(மக்கள் ஆசிரியர் சங்கம்)
2016-2017 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சிக்கு ஆசிரியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை கல்வியமைச்சின் ஆசிரியர் நிர்வாகப் பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஆசிரியர் உதவியாளர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சபரகமுவ மாகாண ஆசிரிய உதவியாளர்களில் நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து பின்னர் ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு தெரிவாகியவர்களுக்கு பயிற்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என கல்லூரிகளுக்கு கல்வி அமைச்சின் ஆசிரிய நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளமை தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
ஆசிரிய உதவியாளர்கள் அவர்களது முதல் நியமனத் திகதியிலிருந்து 5 வருடங்களுக்குள்ளாக கட்டாயமாக ஆசிரிய பயிற்சியினை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆசிரிய பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பயிற்சிக்காக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந் நிலையில் சபரகமுவ மாகாணத்தில் ஆசிரிய பற்றாக்குறை காணப்படுவதால், சபரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் ஆசிரிய பயிற்சிக்கு தெரிவாகியுள்ளவர்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றமையானது ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி பெறுவதற்கான உரிமையினை மீறும் நடவடிக்கையாகும்.
சபரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளர் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரிய பயிற்சிக்கு விடுவிப்பது தொடர்பில் ஏற்கனவே அதிபர்களுக்கான கூட்டமொன்றில் ஒரு பாடசாலையில் இரு ஆசிரிய உதவியாளர்கள் இருப்பார்களாயின் அவர்களில் ஒருவரையே ஆசிரிய பயிற்சிக்கு விடுவிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். எனவே, பல ஆசிரிய உதவியாளர்கள் இருக்கும் பாடசாலைகளில் உள்ள ஆசிரிய உதவியாளர்கள் இன்னும் பல வருடங்கள் பயிற்சி இன்றி இருக்க வேண்டிய நிலை ஏற்படுத்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். அது அவர்களை ஆசிரியர் சேவையில் இணையவிடாது செய்வதற்கான முயற்சியாகும். ஆசிரியர்கள் ஆசிரிய உதவியாளர்கள் அனைவரும் பயிற்சியை 5 வருட காலத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி, அதுவரை 6000/= மட்டும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும் சூழலில் ஒரு சிலரை மட்டும் தெரிவு செய்து அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது ஏற்றுக் கொள்ளமுடியாது. அவ்வாறு சிலர் தெரிவு செய்யடுவார்களாயின் அவர்கள் எந்த நியதிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட போகின்றார்கள் என்ற பிரச்சினைக் காணப்படுகிறது. தெரிவுகள் நிச்சயமாக அதிபர்கள்> கல்வி அதிகாரிகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்யப்படும். எனவே இது குழப்பதை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். ஆசிரிய உதவியாளர்கள் பயிற்சிக்கு சிலரை மட்டும் தெரிவு செய்யும் பொது தெரிவு செய்யப்படாதவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுதலில் காலதாமதம் ஏற்படும் அதேவேளை பதவி படிநிலையில் பின்நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காலா காலமாக நிலவுகின்றது. அதற்கு ஆசிரிய வெற்றிடங்களுக்கு போதிய ஆசிரியர்களை உள்வாங்குவதை விடுத்து ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதை தடுப்பது நியாயமற்றது. இது தொடர்பில் எமது சங்கம் உரிய அழுத்தத்தினை கொடுத்து ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி பெறுவதற்கான உரிமையை நிலைநாட்ட போராடும். எனவே ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியோர் 071 60 70 644/ 071 62 70 703 இலக்கங்களை அழைத்து தங்கள் விபரங்களை எமது சங்கத்திற்கு அறியத்தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.