சிவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது.
(நயினை ந.ஜெயபாலன்)
நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?.
மூத்த, அறிவுசார்ந்த, முற்போக்கான, பகுப்பாய்வும் தர்க்கரீதியான தேடலுமுள்ள, புள்ளிவிபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த, சரியான சமூகப்பார்வையுள்ள, மும்மொழிப் பாண்டித்தியமும் ஆற்றலும் எனப் பல்திறன்களையும் தன்னுள்கொண்டு தகுதிமிக்க ஊடகவியலாளனாய் உரியபடி சமூகத்துக்குப் பயன் தந்தவர் சிவா சுப்பிரமணியம். இவரது அனுபவமுதிர்ச்சி, சோர்வின்மை, ஊடகத்துணிச்சல் என்பவற்றினூடாக ஊடகத்றைக்கோர் உதாரண புருசனாகத் திகழ்ந்;த ஒருவர்பற்றி இலங்கை ஊடகங்களால் பேசப்படாமல் போனது ஏன்?
சிங்களத்தை சொந்த மொழியாகக் கொண்ட இலக்கியப் படைப்பாளிகள் கூட பொருத்தமுள்ள சொல்லைத், தலைப்பைத் தேர்வுசெய்ய சிவாவை நாடுவார்கள் என்ற அளவுக்கு சிங்களம் மட்டுமல்ல மும்மொழியையும் எழுத்தால், பேச்சால் தன் கட்டுக்குள் வைத்திருந்த அரிய, கூரிய ஆளுமையாளன். இப்படியொரு பெறுமதியாளனின் இழப்பு ஒட்டுமொத்த இலங்கை ஊடகத்துறை, இலக்கியப்புலம், அறிந்தவர், அரசியல் பிரமுகர்கள் என்ற அனைத்துப் பரப்பிலும் கண்டுகொள்ளாமல் எழுதாமல் பாராமுகமாகவிடப்பட்டிருக்கிறார்! ஏன் இவர்பற்றி ஊடகங்களுக்குத் தெரியவில்லையா? இனி இவர் தேவையில்லையா?
ஊகம், திரிப்பு, காக்காபிடிப்பு, அடக்குமுறைகளுக்குத் துணைபோதல், மாற்றுக் கருத்துக்களை அழித்தல், நூலகத்தை எரித்தல் இவைகளுக்குத் துணை போபவர்களைப் பிரமுகர்களாகக்காட்டுவதும் அதன்மூலம் பணம் பண்ணுவதும் இலங்கைப் பத்திரிகா தர்மமாகவே இருந்துவருகிறது. இந்தவகையான பத்திரிகைகளும் தலமைகளும் விலாசமற்று, மதிப்பிழந்து அழிந்த வரலாறுகள் அறிந்தும் இன்னும் அதை உணர மறுக்கிறார்கள் ஊடகவர்த்தகர்கள். கோட்டு வாசலிலும், பொலிஸிலும் கற்பழிப்பு, கொலைச் செய்திகள் சேகரி;த்துப் பக்கங்கள் நிரப்புவதல்ல பத்திரிகைத் தொழில். சமூகத்தை நேர்மையோடும் பற்றோடும் நெறிப்படுத்துவதே ஊடகக்கடமை!
சிவா சுப்பிரமணியம் முற்போக்கான கருத்துக்களை, சமூக நடைமுறைக்குகந்த விடயங்களை, சமத்துவம் சார்ந்தவைகளை நேர்மையோடும், துணிச்சலோடும் முன்வைத்தார்! எனவே இவரை அறிந்திருப்பதும் வரவேற்பதும் இளைய பத்திரிகையாளருக்கும் மாணவசமூகத்துக்கும் பயனும் அவசியமும் ஆகும். அதைச் செய்ய இயலவில்லை! அப்படிச் சிவா போன்ற துணிவு, தகுதி இல்லையென்றால் எழுதுபவர்கள் எழுத்துத் தொழிலைக் கைவிடுங்கள் அதுவும் நல்லதுதான்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தின் வருகைக்கு அயராது உழைத்ததில் சிவாவின் பங்கு அதிகம். வரவிடாமல் தடுக்க உழைத்த பகுதியினர், பல்கலைக்கழகம் வந்தபின் காலத்துக்குக் காலம் மாணவர்களைத் தவறாகத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடி அதிக பங்கு உழைக்கிறார்கள்.
இதுபோன்ற தீர்க்கதரிசனக் கருத்துகளோடு பல்கலைக்கழக ஆரம்பகாலத்தில் ஒரு பட்டிமன்றத்தில் கருத்து வைத்த சிவா பல்கலைகழக பட்டிமன்றமேடையால் இறங்கியதும் தமிழரசுக்கட்சி எம்.பி.தர்மலிங்கம் பெருந்தன்மையோடு சிவாவைப் பாராட்டினார். “தம்பி உனது கருத்துக்களோடு நான் உடன்;படுகிறேன். ஆனால் நான் சார்ந்த அணிக்கு இதில் உடன்பாடில்லை. என்றபோதும் உன் கருத்துக்கள் வரலாறாகும்“ என்றார்.. அப்டியொரு தூரநோக்கு அறிவுள்ள இடதுசாhரி சிவா.
