கூட்டுப் பாலியல் வன்புணர்வில் யார் குற்றவாளி..?

ஆண்பெண் சமத்துவத்தை உள்ளடக்காத பாடதிட்டம், ஆண்பெண் சமத்துவத்தைப் போதிக்காத , ஏற்றுக் கொள்ளாத அல்லது அதைப்பற்றிய போதிய புரிதல் இல்லாத ஆசிரியர்கள். மதிப்புக் கல்வி, வாழ்க்கைக் கல்வி மற்றும் விழுமியங்களைக் கற்றுத்தராத, அதற்கான வாய்ப்பே இல்லாத பள்ளிகள்.

மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிலும் ஆசிரியர் பயி்ற்சிப் பாடத்திட்டத்தில் விழுமியங்கள், பாலினச் சமத்துவம், பெண்ணுரிமை, பெண்விடுதலை, பெண்ணியம், சமூக அரசியல், குழந்தை வளர்ப்பு, பணிப்பகிர்வு போன்ற சமூகக் கருத்தியல்கள் மற்றும் செயல்பாடுகள் எவையும் இல்லாத ஆசிரியர் கல்வி.

பெண் என்றால் அடக்கம் ஒடுக்கமாக இருக்க வேண்டும், ஆண் என்றால் அப்படித்தான் இருப்பான் என்னும் நாயக வழிபாடு செய்யும் திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், பத்திரிக்கைகள்.
பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் நுகர்வுக் கலாச்சார விளம்பரங்கள்.

பாலுணர்வைத் தூண்டி அறிவை மழுங்கடிக்கக்கூடிய ஆபாசக் குப்பைகள் கொட்டிக் கிடக்கும் இணையம்.

உலகத்தையே உள்ளங்கைக்குள் மடக்கித் தந்திருக்கும் தகவல் தொழில்நுட்ப தொடர்புகள்.

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, கற்பு, பத்தினித்தன்மை, ஒழுக்கம் என பெண்ணுக்கு அத்தனையும் வைத்துவிட்டு ஆணுக்கு ஆண்குறியை மட்டும் சமூக மதிப்பீடாய்க் காட்டும் சமூகம்.

குற்றவாளிகள் சொந்தச் சாதிக்காரனாய் இருந்தால் வழக்குப் பதியாமல் சுணக்கம் காட்டும் காக்கிகள்,

காமக் கொடூர வக்கிரம் பிடித்தவர்களுக்கு வாதாடும் கருப்புக் கோட்டுகள்.

குற்றவாளிகள் தம் கட்சிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்வாதிகள்.

ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி எனப் பிரித்துவைத்து ஆரோக்கியமான ஆண்பெண் நட்பு, புரிதலுக்கு வழிவகுக்காத, பாலியல் கல்வியை ஒழுக்கக் கேடெனப் பார்க்கும் சமூகத்திற்கு ஒத்திசைந்து அதைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தாத அரசு.

கற்பு என்னும் அயோக்கியதனத்தை பெண்ணுடலில் பொத்திவைத்திருக்கும் சாதித் தூய்மை.
ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் இவற்றிற்கு வேராக இருக்கக்கூடிய சாதி,
சாதியின் மூலமாகிய மதம்.

மக்களைப் பிரித்தாளும் வர்க்கம்
நான்
நீங்கள்
நாம்
எல்லாரும் எல்லாமும்தான் குற்றவாளி.
என்ன செய்யப் போகிறோம்…?

-கவிஞர், ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர் சுகிர்தராணி (இந்தியா)