இலங்கை சுதந்திரமடைந்தது முதற்கொண்டு உருவான தமிழர்களின் உரிமைக்கோசம் ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்ற நிலையில், மாகாண சபை ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது சிங்களவர்களுக்கு ஒரு பொருட்டல்ல தேவையானதும் கிடையாது. அவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கேட்டோ, உரிமை கேட்டோ போராட்டம் நடத்தியது இல்லை. இப்போது அதிகாரப் பறிப்புகள் நடைபெறுகின்றன.
இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து நவம்பர் 14 இல் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அறிவிக்கப்பட்டு, மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன. இதன் இணைப்பு நிரந்தரமாவதற்கு கிழக்கு மாகாணத்தில் அதேயாண்டு இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை. தொடர்ந்தும் இணைந்தே இருந்தது.
2006இல் மக்கள் விடுதலை முன்னணி வழக்குத்தாக்கல் செய்து அதனை நிரந்தரமாகப்பிரித்து வைத்தது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வரலாறுகள், நடைபெற்றவைகள் தொடர்ந்தும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் பயன் எதுவுமில்லை என்று தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் ஒப்புவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1988 செப்டெம்பர் 2 இல் வடக்கு – கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது. இந்த இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியன இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. அ. வரதராஜப்பெருமாள் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையை அடுத்து இந்திய இராணுவம் அமைதி காக்கும் படையாக நாட்டுக்கு வந்தது. அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் போர் புரிந்ததன் காரணமாக, இங்கு பல அட்டூழியங்கள் நடைபெற்றன. அதன் பின்னர், 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினர், இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மாகாண சபையைக் கலைத்து தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அப்போது ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தார்.
வடக்கு – கிழக்கு தற்காலிகாலிக இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2006 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழாம் வடக்கு – கிழக்கு மாகாண சபையைப் பிரித்து தீர்ப்பளித்தது.
ஒன்றுக்குள் இருக்கும் மற்றொன்றுதான் இலங்கையின் அதிகார நிருவாகப் பரப்பு. நாம் எதனைத் தொட்டாலும் அதற்கு ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும். அரசியல் ரீதியாகக் காணப்படும் இந்த பெரும் இடைவெளியைச் சீர் செய்துகொள்வதில் விட்டுக் கொடுப்புகளும் பரஸ்பர நம்பிக்கையும் கட்டாயமானது.
நாம் யாரும் அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கியிருக்க முடியாதளவுக்கு சமூக, பொருளாதார, கல்வி, கைத்தொழில், சுகாதாரம் என எல்லாவற்றிலுமே அரசியல் இறுகப் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், நடைபெற்று வருகின்ற கண்மூடித்தனமான சுவீகரிப்புகள் இப்போது தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் பெரும் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாகாண ஆட்சி முறையானது அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளின் நிறைவேற்றத்தின் மீதான பிரதிபலனுக்கானதாகவே எண்ணப்பட்டது. அதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே கொள்ளமுடியும் என குறிப்பிட்ட தரப்பினர் கூறினர். இருந்தாலும் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை.
ஜனாதிபதி சந்திரிகாவால் கொண்டுவரப்பட்ட நீலன் திருச் செல்வத்தின் வரைபில் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வையும் ஏற்கவில்லை. பின்னர், நோர்வேயின் அனுசரணையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் வந்த ஒஸ்லோ உடன்படிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை.
இலங்கை மாகாண அமைப்பு முறையின் கீழ் அமையப்பெற்ற வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளின் திட்டமிடல் வழிகாட்டலின் ஊடாக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நிர்வாகக் கட்டமைப்புடனும் நிதி முகாமைத்துவத்துடனும் இயங்கி வருகின்றன. ஆனால் வடக்கு – கிழக்கு அதற்கு நேர்மாறாக இருந்தது. 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமை பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஆளுநர் வடக்கு – கிழக்கு நிர்வாகங்களை மத்திய அரசாங்கத்துக்குச் சார்பாகவும் வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற நிதியைச் சரியாகச் செயற்படுத்துகின்றோம் என்று வெளி உலகுக்குக் காட்டிக் கொள்வதற்கான போலிப் பிரசாரத்தை மேற்கொண்டும் சில உயர் அதிகாரிகளுக்குப் பதவி ஆசை காட்டியும் தமக்குச் சார்பான செயற்பாட்டில் ஈடுபடவைத்ததும் வரலாறு.
