ஆனால், அரசியல் சீர்திருத்தங்களைக் கோரி, தேசிய அரசியல்வாதிகள் நடத்திய சாத்வீகப் போராட்டங்களின் பயனாக, ஆங்கிலேய ஆட்சியாளர்கள், இலங்கை மக்களுக்கு, சர்வஜன வாக்குரிமையை வழங்க, இணக்கம் தெரிவித்தனர். அதன்படி, 1931ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய, இலங்கை மக்கள் சர்வஜன வாக்குரிமையைப் பெற்றனர். பிரிட்டிஷ் சாம்ராட்சியத்தின் வெள்ளையர்கள் அல்லாதவர்களின் நாடுகளில், இந்த உரிமையைப் பெற்ற முதலாவது நாடு இலங்கையாகும்.
இலங்கை மக்களின் அரசியல் முதிர்ச்சியைப் பற்றி, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கேள்வியெழுப்பி, ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இலங்கை மக்கள் அந்த வாக்குரிமையைப் பாவிக்கும் முறையைப் பார்த்தால், அன்று, ஆங்கிலேய ஆட்சியாளர்கள், உண்மையைத் தான் கூறியிருக்கிறார்கள் என்றே சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இன்றும் நாம், அந்த உரிமையைப் பாவிக்கும் ஒரு நாளாகும். இன்று, இலங்கையின் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், தமது பிரதிநிதிகளை, இலங்கை மக்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்கிறார்கள் என்று பார்த்தால், நாம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், இன்னமும் வாழ்கின்றோமா என்ற கேள்வியை, எழுப்ப வேண்டும் போல் தோன்றுகிறது.
இன்றைய தேர்தலில், தாம் வாக்களிக்க வேண்டுமா, இல்லையா என்பதை, ஒவ்வொரு வாக்காளரும் ஏற்கெனவே முடிவு செய்திருப்பார்கள். அதன்போது அவர்கள், தமது அரசியல் ஆர்வத்தை ஒரு புறத்திலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், அரசியல்வாதிகள் மீதான தமது அதிருப்தியை மறுபுறத்திலும் கவனத்தில் கொண்டு, தமது முடிவை எடுத்திருப்பார்கள்.
அதேவேளை, தாம் வாக்களிப்பதாயின் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதையும் எந்தெந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்பதையும், அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.
அந்த விடயத்தில் தான், அவர்களில் பெரும்பாலானவர்கள், தமது அரசியல் முதிர்ச்சி, இன்னமும் நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையிலேயே இருக்கிறது என்பதைக் காட்டுகிறார்கள்.
பெரும்பாலான வாக்காளர்கள், தமது சொந்தத் தேவைகளை மட்டும் நோக்கமாகக் கொண்டு, “தேர்தலின் பின்னர் 10,000 ரூபாய் தருவோம்; 20,000 ரூபாய் தருவோம்; 1,000 ரூபாய் நாள் சம்பளத்தைத் தருவோம்” என்பவை போன்ற வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பார்கள்.
சிலர், குறிப்பிட்டதொரு கட்சி வெல்லப் போகிறது என்று தெரிவதால், தாமும் வெற்றியில் பங்காளியாக வேண்டும் என்பதற்காக, அக்கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
சிலர், தாம் பாரம்பரியமாக வாக்களித்த கட்சி என்பதற்காக, அந்தவொரு கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
ஒரு சிலர் தான், அபிவிருத்தி, பாதுகாப்பு, நல்லிணக்கம் போன்ற பொதுவான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து வாக்களிப்பார்கள்.
சுமார், 40 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தலைவர் பீட்டர் கெனமன், வாக்காளர்களின் சுபாவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, பெரும்பாலான மக்கள் எப்போதும் எவரைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று சிந்தித்தே வாக்களிக்கிறார்கள். எவரை, எந்தக் கட்சியை வெல்லச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, வாக்களிப்பதில்லை எனக் கூறியிருந்தார்.
தாம் வாக்களிக்கும் கட்சி, வெற்றி பெற வேண்டும் என, அவர்கள் நினைக்கவில்லை என்பது, அதன் அர்த்தமல்ல. தாம் வாக்களிக்கும் கட்சியின் உண்மையான சுபாவத்தை அறியாமல், பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதே, இதன் அர்த்தமாகும். இன்றும் அந்த நிலையே காணப்படுகிறது.
இவ்வாறு வாக்களிக்கும் மக்கள், தமது வாக்கினால், ஒரு கட்சி பதவிக்கு வந்து, ஒரு சில மாதங்களிலேயே அவ்வாட்சியைப் பற்றி விரக்தியடைந்து, கெனமன் கூறியதைப் போல், அக்கட்சியைத் தோல்வியுறச் செய்ய, மீண்டும் மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.
