ஆனால், இந்த நேரத்திலும் ஒரு கூட்டம், அச்சத்தை விதைத்து, அதில் இலாபம் பார்க்கிறது. இன்னொரு கூட்டம், இதை எப்படிக் காசாக்கலாம் என்று யோசிக்கிறது.
மனித மனம் எவ்வளவு விந்தையானது? இன்று எம்முன் உள்ள கேள்வி, எமக்கு வேண்டியது இலாபமா, மனிதாபிமானமா என்பதேயாகும்.
இந்தப் பத்தியை இரண்டு நிகழ்வுகளுடன் தொடங்க விரும்புகிறேன்:
- ஒரு பிரபல விளையாட்டு வீரர், தனது சொந்த ஹோட்டல்களை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றி, அரசிடம் கொடுத்துள்ளார் என்ற தகவலை, ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிடுகிறார். இன்னொரு நபர், அச்செய்தியின் கீழ், குறிப்பிட்ட விளையாட்டு வீரருக்கு கொரோனாவா என்று விசாரிக்கிறார்.
- பல நாடுகளில் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக, கைகழுவும் கிருமிநீக்கித் திரவத்தை, எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை.
இதற்கிடையில், ஒருவரிடம் இருந்து 1,700 கிருமிநீக்கிப் போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். அவர், இதற்குத் தட்டுப்பாடு நிலவுவதால், இதை இணையத்தின் வழி, அதிகூடிய விலைக்கு விற்பதற்குத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இவை இரண்டும், இந்த நெருக்கடி நிலையிலும், மனிதர் எவ்வாறு சிந்திக்கிறார்கள்; செயற்படுகிறார்கள் என்பதைச் சொல்வதற்கான உதாரணங்கள் மட்டுமே.
தனிமனித மட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் இலாபத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் இடையிலான போரின் இன்னோர் அரங்கை, கொரோனா நோய்த்தொற்று உருவாக்கியிருக்கிறது.
உலகளாவும் கொரோனா
இதை எழுதும் போது, சீனாவில் நோய்த்தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்காகத் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வைத்தியசாலையை, சீனா மூடியுள்ளது. அங்கு, இயல்புவாழ்க்கை திரும்பியுள்ளது. இது மிகவும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்திப் பல மருத்துவ பணியாளர்களின் உயிர்த்தியாகங்களின் ஊடே, இது சாத்தியமாகியுள்ளது.
இன்று சீனாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, சீனாவுக்கு வெளியே இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம். (இதை எழுதும் போது, உலகளாவிய ரீதியில் 198,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பாதிக்கப்பட்டோர் 81,058 பேர்)
இத்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில், ஈரான் முதன்மையானது. இதுவரை 16,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை, ஈரானின் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
ஐரோப்பாவில் இப்போது வேகமாகக் கொரோனா பரவுகிறது. நவீன மருத்துவமனைகள், தயார்நிலை, பொருளாதார நிதிவளம், மனிதவளம் என அனைத்தையும் கொண்டதாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்ற போதும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500யைத் தாண்டிவிட்டது. ஸ்பெயினில் கடந்த சில நாள்களிலேயே, இந்தத் தொற்றின் தாக்கம் கடுமையானது. இங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 530க்கும் அதிகம்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தொற்றின் வீரியம் ஜூலை, ஓகஸ்ட் மாதமளவில் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
பல ஐரோப்பிய நாடுகளில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒன்று சேர்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தங்குமிடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஓரளவு பயனளித்துள்ளன.
ஆனால், இந்த நடைமுறைகளை எல்லா நாடுகளும் செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குறிப்பாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் வேறுவகையான அணுகுமுறையை மேற்கொள்கின்றன.
செவ்வாய்கிழமை இது குறித்து, பிரித்தானியாவின் தலையாய தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்க ஆலோசகருமான பேராசிரியர் நீல் பேர்கசன், பின்வருமாறு தெரிவித்தார்: “எமது அறிவியல் அனுமானங்கள் மட்டும், மாதிரி எடுமானங்களின்படி, இத்தொற்றின் விளைவால் 20,000 பேரின் மரணத்துடன் இது முடியுமாயின் அது நமக்கு வெற்றியே. ஏனெனில், நாங்கள் 260,000 பேரை இத்தொற்றுக்குப் பலி கொடுக்க நேரலாம்”.
