சன்னங்களுடன் சனங்களும் வனங்களும்

“கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கம்தான். ஆனால் வேறு வழியில்லை.

கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும்.

ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் பத்துப் பன்னிரண்டு ஓடுகள் உடையும்.விசுவர் வந்து எவ்வளவு கவனமாகப் பழங்களை இறக்கினாலும் சோளகக் காற்றிற்கு விழுகின்ற காய்களைச் சமாளிக்கவே முடியாது.

கிளைகளை வெட்டுவதற்கும் மனம் வருவதில்லை. கோடை வெயிலை ஏந்துவதற்காக அவற்றை வளர்த்து வளர்த்து வீட்டில் பாதியை மூடிக் காத்துக் கொண்டிருந்த தாயல்லவா.

முப்பது வருச யுத்தத்திற்கூடத் தப்பி நின்ற வலிய சீவன்.

நான்கு முறை இடம்பெயர்ந்து வீட்டை விட்டுச் சென்றிருக்கிறோம். கூட்டிக் கழித்துப்பார்த்தால், சுத்தமாகப் பதினைந்து ஆண்டுகள் நாங்கள் வீட்டிலிருக்கவில்லை.

ஆனாலும் பலா நின்றது. காவலாக, தாயாக, நாங்கள் வாழ்ந்த அடையாளமாக, வரமாக ஏன் தெய்வமாகக் கூட.

எத்தனையோ விருந்தாளிகள் வந்து அதன் நிழலில் குளிர நின்றிருக்கிறார்கள். மூன்று தடவை வீடழிந்த போதும் அது மட்டும் தப்பி வாழ்ந்தது அதிசயமே. யுத்தத்தின் போது பதுங்குகுழியை மறைவாக அமைத்துது கூட இந்தப் பலர்வுக்குக் கீழ்தான்.

இப்படியெல்லாம் இருந்தாலும் புயலுக்குப் பதில் சொல்ல முடியுமா?

மனிதர்களின் சுயநலனுக்குச் சிலவேளைகளில் அளவே இருப்பதில்லை. தவிர்க்க முடியவில்லை என்றொரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டு பலாவை வெட்டினோம்.

மனதின் வலியை அடக்குவதற்கு இப்படித்தானே சமாதானங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெட்டிய மரத்தை அறுத்துப் பலகையாக்கலாம் என்று எடுத்துப்போய் அரிவு ஆலையில் போட்டபோது, அங்கே முதலில் மரத்தை பரிசோதித்தார்கள்.

அரிவு ஆலையில் மரத்தைப் பரிசோதிப்பது புதுமையாக இருந்தது. உங்களுக்குக் கூட இப்படி ஆச்சரியமான கேள்வி எழக்கூடும்.

”எதற்காக இப்படி மரத்தை ஆராய்கிறீங்கள்?” எனக் கேட்டேன்.

“மரத்தில ஷெல் பீஸ் (எறிகணைத் துண்டு) இருக்கலாம். அதுதான் பாக்கிறம்” என்றார்கள்.

“ஓ…”

இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர் வீட்டுத் தங்கம் அன்ரியின் மாடு ஒன்று மிதிவெடியில் சிக்கிக் காலொன்றை இழந்தது. இப்பொழுது அந்த மாட்டுக்கு மூன்று கால்கள். இனி அதனுடைய காலம் முழுவதற்கும் மூன்று கால்கள்தான்.

ஒரு மாட்டுக்கு மூன்று கால்கள் உண்டென்று நான் சொன்னால் நீங்கள் யாரும் மறுக்கமுடியாது. இது தனியே தங்கம் அன்ரியின் மாட்டுக்குத்தான் என்றில்லை. பரந்தனில் இப்படி இன்னும் இரண்டு மாடுகள் உண்டு. பளையில் ஒன்று. ஜெயபுரத்தில் இரண்டு. முறிகண்டியில் ஒன்று. மாங்குளத்தில் ஒன்று. இதெல்லாம் நான் கண்களால் கண்டவை. இதை விடக் கூடுதலாக இருக்கலாம்.

