2004ஆம் ஆண்டு கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆனந்த சங்கரியுடன் முரண்பட்டு அடி தடி ஏற்பட்டது. (செய்தியாளராக இருந்ததால் அடிதடி சண்டையை என்னால் நேரில் பார்க்க முடிந்தது)
இறுதியில் பொலிஸாரே விலக்குப் பிடித்தனர். அதன் பின்னர் சின்னம் குறித்து எழுந்த பிரச்சினையில், அமரர் ரவிராஜ் யோசனையின் படி வீட்டுச் சின்னம் தெரிவானது. பின்னர் ஆனந்த சங்கரி, முகுந்தன் ஆகிய ஒரு சிலரைத் தவிர, தமிழர்விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் பலரும் தமிழரசுக் கட்சியில் இணைந்தனர்.
அந்தக் கட்சி, பின்னர் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக விளங்கியது. வீட்டுச் சின்னத்திற்கு முன்னர் பொதுச் சின்னம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் காலம் என்பதால் புதிய சின்னம் ஒன்றை பெறுவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வீட்டுச் சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
— ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியபோது புலிகள் இணக்கம் தெரிவித்தனர். ஆனால் கூட்டமைப்பு உருவாக்கத்தில் புலிகள் தலையிடவில்லை.
எனினும் கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் மூன்றாம் நபர்கள் மூலமாக சில யோசனைகளை முன்வைத்தனர்– (குறிப்பாக 2004 ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் விடயம்)–
1999 ஆம் ஆண்டு அமரர் குமார் பொன்ம்பலத்தின் வீட்டில் உருவாக்கப்பட்ட, பதினொரு தமிழ் கட்சிதான் பின்னர் தமிழ்க் கட்சி கூட்டமைப்பாக செயற்பட்டு, பின்னாலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறியது.
பதினொரு கட்சிகளின் கூட்டமைப்பில் ஈபிடிபி தவிர்ந்த, அதாவது புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தொழிலாளா் கங்கிரஸ் ஆகியவை அங்கம் வகித்திருந்தன. (இது பற்றிய தகவல்கள் இன்னமும் உண்டு. ஆனால் அவற்றை இங்கு எழுத முடியாது)
2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குமார் பொன்னம்பலம் கொலை செய்ய்ப்பட்டார். ஆனாலும் அவருடைய முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
2001 ஆம் அண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பில் வசித்த பிரபல வர்த்தகர் வடிவேற்கரசன் முக்கிய முக்கிய பங்காற்றினார். அவரது வீட்டில்தான் சந்திப்புகள் இடம்பெற்றன.
அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவராக இருந்த கைலாசபிள்ளை, சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், தில்லைக் கூத்தன் எனப்படும், அமரர் தில்லைநடராஜா, நிமலன் காத்திகேயன், ஆகியோரும் அந்த சந்திப்புகளில் பங்கெடுத்தனா்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிக்காந்தா, கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஆகிய நான்கு பேரும் கையொப்பமிட்டனர்.
கொழும்பில் உள்ள வடிவேற்கரசனின் இல்லத்தில்தான் உட்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 2001ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு ஹொலிடேயின் ஹோட்டேலில் வைத்து வெளியிடப்பட்டது.
கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளம் மட்டக்களப்பில் போடப்பட்டது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உட்பட பலர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து உரையாடினார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (அப்போது செய்தியாளராக இருந்தவர்) ஜெயானந்தமூா்த்தி உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர்.
2001 இல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்களாகவே கிளிநொச்சிக்குச் சென்று தமிழச் செல்வனை சந்தித்து, பின்னர் உறவை ஏற்படுத்தினர். பாவ மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
நோர்வேயின் சமாதான பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர்களுடன் முரண்படாமலும் அதேவேளை அரசியல் ரீதியாகவும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக புலிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.
கூட்டமைப்பு உருவாக்கம் பற்றிய செய்திகளை, அன்று ஸ்ரீகஜனும் நானும் வீரகேசரியில் பணியாற்றியபோது எழுதியிருந்தோம். நான் உட்பட தற்போது வீரகேசரி ஆசிரியராக பதவி வகிக்கும் எஸ். ஸ்ரீகஜன் ஆகிய இருவரும் நேரடி சாட்சியங்களாக இருக்கின்றோம்.
(மற்றுமொரு சாட்சியான தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் பி. ரவிவர்மன் இன்று உயிருடன் இல்லை)
வவுனியாவில் உள்ள மூத்த செய்தியாளா் பி. மாணிக்கவாசகம் அன்று இது பற்றிய விடயங்களை, ஞாயிறு வீரகேசரியில் எழுதினார்.
கூட்டமைப்புக்கான உடன்படிக்கை கையிலைநாதனின் வீட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு பற்றிய செய்தியை சேகரிப்பதற்காக அவருடைய வீட்டுவாசலில் முக்கிய பிரமுகர்கள் வரும் வரை நானும், எஸ்.ஸ்ரீகஜனும் நீண்ட நேரம் வாசலில் காத்திருந்தோம்.
இது பற்றிய செய்திகளை, அன்று எனது கையடக்கத் தொலைபேசிக்கு, தற்போது லன்டனில் வசிக்கும் நடராஜா குருபரன் தொடர்பு கொண்டு கேட்பார்.
ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமைக்கான தகவல்கள், வரலாறுகள் இன்னும் உண்டு சில தகவல்களை இங்கு எழுத முடியாது.
தமிழ்ச் செல்வன் 2004இல் கிளிநொச்சியில் வைத்து விரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பல தகவல்களை தந்தார். ஆனால் அவற்றில் சில விடயங்களை வீரகேசரியில் எழுத முடியவில்லை.
காலம் வரும்போது அந்த தகவல்கள், வரலாறுகள் எழுதப்படும்.
(Amirthanayagam Nixon)