்திரம் முன்னிறுத்தும் போதே, அதன் செயற்திறன் தமிழ் மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடுகளும் கருத்துகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருந்த போதிலும், பேரவைக்காரர்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகளை அவர் பல தடவைகள் நிராகரித்த போதிலும், அவரிடமே தங்கியிருக்கும் சூழல் என்பது பேரவையின் படுதோல்வியாகும். அந்தப் படுதோல்வியின் நீட்சியாகவே பேரவை அமைத்த கூட்டணியின் முறிவையும் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, தான் ஓரங்கட்டப்படுகிறேன் என்று தெரிந்த போதிலும், தேர்தல் வெற்றி, ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளத்தில் தங்கியிருக்கின்றது என்கிற நிலையில், சுரேஷ் பிரேமசந்திரன் கடந்த பொதுத் தேர்தல் வரையில் காத்திருந்தார்.
ஆனால், பொதுத் தேர்தலில் அவர் தோற்றதும், ‘இனிக் கூட்டமைப்புக்குள் இருந்தும் பயனில்லை; வேறு மார்க்கங்களை நாடியே ஆக வேண்டும்’ என்கிற நிலையில், பேரவை ஆரம்பிக்கப்பட்டதும் அதை அவர் பற்றிக்கொண்டார். தமிழ்த் தேசிய அரசியலில், கொள்கை கோட்பாட்டு அரசியல் மாத்திரமல்ல, தேர்தல் வெற்றி அரசியலும் முக்கியமானது. வெற்றிபெறுகின்றவர்களின் குரலே, அதிகமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றது. தோல்வியுற்றவர்களின் குரலை, அதிக தருணங்களில் யாருமே கண்டு கொள்வதில்லை.
அப்படியான நிலையில், சுரேஷ் பிரேமசந்திரனின், தேர்தல் வெற்றி பற்றிய எதிர்பார்ப்பையும் அது தொடர்பிலான செயற்பாடுகளையும் புறந்தள்ள முடியாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையேற்காத, புளொட் அங்கம் வகிக்காத தேர்தல் கூட்டணி, புதிய சின்னத்தில் மக்களிடம் சென்றால், வெற்றி கிடைக்காது என்கிற நிலையிலேயே, அவர் புதிய சின்னத்தைப் பெறுவது தொடர்பில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.
அதுபோல, கடந்த சில தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தையும் அவர் விரும்பவில்லை.
புதிய தேர்தல் கூட்டணி பற்றிய ஆரம்ப கட்ட உரையாடல்களின் போது, பேரவை முக்கியஸ்தர் ஒருவர், “சைக்கிள் சின்னத்திலா போட்டியிடப் போகின்றீர்கள்?” என்று சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டராம். அதற்கு அவர் “…இல்லை! தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கின்ற சின்னத்தில் பயணிப்பது எனக்கும் தொடர் தோல்விகளையே பரிசாக வழங்கும்…” என்றார்.
ஈ.பி.ஆர்.எல்.எப்இன் ‘பூ’ சின்னத்தை அவர் முன்னிறுத்தாமல் இருப்பதற்கும் கடந்த தேர்தல்களில் ‘வீட்டு’ச் சின்னத்தில் தங்கியிருந்ததற்கும் தற்போது ‘சைக்கிள்’ வேண்டாம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியனுக்குள்’ சங்கமிப்போம் என்பதற்கும் தேர்தல் வெற்றி என்கிற விடயமே காரணம்.
வீரசிங்கம் ஆனந்தசங்கரியை, 2004 பொதுத் தேர்தல் முதல் தமிழ் மக்கள் புறக்கணித்துவரும் நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தோல்வியின் கட்சியாகவே இருந்து வருகின்றது.
ஆனாலும், கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தை முன்னிறுத்திக்கொண்டு, முன்னோக்கி வர முடியும் என்று தமிழரசுக் கட்சியின் அதிருப்திக் குழுவும், சுரேஷும், பேரவைக்குள் இருக்கின்ற சிலரும் ஆரம்பம் முதலே நம்பி வருகின்றார்கள்.
அதன்போக்கிலேயே, பொதுச் சின்னம் என்கிற விடயத்தைப் புறந்தள்ளி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் உதய சூரியனுக்குள் இழுக்க நினைத்தார்கள். ஆனால், உதய சூரியனுக்குள் சென்றும் தோல்வியைச் சந்திப்பதைக் காட்டிலும், தமது அடையாளத்தோடு தோல்வியைச் சந்திப்பது ‘கொள்கை – கோட்பாடு’ என்கிற உரையாடல் வெளியில், தன்னை முதன்நிலையில் வைத்துக் கொள்ள உதவும் என்று கஜேந்திரகுமார் கருதுகின்றார். அதனாலும், புதிய கூட்டணி முறிந்து போயிருக்கின்றது.
தற்போதைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் வரும் அணி, பேரவையின் ஒரு தரப்பின் அனுசரணையோடு வரப்போகும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மூன்று தரப்புகளும் தமிழ்த் தேசிய வாக்குகளைப் பங்கிடப்போகின்றன. அதுவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வட்டார முறைமை முதன்மை பெறுகின்ற சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்புகளை இந்த நிலை பிரகாசப்படுத்தப்போகின்றது.
பேரவை அமைக்க நினைத்த கூட்டணி முறிந்து போய், அவர்களின் செயற்திறனற்ற நிலை வெளிவந்ததால் கூட்டமைப்பு மீதான அதிருப்தி வாக்குகளும் மீளவும் கூட்டமைப்பின் பக்கமே செல்லும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
கூட்டமைப்புக்குள், அதிக ஆசனங்களைப் பெறுவதிலும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவிகளிலும் தமிழரசுக் கட்சி கவனமாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில், எதிர்த்தரப்பின் குழப்பங்கள், கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்கும் மறைமுகமாக உதவுகின்றன.
இந்த நிலைகளினால், கூட்டமைப்புக்கு மாற்றான ‘புதிய அணி’ என்கிற விடயமும் அது தொடர்பிலான உரையாடல்களும் இனிச் சிறிது காலத்துக்கு பெரிதாக எழாது. எழுந்தாலும், அது மக்களிடம் கவனம் பெறாது.
அவர்களின் செயற்திறனற்ற நிலை என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் எதிர்கால நம்பிக்கைகளைச் சிதைத்துவிட்டிருக்கின்றது. ஒருவகையில் பேரவையின் இந்தச் செயற்பாடுகள், பொறுப்பற்ற தரகர்களின் நிலையை ஒத்தது.