கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வௌிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற்கிறது.
கொரோனா வைரஸ், இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மிகப் பெரிது. அதேவேளை, இதை மய்யப்படுத்தி ஊடகங்களின் வழி பரப்பப்படும் செய்திகளும் சமூக வலையமைப்புகள் வழி பரிமாறப்படும் தகவல்களும், பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.
இவை ஒருவகையான பீதி கலந்த மனநிலையை, சமூகத்தில் உருவாக்கியுள்ளன. “அஞ்சத் தேவையில்லை” என்று, அச்சமூட்டப்படுவது போல, உலக சுகாதார நிறுவனம், பலமுறை திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டது. ஆனால் யாரும் கேட்டபாடில்லை.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் 1,868 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். சீனாவுக்கு வெளியே ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436.
இந்த நோய் பரவத் தொடங்கியது முதல், நாளொன்றுக்கு 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முதன்முறையாக 2,000யை விடக்குறைந்து, 1,886 ஆக இருந்தது. இது கொஞ்சம் ஆறுதலான விடயம்.
இவ்வாறாக, வைரஸ் எனப்படும் நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கி, பாரிய சேதங்களை உருவாக்கியது, மனிதகுல வரலாற்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்றே!
ஆனால், அண்மைக் காலங்களில் இது அதிகரித்துள்ளது. பொதுவாக, இந்த வைரஸ்கள், குறிப்பிட்ட சில விலங்குகளிடம் இருந்து, தனது பாதையை மாற்றிக்கொண்டு, வீரியம் மிக்கதாக மனிதனைத் தாக்கும். குறிப்பாக, முதலாம் உலகப் போரின் போது, ஐரோப்பாவை ‘இன்ப்ளூயன்சா வைரஸ்’ தாக்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது.
பொதுவான கருத்து யாதெனில், இவ்வகையான வைரஸ்கள் ஒவ்வொரு நான்கு தசாப்தங்களுக்கு ஒருமுறை, தம்மைத் தகவமைத்துக் கொண்டு வந்து, தாக்கும் என்பதாகும்.
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களில், இவ்வாறாக எட்டு வைரஸ்கள் மனிதகுலத்தைத் தாக்கியுள்ளன. இவை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்தக் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?
ஒருபுறம், இந்த வைரஸின் தாக்குதல்களில் இருந்து, தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. அதேவேளை, இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் அறிவுலகம் ஈடுபட்டுள்ளது.
மறுபுறம், இது இயற்கையாகவே உருவானதா, திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற வாதங்களும் நடந்தவண்ணம் உள்ளன. இந்த வைரஸ்களின் பரவும் தன்மை குறித்துக் கருத்துரைக்கும் நிபுணர்கள், சில முக்கியமான அவதானங்களை முன்வைக்கிறார்கள்.
- 2000ஆம் ஆண்டுவரை, எந்தவொரு கொடிய வைரஸும் மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவவில்லை. மனிதர்கள் ஒருவரோடொருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இதுவரையான வைரஸ்கள், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றுபவையாகவே இருந்திருக்கின்றன. இப்போதைய வைரஸ்கள், மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுகின்றன.
- இது, ஓர் இயற்கையான விளைவு என்பதை, நம்புவதற்கான எந்தக் காரணிகளும் இல்லை. இது, மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
ஏனெனில், இதன் தாக்கத்தையோ அதற்கான தீர்வையோ கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. விலங்குகளில் இருந்து பரவும் வைரஸ்களுக்கு, இப்படி நடப்பதில்லை. அதன் மூலங்களும் மருந்துகளும் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.
- கடந்த காலங்களில், உயிரியல் ஆய்வுகூடங்களில் இருந்துதான், இவ்வாறான வைரஸ்கள் திட்டமிட்டு வெளிவிடப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
குறிப்பாக அமெரிக்கா, தனக்கு வெகுதொலைவில் இவ்வகையான ஆய்வு கூடங்களை வைத்துள்ளது. முக்கியமாக, இவை கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ளன.