யுத்தம் முடிந்து காலங்கள் கழிந்தோடினாலும் இன்னும் கண்ணி வெடி அபாயம் பல இடங்களில் உண்டு. தினமும் கண்ணிவெடியகற்றும் பணிகளில் 800 பேருக்குமேல் கிளிநொச்சியில் மட்டும் வேலை செய்கிறார்கள். அதிகாலை நான்கு மணி தொடக்கம் அவர்களை நீங்கள் வீதிகளில் காணலாம். காலை ஏழு மணிக்கு கண்ணி வெடி அகற்றும் களங்களில் நிற்பார்கள்.

இப்படித் தினமும் கண்ணி வெடிகளையும் மிதி வெடிகளையும் அகற்றினாலும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இதற்காக வேலை செய்ய வேணும் என்று சொல்கிறார்கள் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர்.

மரத்தை அரியும்போது ஒரு இடத்தில் எறிகணைத் துண்டொன்றின் சிதறல் இருக்கிறது என்று அரிவதை நிறுத்தினார்கள்.

கூர்ந்து கவனித்தேன்.

மரத்தின் ஆழ் பகுதியில் ஒரு எறிகணைத்துண்டு இறுகிப்போயிருந்தது. பச்சை மரத்தில் புத்தம் புதியதாகவே அந்த ஈயச் சிதறல் ஒரு துயர்க்காலத்தின் சின்னத்தைப்போல ஒளிர்ந்தது.

எங்கள் உடலில் ஏறியிருக்க வேண்டிய சிதறலைத் தன்னுடலில் ஏந்திய பலாவை நினைக்க கண்கள் பனித்தன. நம்மைக்காத்த பெருந்தேவியே என எண்ணினேன்.

இப்படி இன்னும் எத்தனை சிதறல்கள் இருக்குமோ!

அந்தச் சிதறலை எடுப்பதற்காக அதற்கென்றே வைத்திருக்கும் ஆயுதத்தினால் கொத்தி எடுத்த பிறகு தொடர்ந்து அரிந்தனர்.

“வன்னியில் உள்ள மரங்கள் அத்தனைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கு. வீட்டிலுள்ள மரங்களுக்கு மட்டுமில்லை. காட்டில நிக்கிற மரங்களுக்கும்தான்” என்றார் அரிவாளர்.

“அனுராதபுரம் முதிரையை விட வன்னி முதிரைக்குத்தான் கிராக்கி. கொழும்பு முதிரையை விட வன்னி முதிரைக்கு விலையும் கூட. ஆனால், வன்னி முதிரைக்குக் கழிவு கூட” என்றார் அவர் மீண்டும்.

“அதெப்படி வன்னி முதிரைக்கு கூடுதல் கழிவு” என்று கேட்டேன்.

“அனுராதபுரத்தில் யுத்தம் நடக்கவில்லை. அதனால் மரங்களில் காயமோ, உள்ளே செல் துண்டுகளோ இருக்க வாய்ப்பில்லை. எனவே கழிவு குறைவு. வன்னி முதிரைகள் அத்தனையும் காயப்பட்டவை. இது தனியே இந்த முதிரை மரங்களுக்கு மட்டுமல்ல, வன்னியிலுள்ள அத்தனை மரங்களுக்கும்தான்” என்றார் அவர்.

அவர் சொன்னதையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். மனிதர்கள், மரங்கள் மட்டுமல்ல, ஆடு, மாடுகள் ஏன் காட்டில் நிற்கும் பன்றி, மான், மரை, யானை எல்லாவற்றுக்கும் இந்தத் துன்பம்தான் என்று பட்டது.

அங்கே நிற்கும்போது இன்னொரு பாலை மரத்தையும் அரிந்தனர். அந்த மரத்தில் ஒன்பது எறிகணைச் சிதறல்கள். ஒரு துப்பாக்கிச் சன்னம் துழைத்துப் பாதியில் நின்றது.

அவ்வளவு கவனமாக அரிந்தபோதும் எப்படியோ ஒரு சிதறல் வாளின் முனையை உடைத்து விட்டது.

