இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன.
வடக்கு, கிழக்கில் மாத்திரம் குறிப்பாக, முஸ்லிம்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் தொடர்பான உரிமைசார் பிரச்சினைகள் இருக்கின்றன. தென்னிலங்கையில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் காணிகளை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை.
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற பெரும்பாலான காணிகள், வனவளம், தொல்பொருள் வலயம், முகாம் என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. புதிய குடியேற்றத் திட்டங்கள், பயிர்ச் செய்கைத் திட்டங்கள், பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு போன்ற தோரணையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல திட்டங்களை, பெருந்தேசியம் கையில் வைத்திருக்கின்றது என்பதற்கு, நிறையவே அத்தாட்சிகள் உள்ளன.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிட்டத்தட்ட சரிசமமான காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இருப்பினும், சனத்தொகை பரம்பல் அதிகமான முஸ்லிம்களே, காணிப்பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், தமிழர்கள் காணி உரிமைக்காகப் போராடி, அதன்மூலம் சொற்ப அளவான காணிகளையாவது அவ்வப்போது மீட்டெடுத்து இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் இதுபற்றித் தீவிரமாக இன்னும் பேசக் கூடத் தொடங்கவில்லை.
இது குறித்து, எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் அக்கறையில்லை. முஸ்லிம் மக்களும், ‘விலையை அதிகமாகக் கொடுத்தாவது, எமது வீட்டுக்கு அருகில் காணியொன்றை பெறலாம்’ என்று நினைக்கின்றார்களே தவிர, ஒரு சமூகமாகக் காணி உரிமையை உறுதி செய்வதற்கான எவ்விதமான திட்டங்களும் முஸ்லிம்களிடம் இல்லை. அதேநேரம், தமக்குரித்தான காணிகளை மீட்பதற்காகப் போராடும் காணி உரிமையாளர்களின் போராட்டங்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் அமைப்புகளின் செயற்பாடுகளையும், திட்டமிட்டு மழுங்கடிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகளில் கணிசமானவை, நேரடியாக அரச கட்டமைப்புகளுடன் தொடர்புட்டவை எனலாம். இராணுவத் தேவைகள், வீட்டுத்திட்டங்கள், அகழ்வாராய்ச்சி போன்ற அடிப்படைகளில், தமிழர்களின் நிறையக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் வலயம், பௌத்த விகாரைகள் அமைத்தல், பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல காரணங்களால் காணிகள் பறிபோகும் நிலைமை இப்போதும் உள்ளது.
ஏற்கெனவே காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளுடன், அண்மைக் காலத்தில் மண்டைதீவு, திருமலை மாவட்டத்தில் பல இடங்கள் எனக் காணிகள் காவுகொள்ளப்படுகின்றன. அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான மாதவணை, மயிலத்தமடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில், சிங்கள மக்கள் வந்து அத்துமீறிக் குடியேறுவது, பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதை இப்படியே விட்டால், காணிகளை இழக்க வேண்டி ஏற்படும் என்ற அடிப்படையில், தமிழர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதைச் சமாளிப்பதற்கும் சிங்கள மக்களின் நலன்களில் கீறல் விழாமல் பார்ப்பதற்கும் பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு, இராஜாங்க அமைச்சொன்றை மேலதிகமாக வழங்கியமை, இதில் ஓர் அங்கமாக இருக்கலாம் என்ற கணிப்பொன்றும் இருக்கின்றது.
முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், கண்டுகொள்ளப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், முஸ்லிம் சிவில் சமூகத்தின் பலவீனமும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘நக்குண்டு நாவிழக்கும்’ அரசியல் நகர்வுகளும் என்பதைக் குறிப்பிடாமல் விட முடியாது.
வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட காணிப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. இவற்றுக்கு 30 வருடங்களாகத் தீர்வு காணப்படவில்லை; முழுமையான மீள்குடியேற்றமும் நிறைவு செய்யப்படவில்லை.