இத்தாலியைக் கைவிட்ட ஐரோப்பா
ஐரோப்பாவில் முதன்முதலில் இத்தொற்று இத்தாலியிலேயே பரவியது. கொரோனா வைரஸ் தாக்கம், கட்டுக்கடங்காமல் போகத் தொடங்குவதை அறிந்த இத்தாலி அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமும் உதவி கேட்டது. குறிப்பாக முகத்தை மூடும் துணிகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அடிப்படை உதவிகளைக் கேட்டது. ஆனால், அவர்களுக்குக் கிடைத்த பதில் மௌனம் மட்டுமே.
ஐரோப்பிய நாடுகளின் நடத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. மிகச் சாதாரண அடிப்படை மருத்துவ உதவிகளைக் கூடச் செய்வதற்கு, ஏனைய நாடுகள் மறுத்தமையானது, ‘என்னதான் ஒன்றியம், ஒற்றுமை; தேவைக்கு உதவி என்று கேட்டாலும் நடைமுறையில், தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’ என்பதை, ஐரோப்பிய நாடுகள் செயலில் காட்டிவிட்டன.
இத்தாலிக்கு உதவி, அவர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்தது. சீனா, இத்தாலிக்கு ஒன்பது மருத்துவப் பணியாளர்களையும் 31 தொன் அளவிலான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளையும் முதற்கட்டமாக அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தாலியின் உதவிக்கு வந்த நாடு கியூபா.
கொரோனா வைரஸ் குறித்து, சேர்பியாவின் பிரதம மந்திரியிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்ன பதில் மிக முக்கியமானது: “இன்றைய நிலையில், எமக்கு உதவக்கூடிய ஒரே நாடு சீனா மட்டுமே. ஐரோப்பிய ஒற்றுமை என்று, ஒன்று இல்லை என்பது, இப்போதாவது எமக்கெல்லாம் விளங்கியிருக்க வேண்டும். அந்த ஒற்றுமை, ஐரோப்பிய உடன்படிக்கைக் கடதாசியில் உள்ள, ஒரு தேவதைக் கதை மட்டுமே. அதை நம்புவதை விட, சீனாவை நம்புவதே, எமது மக்களைக் காப்பதற்கான பயனுள்ள வழி” என்பதாகும்.
மக்கள் நலனற்ற அரசுகள்
இந்த நோய்த்தொற்று, பொருளாதார ரீதியாகப் பலதுறைகளைப் பாதித்துள்ளது. விமானப்போக்குவரத்துத் துறை, சுற்றுலாத்துறை என்பன பிரதானமானவை. ஸ்கன்டினேவியன் விமானசேவை, நோர்வேஜியன் விமானசேவை ஆகியன, தமது 90சதவீதமான பணியாளர்களை, வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனால், வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 பேர். இதேபோல, சுற்றுலாத்துறையில் பணிபுரிவோர், உணவகங்களில் பணிபுரிவோர் என, ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர்.
அதேவேளை, தினக்கூலிகள் மிகப்பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். பொதுவில், இயல்புநிலை பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கை, வீட்டுக்குள் முடங்கிவிட்டமையால், பல சேவைத்துறைப் பணியாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள். மறுபுறம், ஒப்பந்த அடிப்படையில் உள்ளவர்களுக்கு, உரிய மருத்துவ விடுப்புகள் கிடையாது. எனவே, அவர்கள் தொற்றுக்கு உட்பட்டால், அவர்களுடைய சம்பளம் குறைவடையும்.
கொரோனா தொற்றுக்கு உட்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பல நாடுகளில் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் 14 நாள்களுக்குச் சிறப்பு விடுப்பு கிடையாது. இவை ஒன்றில், அவர்களுக்குரிய விடுப்பு நாள்களில் இருந்து கழிக்கப்படும். அல்லது, சம்பளமற்ற விடுப்பாகக் கருதப்படும். இதனால், பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆட்பட்டதை மறைத்து, பணிக்குச் செல்கிறார்கள். இதுவும் நோய்த்தொற்றுப் பரவுவதற்கு, ஒரு காரணமாயுள்ளது.
மறுபுறம், இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகுவோரைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான மருத்துவ வசதிகள், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூடக் கிடையாது.
குறிப்பாக, இத்தாலியில் வயதானவர்களை விட, இளையோருக்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், வயதானவர்கள் இறக்க விடப்படுகிறார்கள். அத்தோடு, போதுமான பரிசோதனைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை. இதனாலேயே உலக சுகாதார நிறுவனம் “சோதனை, சோதனை, சோதனை, நிறையச் சோதனை செய்யுங்கள்; அதுவே இதைக் கட்டுப்படுத்துவதற்கான வழி” என்று, உலக நாடுகளைக் கெஞ்சுகிறது.