இவ்வாறான 400 ஆய்வுகூடங்களை, அமெரிக்கா வைத்துள்ளது. இதற்கு முந்தைய, பல வைரஸ்களின் தோற்றுவாயாக, இவையே திகழ்ந்துள்ளன. ஆனால், இவை தொடர்பான செய்திகள் எதுவும், பொதுவெளியில் பகிரப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வல்லரசுப் போட்டியின் ஒருபகுதி இதுவென, சில பூகோள மூலோபாய சிந்தனையாளர்களும் இராணுவ வல்லுநர்களும் கருதுகிறார்கள். அவர்களின் கருத்துகளின்படி,
- இந்தக் கொரோனா வைரஸ் உருவான இடம், உருவான காலம் போன்றன, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. இது, உச்சபட்ச சேதத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது.
இது, பரவத் தொடங்கிய காலம், சீனர்கள் புத்தாண்டை எதிர்நோக்கியிருந்த காலம் ஆகும். சீனர்கள், அவர்களது நாட்காட்டியின் படி, புத்தாண்டைக் கொண்டாடும் காலத்தில் இது உருவானது. இந்தப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சீனர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழமை.
சீனாவின் மிகப்பெரிய உள்நாட்டு இடப்பெயர்வு, இக்காலத்தில் ஏற்படும். எனவே, இக்காலத்தில் இது நாடெங்கும் பரப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்று, இந்த வைரஸின் மய்யமாக இருக்கும் வூகான் மாநிலம், சீனாவின் மிகப்பெரிய போக்குவரத்து மய்யம்; மிகப்பெரிய விமான நிலையத்தைக் கொண்டது; இங்கிருந்து உலகின் 60 நாடுகளுக்கும் விமானங்கள் செல்கின்றன.
- அமெரிக்காவால் உருவாக்கப்பட்டுள்ள ‘புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்’ (Project for the New American Century) ஒரு பகுதியாக, உயிரியல் யுத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
‘அமெரிக்காவின் பாதுகாப்பை மீளக்கட்டுதல்’ என்ற உபதலைப்பின் கீழ், பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: ‘உயர்தரமான வகையில் அமைந்த ‘குறிப்பிட்டு’த் தாக்கக்கூடிய உயிரியல் ஆயுதங்கள் அவசியமானவை மட்டுமன்றி, அரசியல் ரீதியாகப் பயனுள்ள கருவியுமாகும்’ என்பதாகக் காணப்படுகின்றது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத்தால் வெளியிடப்பட்ட நூலொன்று, சில முக்கியச் செய்திகளைச் சொல்கிறது. உயிரியல் யுத்தத்தில் மருத்துவ அம்சங்கள் (Medical aspects of biological warfare) என்ற அந்நூலில் Leonard Horowitz, Zygmunt Dembek ஆகிய இரு விஞ்ஞானிகளும், புதிய உயிரியல் ஆயுதங்கள் கொண்டிருக்க வேண்டிய இரண்டு அவசியமான பண்புகளை அடையாளப்படுத்துகிறார்கள்.
(1) புதிய, கண்டுபிடிக்க முடியாத, மூலத்தை அடையாளம் காணவியலாத, நோய்த்தொற்றியலை ஆராய முடியாததாக இருத்தல் வேண்டும்.
(2) குறித்த புவியியல் பிரதேசத்தை, இனக்குழுவைக் குறிவைத்துத் தாக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
பொருளாதாரப் பாதிப்புகள்
உலகம் சுருங்கிவிட்டது என்றும் வர்த்தகமும் தொடர்பாடலும் இலகுவாகிவிட்டன என்றும் நாம் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு. இதை உலகமயமாக்கலின் வரமாகப் பார்ப்பவர்களும் உண்டு.
ஆனால், கொரோனா வைரஸ், இதன் மறுபக்கத்தை, இப்போது வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது, எவ்வாறு என்று நீங்கள் கேட்கக்கூடும். உதாரணங்கள் இதோ.
- சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் புகுயாமா: அணுமின் நிலையத்தைச் சுத்தம் செய்யும் பணிகள், இப்போதும் நடைபெறுகின்றன. இதில் பணியாற்றும் பணியாளர்கள், கதிரியக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளச் சிறப்பு மேலங்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 6,000 மேலங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சீனாவில் இருந்து பிரத்தியேகமாகத் தருவிக்கப்படுபவை. இப்போது சீனாவில் இருந்து, பொருள்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலங்கிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், கதிரியக்கத்தைக் குறைக்க, தொடந்து பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுகிறது.
- இன்று உலகளாவிய ரீதியில், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கான (antibiotics) தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், சீனாவில் இருக்கின்றமையால் இத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலைமையே, வேறு பல தொழிற்றுறைகளுக்கும் ஏற்பட்டுள்ளன.
- இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில், அலைபேசிகளின் விற்பனை 50சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்படுகின்றது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் அலைபேசிகளும் அதன் உதிரிப்பாகங்களும் 30 தொடக்கம் 50சதவீதத்தால் குறைவடைய உள்ளமையால் இது நிகழ்ந்துள்ளது.
- கடந்த செவ்வாய்கிழமை (18) ஆசியாவின் பங்குச்சந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. இதைவிட, சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தங்கியுள்ள அனைத்து நாடுகளும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன.
இவற்றைவிட, சீனா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்தச் சவால்கள் சீனாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்த வைரஸ், இன்னொரு வகையான உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிவிடக் கூடியது என, பல பொருளியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அதற்குச் சில முக்கிய தரவுகளை அடுக்குகிறார்கள்:
- பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Hyundai, அதன் சீனத் தொழிற்சாலையில் இருந்து உதிரிப்பாகங்கள் வராமையால், தென்கொரியாவில் அமைந்துள்ள அதன் மிகப்பெரிய தொழிற்சாலைப் பணியாளர்களில் 25,000 பேரை, தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இதனால், இந்நிறுவனத்துக்கு வாரமொன்றுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமேற்படுகிறது. Nissan போன்ற பிற கார் உற்பத்தி நிறுவனங்களும் இதைப்போல தற்காலிக ஆட்குறைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
- உலகளாவிய கப்பல் போக்குவரத்து, பாரிய சரிவைக் கண்டுள்ளது. பல கப்பல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, பொருள்கள் ஏற்றுவது தடைப்பட்டு உள்ளன.
சீனாவின் இரண்டு முக்கிய துறைமுகங்களான ஷங்காய், ஹொங் கொங்கில் அரைவாசிக்கும் குறைவான பணியாளர்களே கடந்த திங்கட்கிழமை (17) பணிக்குத் திரும்பியிருந்தனர்.
உலகளாவிய கப்பல் சரக்குப் போக்குவரத்துத் தரவுகளை வெளியிடும் டென்மார்க் நிறுவனமான Sea Intelligence, கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்தது முதல், வாரமொன்று 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் இல்லாமல் போயுள்ளது என அறிவித்துள்ளது.
- எண்ணெய் விலைகள், கடந்த மாதம் 20சதவீதம் சரிந்துள்ளன. சீனாவின் அன்றாட எண்ணெய்ப் பாவனை, வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், இது உலகளாவிய தாக்கத்தைக் கொண்டுள்ளது.
- கடந்த ஒரு தசாப்த காலமாக, சீனர்களின் வெளிநாடுகளுக்கான சுற்றுலா அதிகரித்திருந்தன. குறிப்பாக, வளர்ச்சியடைந்து வரும் சீன மத்தியதர வர்க்கம், ஆண்டுதோறும் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் விளைவால், இவ்வாண்டு, இவ்வாறான பயணங்கள் நிகழவில்லை. இதனால், 2020ஆம் ஆண்டு, உலகளாவிய சுற்றுலாத்துறைக்கு 80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுகிறது.
கொரோனா வைரஸை, வெறுமனே ஒரு தொற்றுநோயாகவும் தீர்வுக்காக அறிவியலில் தங்கி நிற்கின்ற ஒன்றாகவும் மட்டும் பார்க்கும் பார்வையை, மாற்றியாக வேண்டும்.
இது மனிதர்களால் உருவாக்கப்பட்டதாயின், மனித குலத்தின் எதிரிகள், மனித குலத்தின் மீது தொடுத்திருக்கும் ஒரு போராகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இலாபவெறியும் அதிகார போதையும் எதையெல்லாம் செய்ய வைக்குமோ என்று எமக்குக் கலக்கமே எஞ்சுகிறது. இன்று, சீனர்களுக்கு எதிரான பொறாமையும் வெறுப்பும் கலந்த மனநிலை, எங்கும் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் பொருளாதாரத்தைச் சிதைப்பதன் மூலம், பிற பொருளாதாரங்கள் மேல்நிலையாக்கம் அடையலாம் என்ற வாதமும் ஆசையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், இது சாத்தியமாகாது.
சீனாவின் பொருளாதாரச் சரிவு, முழு உலகுக்குமானது. எல்லா வழிகளிலும் அபாயகரமான எதிர்வு கூறவியலாத எதிர்காலத்தை நோக்கி, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.