இலங்கையில், சிங்கள மக்களின் குடியேற்றங்களுக்காகவும் அபிவிருத்திக்காகவும், இயற்கை வளங்கள் எத்தனையோ அழிக்கப்பட்டதெல்லாம் மறந்து, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்காக, கல்லாறில் காடுகள் அழிக்கப்பட்டமை, தூக்கிப் பிடிக்கப்படுகின்ற அபூர்வங்களையும் காண்கின்றோம்.
கிழக்கில், மிகவும் சிக்கல் வாய்ந்த காணிப் பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் காப்பு, இராணுவ முகாம் அமைத்தல், தொல்பொருள் மய்யங்கள், புனித வலய பிரகடனம் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன; செய்யப்பட்டும் வருகின்றன.
சுருங்கக் கூறின், கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தின் அரைவாசி அளவுக்குக் கூட, காணி உரித்துக் கிடையாது என்பது, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள உண்மையாகும்.
அம்பாறை மாவட்டத்தில், வட்டமடு, வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில், அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை ஆகிய இடங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.
கல்லோயாத் திட்டம் போன்ற திட்டங்களின் பின்னர், தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களுக்கு, முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணிகளில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட்டதால் முஸ்லிம்கள் காணிகளை இழந்தனர். இதில் அஷ்ரப் நகர், அம்பலம்ஓயா, கீத்துப்பத்து, பொத்துவில், கிரான்கோவை, கிரான்கோமாரி, வட்டமடு உள்ளிட்ட காணிப்பிரச்சினைகளில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.
ஆனால், பொத்துவில் முஹூது மகாவிகாரையைச் சுற்றி, முஸ்லிம்கள் குடியேறிய விடயம் மட்டும் ஓர் அத்துமீறலாகப் பார்க்கப்படுவதுடன், அதன் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தலுக்கான நகர்வுகள் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். வாகரை, கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி, காரமுனை உள்ளடங்கலாக முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாதவையாக இருக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன், இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகள், இன்று உரிமை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றன.
இவ்வாறிருக்க, அண்மைக்காலமாக சற்று வித்தியாசமான சூட்சுமங்களின் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தும், ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருமலையில் பல பிரதேசங்களில், 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள், அப்பகுதியிலுள்ள விகாரைகளுக்குச் சொந்தமானவை என்று, தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி வருவதையும் அறியமுடிகிறது.
இதேவேளை, ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்கும் திட்டம், சிறப்பானது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைச் சிங்கள மக்கள் சிறப்பாகப் பயன்படுத்துவர்; தமிழர்களும் மிகக் கவனமாகக் கையாள்வர். ஆனால், முஸ்லிம்கள், கொஞ்சம் தொலைவு என்றால்க் கூட, பயணம் செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதுவும் கூட, நீண்டகாலத்தின் பின்னர், சிங்கள மக்களின் காணி உரிமைகள் அதிகரிக்கவே வழிவகுக்கும்.
இவ்வாறு, நாடெங்கும் சிறுபான்மைச் சமூகங்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. ஆயினும், இவற்றையெல்லாம் தீர்ப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த ஆட்சியாளர்கள் யாரும், ஒரு முறைமைப்படுத்தப்பட்ட பொறிமுறையை உருவாக்கவில்லை.
கிழக்கில் தொல்பொருள்களை அடையாளம் காண்பதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் ஒரு முஸ்லிமோ, தமிழரோ உள்ளடக்கப்படாமை பெரும் பாரபட்சமாகும்.
எனவே, வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள சிறுபான்மைச் சமூகங்களின் காணிப் பிரச்சினைகளுக்காக தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அத்துடன், இராணுவ முகாம் அமைப்பதோ, குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு வருவதோ, தொல்பொருள்களைப் பாதுகாப்பதோ தவறில்லை.
ஆனால், அது ஓரவஞ்சனையான முறையிலோ, சிறுபான்மைச் சமூகங்களின் காணிகளை அபகரிக்கும் உள்நோக்கிலோ நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரச்சினைகள் கூர்மையடைவதை அரசாங்கமே, பொறுப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.