இவ்வாறு, மனிதாபிமானம் சார்ந்த பல்வேறு நெருக்கடிகளை நாம் எதிர்நோக்குகையில், இலாபத்தை இழந்த நிறுவனங்களும் தனியார்துறையினரும் தம்மைக் காக்கச் சொல்லி, அரசுகளிடம் கையேந்துகின்றன.
மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகளையோ, கட்டில்களையோ, பரிசோதனைகளையோ செய்ய இயலாத அரசாங்கங்கள் எல்லாம், தனியார் துறையையும் அவர்தம் பொருளாதாரத்தையும் காப்பாற்ற, பலகோடி மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளன.
தேசிய மருத்துவத் துறையை மேம்படுத்தாமல், அதற்கு நிதியை ஒதுக்காமல், தனியாருக்கு நிதியொதுக்கிய ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேக்கல், “எமது பொதுச் சுகாதார சேவைக்கு, சுமையேற்றா வண்ணம், மக்கள் நடந்து கொள்ள வேண்டும்” என்று கோரினார்.
அதே வழித்தடத்தில், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்ஸ்சன் “பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்கப்போவது தவிர்க்கவியலாதது, நாம் எமது மருத்துவத்துறைக்கு நெருக்கடி கொடுக்காமல் இருப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்றார்.
இந்த நெருக்கடி, உலகின் பிரதான போக்காகவுள்ள முதலாளித்துவத்தின் கோரமுகத்தை, மீண்டுமொருமுறை காட்டி நிற்கிறது. சுயநலமும் இலாபவெறியுமே உலகை ஆட்டிப்படைக்கின்றன என்பதை, இத்தாலியில் நடப்பனவும் மேற்குலகெங்கும் வேலைகளை இழந்து, அன்றாட வாழ்வுக்கு அல்லல்படுவோரின் நிலைமைகளும் உணர்த்துகின்றன. இந்த நெருக்கடியான நேரத்திலும், இலாபம் குறைவுபடக்கூடாது என்பதில், தனியார்துறை கவனமாக உள்ளது.
இத்தாலி இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளின் அடிப்படை, அது கடந்த பத்தாண்டுகளில் மருத்துவத்தைத் தனியார் மயப்படுத்தியதோடு, அரச மருத்துவத்துறையில் ஏராளமான நிதிக்குறைப்புகளைச் செய்தது. குறிப்பாக, இவை ‘மருத்துவத்துறையை தனியார் மயமாக்கலும் வினைத்திறனாக்கலும்’ என்ற, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையின் அடிப்படையில் செய்யப்பட்டவை ஆகும்.
2011 முதல் 2018 வரையான எட்டு ஆண்டுகளில், இத்தாலி 63 தடவைகள் இவ்வாறான நிதிக்குறைப்புகளையும் தனியார்மயமாக்கலையும் செய்துள்ளது. தனியார்மயமாக்கலின் மோசமான விளைவை, இத்தாலி இப்போது கண்கூடாகப் பார்க்கிறது. இதை அறிந்த ஸ்பெயின், சில தினங்களுக்கு முன்பு, அனைத்துத் தனியார் வைத்தியசாலைகளையும் தேசிய மயமாக்கியுள்ளது.
இலங்கையிலும் இலவசக் கல்வியையும் இலவச மருத்துவத்தையும் கேள்விக்குட்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களும் பொதுச்சுகாதாரத்துறை தனியார்மயமாக்கபடுவதை ஆதரிப்போர் இருக்கிறார்கள். தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை எள்ளி நகையாடுவோர் இப்போது கொஞ்சம் திரும்பிப் பார்க்கட்டும். எந்தெந்த நாடுகளை அவர்கள் உதாரணம் காட்டினார்களோ அந்நாடுகளே இன்று திணறுகின்றன.
நோர்வேயின் முதன்மையான பொறியியல் பல்கலைக்கழகம், கொரோனா தொற்றுதொடர்பாக மாணவர்களுக்கு விடுத்த செய்தி: ‘நோர்வேக்கு வெளியே இருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள், உடனடியாக நாடு திரும்ப வேண்டும். குறிப்பாக, அமெரிக்கா போன்ற மோசமான, வளர்ச்சியடையாத சுகாதார சேவைகள், மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில் இருந்து மீள்வது கட்டாயமானது’ என்பதாக அச்செய்தி அமைந்திருந்தது.