சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக –
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ என்ற அரசியல் அமைப்பொன்றினூடாக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். இதன் மூலம் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் அடைவதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்க முடியும். சமவேளையில், எமது மண்ணின் வளர்ச்சியையும் பண்பாட்டுச் செழுமையையும் முன்னெடுத்துச் செவ்வோம் எனத் தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமது எதிர்கால சமூக, அரசியல் வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர் புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்புத் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது,
“எமது மக்களின் அரசியல் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் அடைவதற்கு புதிய அணுகுமுறைகள் தேவையாக உள்ளன. அத்துடன் சமூக நீதியுடனான சமூக வளர்ச்சியைக் கருதியும் முனைப்போடு செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கேற்ற வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வந்திருக்கிறோம்.
.
இன்றைய சூழலில், பல் கலாச்சாரக்கூறுகளைக் கொண்ட தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை அங்கீகரிப்பதன் ஊடாக, பன்மைச் சமூகங்களை கொண்ட நாடாக இலங்கைத்தீவு அரசியல் அமைப்பின் ஊடாக உறுதி செய்யப்படும் போதே நீடித்த நிலையான சமாதானத்தையும் தேசிய ஒற்றுமையையும் இந்தத் தீவில் உருவாக்க முடியும்.
பெரும்பான்மைச் சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவும் அதனை தக்கவைக்கவும் இனவாதத்தை கருவியாக பயன்படுத்தியமையினாலேயே சிறுபான்மை இன மக்களும் அதே கருவியை கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்
தமிழ்த் தேசிய உருவாக்கம் என்பது ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்த ஒன்றாகும். எனவே, தேசியத்திற்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட அம்மக்கள் அதற்கு நிகரான தீர்வையே எதிர்பார்ப்பர். அவர்களின் கோரிக்கையும் விருப்புகளும் நிராகரிக்கப்படும் போது மேலும் மேலும் நல்லிணக்கத்pற்கான நெருக்கடிகள் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிவிடும்.
சமூக நீதி என்பது தேசிய இனங்களுக்கிடையே பேணப்படவேண்டும் என்பதைப் போன்றே ஒவ்வொரு தேசிய இனங்களுக்குள்ளேயும் அது உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான தேசிய இனங்களாக அவை உருவாகும். பிரதேச வேறுபாடுகளின் காரணமாக எழுகின்ற தேவைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், பல்லினச் சமத்துவமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை கருத்ல்தில் கொண்டு முரன்பட்ட நலவுரிமைகளின் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போதே பலமான தேசிய உருவாக்கம் நிகழும். இதுவே முற்போக்கு தேசியமாக – நவீன தேசியமாக அமையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இயல்பு, பரஸ்பர அங்கீகாரம், ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான கௌரவம் என்பவற்றை அங்கீகரிக்கும் இயல்பு என்பனவே நல்லிணக்கத்திற்கான அத்திவாரங்களாக அமைய முடியும்.
பாராளுமன்றத்திற்கு வெளியே அதற்கு நிகரான தேசிய இனங்களின் சபை ஒன்று உருவாக்கப்பட்டு, தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்களின் மொழி, சமயம், பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் இனவிரோத சட்டவாக்கம் இனவாத எழுத்துக்கள் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்குமான அதிகாரத்தை இந்தத் தேசிய இனங்களின் சபைக்கு அளிக்கப்படுதல் அவசியம். அதை அரசியல் அமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்படுதல் வேண்டும். உச்ச நீதிமன்றில் இனவிவகாரங்களுக்கான பிரிவொன்றும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவொன்றும் அரசியல் அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும்
மேலும் தமிழர் பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் நில ஆக்கிரமிப்பு, தமிழ் மொழியை அரசகரும மொழியாக நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் பாரபட்சம், மலையக மக்களின் காணி, வீடு, நியாயமான சம்பளம் ஆகிய கோரிக்கைகளில் காட்டப்படும் புறக்கணிப்பு, தமிழ் முஸ்லீம் மக்களின் வணக்கஸ்தலங்களின் மீதான இனவாத தாக்குதல்கள், தமிழ் பிரதேசங்களில் இடம்பெறும் இராணுவ மயமாக்கம், காணமல் போனோரின் விவகாரத்தில் காட்டப்படும் பொறுப்பின்மை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் உள்ள தாமதம், கல்வி வேலைவாய்ப்பு, அபிவிருத்திப் பணிகளில் காட்டப்படும் பாரபட்சம் என்பன நீதியான உடனடி நடவடிக்கைகளை வேண்டி நிற்கின்றன.
தமிழ் முஸ்லிம் மலைகய மக்களின் ஒன்றிணைவு பாரிய அரசியல் மாற்றத்தை கடந்த ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றில் ஏற்படுத்தியதை மனதில்கொண்டு சிறபான்மை இனங்களின் பொதுவான பிரச்சினைகளில் ஜக்கியத்தையும் தனித்தனி தேசிய இனங்களின் இடையேயான பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவையும் கட்டியெழுப்பும் பொது ஜக்கிய ஒன்று கட்டியெழுப்பட வேண்டும்
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள முற்போக்காளர்கள் புத்திஜீவிகள் கலைஞர்கள் ஊடாக எடுத்துசெல்வதன் மூலமாக உரிய நியாயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவும் அதனை ஆதரிப்பதற்குமான வெளியொன்றையும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் சமஸ்டி என்பது பிரிந்து செல்வது அல்ல. அது ஒரு சமநிலையான அதிகார பகிர்வு மட்டுமே என்ற உணர்வை ஏற்படுத்துதலும் அவசியமாகிறது.
இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கான ஜனநாயக ரீதியான மக்களின் பங்களிப்பு அவசியமாகிறது. இந்த வகையில்தான் புதிய முறையில் சிந்திப்போரை அரவணைத்து எமது மக்களுக்கான சமூக அரசியற் பணிகளை முன்னெடுப்பதற்கு, “சமத்துவமும் சமூக நீதியுமுடைய நவீன தேசியத்தை நோக்கிய பயணத்திற்காக –
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேவை உணரப்பட்டது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.