நடு நிலை என்பது என்ற ஒன்று இல்லை. சரி அல்லது பிழை என்று இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும் என்பதை தத்துவார்த்த ரீதியாக நம்புபவன் நான். சமத்துவமான வாழ்வியல், ஏற்றத் தாழ்வுகளை உடைய சமூக வாழ்வியல் இதில் எதனை ஆதரிப்பவன் என்பதில் முதலாவதை தெரிவு செய்து அதுசார்ந்த தத்துவங்களை ஏற்று அதற்கு இசைவாக செயற்படுபவன் நான். அது சார்ந்த பொருள் முதல்வாதத்தை சமூக விஞ்ஞானத்தை நம்புபவன். நம்மில் பலரும் அவ்வாறு இருக்கவே விரும்புகின்றோம்.
ஆனால் 3ம் உலகப் போரிடர் போன்ற பேரிடர் காலத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்று மனித நேயத்தை முன்னிறுதியே எம்மில் பலரும் தற்போது செயற்படுகின்றோம். அதில் நானும் ஒருவனாக செயற்பட வளைகின்றேன். எனவேதான் வர்க்கங்ள் இரண்டு என்ற நிலையிலும் ஆளும்வர்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருந்தாலும் அவர்களுடனும் இணைந்து பயணப்பட வேண்டும் என்ற பேரிடர் காலத்து செயற்பாட்டை நம்மில் பலரும் வரிந்து கட்டிச் செயற்பட்டுவருகின்றோம்.
2ம் உலக மகா யுத்த காலத்தில் கிட்லரின் பாசிசத்தை எதிர்த்து அதனை நிர்மூலமாக்கி மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அன்றைய சோசலிசப் பாதையில் பயணித்த சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்துடன் ஒரு ஐக்கிய முன்னணியை தமக்கிடையிலான தத்துவார்த் முரண்பாடுகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டு இணைந்து போரிட்டது போல் நாமும் தற்போதைய 3ம் உலகப் போரை ஒத்த பேரிடர் காலத்தில் செயற்பட முற்படுகின்றோம். ஆனால் சில விடயங்களை நாம் இனியும் பேசாமல் இருப்பது எந்த மனித குலத்தை காப்பாற்ற புறப்படோமோ அதனை மேலும் அழிவிற்குள் தள்ளிவிடும் என்பதினால் பேசவிளைகின்றேன்.
ஆமாம் அது அமெரிக்காவின் ஏதேச்கசாகர செயறபாடுகள்தான் ஆரம்பத்தில் இது சீன வைரஸ் என்றும் எம்மை ஒன்றும் செய்யாது என்று வெறுப்பை கக்கியும் அசிரத்தையாக செயற்பட்டும் தொற்று பரவல் எடுத்ததும் ஈஸ்ரர் இற்குள் கட்டிற்குள் கொண்டு வருவோம் என்று அசாதாரணமாக எடுத்துக் கொண்டு செயற்பட்டு இன்று உலகில் அதியுயர் தாக்கத்திற்குள்ளான நாடக ஆபத்தான நிலையை அடைந்திருக்கின்றது அமெரிக்கா.
இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்காத மருந்தை கொரனாவிற்கான மருந்தாக அறிவித்தது ஆகட்டும் இதனைத் தொடர்ந்து இந்தியாவை மிரட்டி இந்த மருந்தை தட்டிப்பறிக்க முற்பட்ட செயற்பாடுகள் ஆகட்டும் தாய்லாந்தில் கனடா ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு அனுபப்பட்ட மருத்துவ உபகரணங்களை தனது நாட்டிற்கு அடாத்தாக திசை திருப்பிய திருட்டாகட்டும் இந்த அமெரிக்க ஆளும் வரகத்தின் ட்றம் நிர்வாகத்தில் மோசமான அரசியலை கண்டிக்க வேண்டிய நிலையில் நான் அரசியலை பேசவேண்டி வந்துள்ளது.
குறியீட்டு ரீதியாக இந்தியாவில் இன்னமும் மத்தியில் ஆளும் மோடியின் அரசு தனது இந்துத்துவா செயற்பாடுகளை கொரனாவின் பேரிடர் நிலமையில் பாவிபதும். தமிழகம் போன்ற மாநிலங்களில் ஊடகங்களில் பேசும் குறிப்பாக ஆளும் தரப்பு மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், ஏன் ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் வரிக்கு வரி ‘மாண்புமிகு” ‘முதல் அமைச்சர்” அல்லது ‘அமைச்சர”; அல்லது ‘இதய தெய்வம் அம்மா” என்று வரிக்கு வரி விழித்துப் பேசுவது எரிச்சலையே ஏற்படுத்துகின்றது.
மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டிலும் மதவாரியான அல்லது மொழி வாரியான அல்லது மத்தியில் ஆட்சி செய்யும் தமது கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கான அதி கூடிய நிதி ஒதுக்கீடாக இருக்கட்டும் எங்கும் நிலவும் இந்த புகழ்பாடும் அல்லது பாகுபடுத்திப் பார்க்கும் அரசியலைப் பற்றி பேசித்தான் வேண்டும். இந்த அரசியலையும் வெறுகின்றேன். இதனை செய்பவர்களையும் கண்டிக்கின்றேன். மாறாக அணைத்து தரப்பினரும் இணைந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக செயற்பட வேண்டும்.
இதே போல் இலங்கையில் ராசபக்ஸகளை கழுவில் ஏற்றுவது என்ற 2009 ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி எடுத்த முடிவை இந்த பேரிடர் காலத்திலும் அரசியலாக்கி செயற்படும் சிறப்பாக தமிழ் தரப்பு அரசியலையும் வெறுக்கின்றேன். ஒப்பீட்டளவில் இலங்கை அரசு கொரனா பேரிடரை சிறப்பாக கையாளுவதை அவதானிக்க முடிகின்றது. அது வீட்டுத் தோட்டதை ஊக்குவித்தல் அதுவரை உணவுப் பொதிகளை வழங்குதல் என்ற வரையிலான ஊரடங்கு செயற்பாடுகள் இன்றுவரை கொரானாவின் கோர முகம் இலங்கையில் அடங்கியிருப்பதற்கு காரணங்களாக இருப்பதை மறுக்க முடியாது. சிறப்பாக புலம் பெயர் தேசத்து வலதுசாரி ஊடகங்கள் தமது வழமையான வசைபாடுதலை ‘பிள்ளை” தலமையில் தற்போதும் நிறுத்தாமல் செயற்படுவது இணைந்து மனித குலத்தை காப்பாற்றும் செயற்பாட்டின் வடிவங்கள் அல்ல.
கூடவே தமிழர் தரப்பில் உதவிகளை வழங்குதல் பேரிடருக்கான ஆயத்தங்களை செய்தல் போன்ற விடயங்களில் ‘எங்கள் அமைச்சர் செய்தார்’ என்ற வகையிலான தேர்தல் பிரசார வடிவிலான செய்திகள் எரிச்சலை ஊட்டுகின்றன. கூடவே கட்சிகளின் பெயரில் பானர் கட்டி ‘ஊர்வலம்” போய் செய்யும் உதவிகளும் இந்தவகைப்பட்டதே. நல்ல வேளை ‘இருபவர் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா..?” என்பது மட்டும் இன்னும் வரவில்லை ஒரு இடத்திலும். எனவேதான் அரசியலைப் பேசி விளைந்தேன்.
இனி அரிசி இயலுக்கு வருவோம் உதவி வழங்கும் அதாவது பொது மக்கள் மத்தியில் இருக்கும் தன்னார்வ அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றி உடனடி நிவாரணமாக ஊடரங்கு போன்ற சூழலில் பசியாற உதவுதல் என்பது சரியானது. பாராட்டிற்குரியன. ஆனால் பொதியுடன் விதையையும், வலையையும் சேர்த்து வழங்குங்கள் என்பதே என் வேண்டுகோள்.
கையேந்தும் நிலையை மாற்றி தமக்கான உணவை தாமே உற்பத்தி செய்வதற்கான ஒரு ஆரம்ப செயற்பாடுகளை ஊக்கிவிக்கப்பட வேண்டும். ஏந்துதல் என்பது பழக்கமாகிவிட்டால் அது தொடர்ந்தும் எதிர்பார்த்தே இருக்கும் அதிக கரங்கள். நிலம் இல்லாதவர்கள் என்ன செய்வது…? என்பது வெறும் ஐந்து தர ஐந்து அடி நிலத்தில் கீரை விதையை விதைப்போம் இருப்பவர்கள் ‘விதைப்போம் இல்லாதவர்களுக்கு கொடுப்போம்” என்ற செயற்பாட்டை இங்கு அறிமுகப்படுத்துவோம்.
இதற்கான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்பதே சரியான அணுகு முறையாகும். இது நீண்ட காலப் போக்கிலும் சுயசார்பு உணவுத் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்து நிற்கும். இலங்கை இந்தியா போன்ற இடங்களில் நிலவும் தட்ட வெப்ப நிலமைகளை ஆண்டு தோறும் இந்த எமக்கான உணவை நாம் முடிந்தளவு உற்பத்தி செய்தல் என்பதை ஓரளவிற்கு சாத்தியமாக்கும்.