வாளைக் கழற்றி, அலகினை மாற்றிக் கொண்டு தொடர்ந்தும் வேலை செய்தார்கள்.

யுத்த வடுக்களோடு வாழ்வதொன்றும் எளிதானதல்ல.

யுத்தம் முடிந்தாலும் அதனுடைய பாதிப்புகள் பல வழிகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால், இதெல்லாம் வெளியே யாருக்குமே தெரிவதில்லை. பலரிம் இப்பொழுது யுத்தத்தைப் பற்றிய நினைவுகளையே மறந்து விட்டார்கள்.

வெளிப்பார்வையில் யுத்தம் முடிந்து ஒன்பதாண்டுகள் கழிந்து விட்டன என்பது மட்டுமே தெரியும். இப்போது யுத்தகால வடுக்களும் துயரங்களும் மெல்ல மெல்ல நீங்கியிருக்கும் என யாரும் எண்ணக் கூடும்.

ஆனால், அது நீங்காத நிழலைப்போல, ஆறாத தணலைப்போல எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

எப்படி இதையெல்லாம் கடப்பது என்பது பெரியதொரு சவாலே.

நிலத்திலிருக்கும் கண்ணிவெடிகளையும் மிதி வெடிகளையும் கஸ்ரப்பட்டேனும் அகற்றி விடலாம். அதற்காக பல நாடுகள் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இப்படி மரங்களிலும் மண்ணிலும் மனிதர்களிலும் புதைந்திருக்கும் சிதறல்களை எப்படி அகற்றுவது?

இது இப்படியே எத்தனை காலத்துக்குத் தொடரும்?

அந்த அரிவு ஆலையில் உள்ள ஒரு மரத்தில் ஆர்.பி.ஜி. ஷெல் ஒன்று வெடிக்காமலே இறுகிப்போயிருக்கும் படமொன்றை மாட்டியிருந்தார்கள். யாரோ காட்டில் அதைக் கண்டு சொல்லி, வனவளப்பகுதியினர் அந்த மரத்தை வெட்டி அகற்றியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட படம் அது என்றார்கள்.

இந்த மரங்களைப் போலத் தங்கள் உடலில் எறிகணைச் சிதறல்களையும் துப்பாக்கிச் சன்னங்களையும் ஏந்திக் கொண்டு வாழும் மனிதர்களை நானறிவேன்.

ஒரு தடவை சீ.என்.என் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோடு யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கில் ஒரு இளம் பெண்ணைச் சந்தித்தோம். வயது 22தான் அவளுக்கு. இரண்டு கால்களும் ஒரு கண்ணும் யுத்தத்தில் இல்லாமல் போய் விட்டன. போதாக்குறைக்கு முள்ளந்தண்டில் ஒரு துப்பாக்கிக் குண்டு துளையிட்டு, ஏறி அப்படியே நின்று விட்டது. அவளுடைய எக்ஸ்ரேப் பிரதியி்ல் அதைக் காண்பித்தார்கள்.

அதை எடுத்து அகற்ற முடியாது. எடுத்தால் முள்ளந்தண்டு பாதிக்கப்படும். உயிருக்கே ஆபத்து நேரலாம்.

“அப்படியென்றால் அந்தக் குண்டுடன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதானா?” என்று கேட்டேன்.

“வேற என்ன வழி?” என்று திருப்பிக் கேட்டாள் அந்தப் பெண்.

அவளால் நடக்கத்தான் முடியாது. அதற்குக் கால்களில்லை என்றால், நிமிர்ந்து படுக்க முடியாது. நிமிர்ந்திருக்க முடியாது. ஆழமாக மூச்சை எடுத்து விட முடியாது. குலுங்கிச் சிரிக்க முடியாது….

இப்படியே “முடியாது, முடியாது” என்ற தடைகளோடு எத்தனை காலம்தான் வாழ்வது?

இதைப்பற்றி அவளுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது.

யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகி விட்டன என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஆமாம், யுத்தம் முடிந்து விட்டதுதான்… ஆனால்….

(எதிரிரொலியில் வந்த கட்டுரையிலிருந்து)

(Karunakaran Sivarajah)