இதன் காரணமாக, 1978ஆம் ஆண்டில் இரண்டாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்படும் வரை, மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும், அரசாங்கத்தை மாற்றும் நிலை இருந்தது.
இரண்டாவது குடியரசு அரசமைப்பு, அமலுக்கு வந்ததன் பின்னர், அதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக, அரசியல் கட்சிகள், ஒரு முறைக்கு மேல் பதவியில் இருக்கும் நிலை உருவாகியது. ஆயினும், இன்னமும் பதவிக்கு வரும் கட்சியைப் பற்றி, மிக விரைவிலேயே விரக்தியடையும் நிலை இன்னமும் காணப்படுகிறது.
எனவேதான், நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும், ‘திருடர்கள்’ என்றாெதாரு கருத்து, அண்மையில் பிரபல்யம் அடைந்தது. அது, எந்தளவு பிரபல்யம் அடைந்தது என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களே, அதைத் தொலைக்காட்சி விவாதங்களின் போது, சுட்டிக்காட்டலானார்கள்.
தம்மைத் தவிர்ந்த, ஏனைய 224 பேரும் ‘திருடர்கள்’ என்று கூறுவதன் மூலம், அவர்கள் எடுத்துக் கூற முயன்றார்கள் என்பது வேற விடயம்.
எவ்வாறாயினும், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கருத்தை நாடாளுமன்றத்தின் மீதான அவப்பெயராகக் கருதவில்லை. விந்தை என்னவென்றால், நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும், ‘திருடர்கள்’ என்று கூற விரும்பிய பலர், அதே உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், இம்முறையும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, அதை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை என்பதுடன், அதே வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் அவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பது, பொதுவான அபிப்பிராயமாக இருந்த போதிலும், அவ்வாறு முடிவு செய்ய முடியாது.
கொள்கைக்காக வாக்களிப்பதாக இருந்தால், நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கோ, இனப்பிரச்சினையைத் தீர்க்கவோ, சமூகச் சீரழிவை இல்லாது ஒழிக்கவோ, எவ்விதத் திட்டமோ கொள்கைகளோ இல்லாத கட்சிகளை, மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
சந்திரிகா குமாரதுங்க, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று, பகிரங்கமாகவே தெற்கோ, தேர்தல் மேடைகளிலும் கூறியே, 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அவர், 62 சதவீதம் வாக்குகளைப் பெற்று, அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அந்தளவு வாக்கு சதவீதத்தைப் பெற்று, இதுவரை எவரும் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஆனால், அவர் அந்தத் தீர்வை வழங்கவென, சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர், திட்டமொன்றை முன்வைத்த போது, அதேமக்கள் அந்தத் திட்டத்தை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த காலங்களில், நடைபெற்ற சில தேர்தல்களின் போது, அரசியல் அறிவே இல்லாத தொலைக்காட்சி நாடக நடிகைகள், மூத்த அரசியல்வாதிகளை விட, விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களும், அதேபோல் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெறுகிறார்கள். கொலைக் குற்றச்சாட்டின் பேரில், விளக்க மறியலில் இருந்த ஒரு வேட்பாளர், கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தலொன்றின் போது, வெற்றி பெற்றது மட்டுமல்லாது, விருப்பு வாக்குகளில் முதலிடத்துக்கும் வந்தார். மக்கள் அரசியல் மூலம், எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்வி, இதனால் எழுகிறது.
வடபகுதியில், அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில், புலிகளின் புகழ் பாடுவார்கள். அதன் மூலமே, சில வேட்பாளர்கள் விருப்ப வாக்குகளில் முன்னணியில் இருந்த சந்தரப்பங்களும் உள்ளன. ஆனால், அதே புலிகள் அமைப்பில் இணைந்து, ஆயுதப் போரில் ஈடுபட்டு, பல இன்னல்களைச் சந்தித்த முன்னாள் போராளிகள், தேர்தலில் போட்டியிட்ட போது, மக்கள் அவர்களை நிராகரித்தனர். இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
தேர்தல்களின் போது, மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவர் டியூ குணசேகர, சிறந்ததோர் வழிகாட்டலை, அண்மையில் வழங்கியிருந்தார். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமியற்றல், கொள்கை வகுத்தல், அரச நிதியைக் கண்காணித்தல், பொது மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் ஆகிய நான்கு கடமைகளை, நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்” என, அவர் கூறியிருந்தார்.
இது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும், அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பொது மக்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவே இருக்கிறது. ஆனால், இதனை ஏற்போர் தான் இல்லை.