வெறும் பொதி ஒரு பரிதாபத்திற்கு செய்யும் உதவியாகவும்…. விதையும், வலையும் வாழ்வியலை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவும் அமையும். எனவேதான் கூறுகின்றேன் பொதியுடன் விதையும், வலையும் கொண்டு சென்று கொடுங்கள் என்று.
இங்கும் ஒரு வகை ‘சுய விளம்பரம்: செயற்பாட்டை செய்கின்றோம் என்பதை செயற்பாட்டை ‘நிறுவ: காட்சிப்படுத்துவதாக நியாயங்கள் வைக்கப்படுவதாக இருந்தாலும் சமூகத்தில் அறம் சார்ந்து செயற்படும் பலரில் மிகச்சிலரின் தவறுகளை சுட்டிக்காட்ட பலரின் செயற்பாட்டடை காட்சிப்படுத்துவது சரியா என்பது எனது மனக்கிடக்காக இருக்கின்றது. இதில் மிகச் சிலரே இவ்வாறு காட்சிப்படுத்தும் நோக்கோடு செயற்படுத்துவதாக இருந்தாலும் இதனைப் பொதுமைப்படுத்தியே நான் கூற விளைகின்றேன்.
இறுதியாக அரசி இயல்…. அதிக நேரங்கள் குடும்பத்தின் அனேக உறுப்பினர்கள் வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டி சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அன்புகளை வெளிப்படுத்துவதற்கு பதிலாக ஏற்படும் சிறிய எரிச்சல்களை வெளிபடுத்துவதும் ஏவல்களை செய்வதும் பரஸ்பரம் குடும்பத்தின் ‘அரசன்” ‘அரசி”யிடையே வார்த்தை அத்து மீறல்கள் மன உழைச்சலகளையும், மன, உடல் வன்முறைகளையும் குடும்பங்களிடையே ஏற்படுத்தி வருகின்றன என்பதை அறிய முடிகின்றது.
குடும்ப வாழ்வில் வெற்றிகள், தோல்விகள் மகிழ்சிகள், கவலைகள் என்ற எல்லாவற்றிற்கும் கூட்டுப் பொறுப்பே காரணம் என்பது உணரப்பட வேண்டும், ஏற்கப்பட வேண்டும். மாறாக வெற்றிகளுக்கும், மகிழ்ச்சிகளுக்கும் ஒரு தரப்பு மட்டும் உரிமை கொண்டாடி மற்றய தரப்பை குறை கூறுவது நிராகரிப்பது ஏவலை இடுவது நிறைவான வாழ்வை தொடருவதற்கு ஏதுவாக இருக்க மாட்டாது. இங்கு பல இடங்களில் சரி, பிழையை பார்க்காமல்…’சரியங்க… சாரியிங்க…” என்று ஈகோவை விட்டுச் செயற்படுவோமானால் மகிழ்ச்சி தொடர்ந்தும் நிலைக்கும்…. இணைந்தே இந்த பேரிடரை நாம் வெல்ல முடியும்.
கூடி இருந்து கும்மாளம் அடிப்பதற்குரிய காலம் இல்லை இது கூடாக ‘பொங்கி படைத்து புகைப்படம்: எடுத்து பிரசுரித்து இல்லாதவர்கள், கிடைக்காதவர்களை ஏங்க வைக்கும் செயற்பாடுகளை நாம் எம்மை அறியாமலே செய்தல் சரியாகாது.
கூடவே பேரிடர் காலத்து உணவாக மிக அடிப்படையான உணவை மட்டும் சமைத்து உண்ணுவோம். மேலதிகமாக உள்ளவற்றை ஒருவேளையேனும் கிடைக்காதவர்களுக்கு நேரடியாகவேனும் உலக சமநிலை மூலம் மறைமுகமாகவேனும் கிடைக்க ஆவன செய்வோம்.
ஒன்று மட்டும் மறக்காதீர்கள் உலகத்தின் ஒரு மூலையிலாவது இந்த கொரனாவின் கோரமுகத்தை காட்டியபடி இருந்தால்…; மீண்டும் மீண்ட எமக்கு வராது என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. காரணம் நாம் உலகமயமாக்களுக்குள் கட்டுண்டே இருக்கின்றோம். தடுப்பு மருந்தும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை.
எந்த நாட்டு மக்களின் இழப்பும் நாம் கொண்டாக கூடியவை இல்ல. மாறாக அவை எமக்கு வருத்தமானவை.. இழப்பானவை…. அது சீனாவாக இருக்கலாம்….. அமெரிக்காவாகவும் இருக்கலாம்.
Apr 08, 2020