பட்டங்களால் மட்டும் அறிவாற்றல் உருவாவதில்லை என்ற உண்மையை எனக்குணர்த்திய இரு தோழர்களை இவ்வாண்டின் கடந்த மாதம் நான் இழந்திருக்கிறேன். இவ்விரு இழப்புமே என்னுள் பாரிய பாதிப்பைத் தந்தவை. டாக்டர் கலாசபதிக்கு நிகரான ஆளுமையும் அறிவும் கொண்ட, நடமாடும் பல்கலைக்கழகம் என்று பேசப்பட்டவர் சிவா.சுப்பிரமணியம். எந்தத் துறைசார்ந்தும் எந்த நேரமும் அவரிடம் பதில் தேடலாம்.
இலக்கியமோ, அரசியலோ எழுத்தில் சுருக்கமும், நிதானமும், நேர்த்தியும் இவரது முத்திரைகள். இளவயது இடதுசாரி நட்பும், சிங்களத்தோழர்களின் ஈடுபாடும், மேடைப் பேச்சின் கனிவும், இலகுவான மொழிநடையில் சுருக்கமான மொழிபெயர்ப்பும் சிவாவிடம் போல் யாரிடமும் நான் பார்த்தது கிடையாது. தான் கற்றவற்றைப் புடமிட்டு மற்றவருக்குக் கற்றுக்கொடுப்பதில் அலாதிப்பிரியமுள்ளவர். இத்துணை ஆற்றல்களுக்கான அவரது ஊற்றுமூலம் எதுவென்றால்! மற்றவர் கருத்தையும் ஏற்று உள்வாங்கல், அயராத வாசிப்பு, கேள்வியுடன் கூடிய தேடல் இவைதான். வீட்டிலேயே ஒரு நூலகம் வைத்திருந்தார். தன் நேரங்களில் அதிக பக்கத்;தை அதனுள் புதைத்துவிடுவார்.
மூன்று தடவைகள் இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியடைந்தும் பதவிகிடையாமைக்கு சில பின்னணிக்காரணங்கள் இருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் இலங்கையின் வரலாறு ஒரு முற்போக்கான நிர்வாக அதிகாரியைச் சந்தித்திருக்கும். இதற்கு அவருக்கிருந்த அறிவு, மொழிப்புலமை, சமூகப்பார்வை இவை துணைபோயிருக்கும்.
இடதுசாரிகள் தம்மை அர்ப்பணிப்பதும், நேர்மை, தன்மானம் என்பவற்றில் உறுதியாக இருப்பதும் அவர்தம் சராசரி வாழ்வில் அவர்களை உயரவிடாத பின்னடைவுகளைச் சந்திக்கவைக்கிறது என்றாலும் அவர்கள் அதைநோக்கித் தளர்வதில்லை. அப்படியே சிவாவும்.
தினகரன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்துவிட்டுத் தொடர்ந்து இணைந்துபோக விருப்பமற்றுத் தானாகவே விலகினார். விலகியபோதும் எழுத்தைக் கைவிடவில்லை 2016, இவ்வாண்டு மே, கடந்த மாதம் இறுதிமூச்சை இழக்கும் வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
புதுயுகம், தேசாபிமானி இதழ்களிலும் தினக்குரல், கல்பனா, மல்லிகை, சிங்கள இதழ்கள், இல.முற்.போ. எழுத்தாளர் சங்கவெளியீடுகள் எனப் பலவற்;றை இவரது எழுத்துக்கள் அலங்கரித்தன.
இவர் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு ஒரு நோக்கு“ என்ற புத்தகம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சான்றாதார(குறிப்பு)க் கைநூலாகச் சிபார்சுபண்ணப்பட்டிருக்கிறது என்பதும் அவர்பற்றிய தகுதிக்கு சான்றுபகர்கிறது.
இவற்றோடு இலங்கைப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் நிகழ்வுப்பதிவுகள் பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலிருந்து இறப்பதற்கு அண்மித்த நாட்கள் வரை இவர் தவறாமல் தொகுத்து வைத்திருந்தார் எனவும் அறியமுடிந்தது.
இன்னோரன்ன திறன்களோடு சர்வதேசத்தை, நாட்டை, மொழிகளை, சமூகங்களை, நேர்மையை அக்கறையோடு நேசித்த ஒரு மனிதனை சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவது என்பது எமக்கான சமூகக்கடமை! தினகரன் தவிர்ந்த இலங்கைப் பத்திகைகள், இணையங்கள் இக்கடமையிலிருந்து தவறிப்போயின. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இயங்கும் இணையங்கள், ஊடகங்கள் ஒப்பீட்டளவில் இலங்கையைவிட அதிக அக்கறைகாட்டின!.
அந்த வகையில் புலம்பெயர் ஊடகங்கள் நன்றிக்குரியன!