13 வது திருத்தச் சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமலாக்குவதற்கோ, மாகாண அமைப்பு முறை தொடர்பான மேலதிக உரிமைகளைப் வழங்குவதற்கோ எந்த முயற்சிகளையும் வட கிழக்கு ஆளுநர் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் இப்போது இரண்டு ஆளுநர்களும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் அரசாங்கத்தின் செயற்றிட்ட நடவடிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள்.
இவ்வாறிருக்கையில்தான், இப்போது மாகாண சபைகளின் அதிகாரங்களுக்குள் இருக்கின்ற வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருகின்ற கைங்கரியம் நடைபெறுகிறது. கொவிட் 19 நிலைமைகளால் நாடு முடங்கியிருக்கிறது; சரியான இயக்கமில்லை. ஆனால் மத்திய அரசின் கைங்கரியயங்கள் உள் நோக்கங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
ஏற்கெனவே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய காணி, பொலிஸ் அதிகாரங்களை சரியாக வழங்காது, இழுத்தடிப்புச் செய்துகொண்டிருந்த நிலையில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருக்கின்ற சூழலில் வளங்களைப் பிடுங்கிக் கொள்வது சட்டவிரோதம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் பலன் ஏதுமில்லை என்ற நிலைமையே தமிழர் தரப்புக்கு!
அதிகாரப்பரவலாக்கத்துக்கான குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யவதோடு தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு மத்திய அரசுடன் பேரம் பேச முடியும் என்ற தகுதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இப்போதும் காணப்படுகிறது. இருந்தாலும் அதற்கான வாய்ப்பைக்கூட சரியாக வழங்குவதற்கு அரசு தயாரில்லை.
கடந்த நல்லாட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முயற்சியும் அதன் தொடர்ச்சியே. இப்போதும் கூட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் பேசி எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அதுகூட கைகூடுவதாக இல்லை. இருக்கின்ற ஒன்றிலும் அதிகாரங்கள் வழித்தெடுக்கப்படுகின்றன.
மாகாணங்களின் அதிகாரங்களில் முக்கியமானவை கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் போன்றவைகள்தான். திவிநெகும ஊடாக விவசாயமும், தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தின் ஊடாக கல்வித்துறையும் பறிக்கப்பட்டு, இப்போது வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத்துறையும் கொய்யப்படுகிறது. இது மத்திய அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே கொள்ளமுடியும்.
வளங்கள் இல்லை என்பதனைக் காரணம் காட்டி மாகாணத்தின் அதிகாரங்களை பறிப்பது எவ்வகையில் நியாயமானதாக இருக்கும் என்பதுதான் இப்போது தமிழர் தரப்புக் கேள்வி. தேவைகளை நிறைவேற்றி ,வளங்களைக் கொடுப்பதற்கு சுவீகரிப்பு போன்ற நடைமுறை தேவையில்லை. கொடுப்தைக் கொடுக்கலாம் அல்லவா; பறிக்கவா வேண்டும் என்ற நியாயம் மத்திய அரசுக்கு புரியவேண்டும் என்று தமிழ்த் தரப்பு சொல்கிறது.
மக்களதும் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளதும் தூர நோக்கற்ற செயற்பாடுகளால் உருவாகிவரும் இவ்வாறான சூழல் தமிழர்களின் அரசியல் பலம், அதிகாரத்தில் ஒன்றுமில்லா நிலையையே உருவாக்கும். அத்துடன் இந்த அரசாங்கத்தின் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யும் தூர நோக்குக்கு முழு உதவி செய்துவிட்டதாகவே அமையும்.
70 வருடங்களைத் தாண்டியும் உள்நாட்டுக்குள் தீர்வைக் காணமுடியாதிருக்கின்ற ஒன்றை தீர்த்துவைக்க இனியேனும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வழியைத் தேடுமா?