கொழும்பு (2)

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியபோது – தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தற்கொலை அங்கியானது ஈராக் போன்ற இடங்களில் தற்கொலை தாக்குதல்களின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்திய அதே வகையானது என்றும் சிறிலங்காவில் இடம்பெற்றிருக்கும் தாக்குதல்களில் அவை பயன்படுத்தப்பட்டிருப்பது அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதா வெளியிலிருந்தே கொண்டுவரப்பட்டதா என்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தற்கொலை அங்கிக்கு இரண்டு கட்டுப்பாட்டு ஆளிகள் இருப்பது வழக்கம் என்று கூறிய பொலீஸார், அவற்றில் ஒன்று வெடிக்கவைப்பதற்கான ஆளி – மற்றையது அவசரத்துக்கு அங்கியை கழற்றுவதானால், அதற்கு முன்னர் பயன்படுத்தவதற்கென்று விசேடமாக அங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் ஆளி என்றும் –

ஆனால், பெரிய ஞாயிறு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தற்கொலை அங்கியிலிருந்தது ஒரே ஒரு ஆளி என்றும் அங்கியை அணிந்தால் வெடிக்கவைப்பது ஒன்றுதான் தெரிவு என்பதை உறுதிப்படுத்தும்வகையில் அது அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது – இந்த காரணத்தினால்தான் சம்பவம் இடம்பெற்ற அன்று தெஹிவளை அன்னை மரியாள் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தச்சென்ற ஒருவர் அது வெடிக்காதுபோக தெஹிவளைக்கு தான் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்று அங்கியில் என்ன பிரச்சினை என்று பார்ப்பதற்கு கழற்ற முற்பட்டபோது அங்கு அது வெடித்து குண்டுதாரி உயிரிழந்ததாகவும் பொலீஸார் தெரிவித்தார்கள்.