இதற்கு சர்வதேசத்தின் ஆதரவு முக்கிய காரணியாக இருந்தது. 1998இல் பௌத்த புனிதத் தலமான தலாதா மாளிகை மீதான தாக்குதலையடுத்து புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் வரை பேச்சுக்கு வரப் புலிகள் மறுத்தனர்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் நிலையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அந்தஸ்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் புலிகள் சுட்டிக்காட்டினர்.
புலிகளின் இந்த வாதங்களின் நியாயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டது. மோதல் தவிர்ப்பு தொடர்பான துறைசார் நிபுணர்கள் புலிகளின் கவலைகளைப் பேச்சுவார்த்தைகளில் ஒரு உன்னதமான தத்துவார்த்த சங்கடமாகச் சுட்டிக்காட்டினர்.
சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் ‘சம அந்தஸ்து’ போன்ற வாசகங்களை மேற்கோள் காட்டி, வெற்றிகரமான பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உறுதியான அரசியல் அடித்தளத்தை அமைப்பதற்கு புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசாங்கம் தடையை நீக்கத் தயாராக இருந்தபோதும் எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. ஆனால், தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியது.
இதற்கிடையில், 10 ஏப்ரல் 2002 அன்று, வன்னிக் காடுகளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்வுக்கான வழியைப் பரிந்துரைத்தார்.
அரசாங்கத்தின் பல அரசியல் எதிரிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில், பிரபாகரன் தன்னாட்சி மற்றும் உள்-சுய நிர்ணய கொள்கைகளின் அடிப்படையில், அரசியல் கட்டமைப்பிற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை தேடுவதற்குத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
புலிகளின் தலைமையின் இந்தப் புதிய நகர்வு, சர்ச்சைக்குரிய திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான கடின பேரம் பேசும் அதன் கடந்தகால மரபுக்கு முரணாக இருந்தது.
புலிகள் தமது அரசியல் நிலைப்பாட்டை நிபந்தனைக்குட்பட்ட பேச்சுவார்த்தையிலிருந்து கொள்கை ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு மாற்றியமைத்தது, ஐ.தே.மு. அரசாங்கத்திற்கு ஒரு புதிய வாழ்வாதாரத்தை வழங்கியது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே ஜே.வி.பி. மற்றும் பொதுஜன முன்னணியின் அரசியல் பிரசாரத்தால் அணிதிரட்டப்பட்ட பெரும்பான்மை சிங்களவர்களின் கருத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்பை அரசாங்கத்துக்கு வழங்கியது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அனைத்து அரசியல் நாடகங்களுக்கும் மத்தியிலும், புலிகளும் ஐ.தே.மு. அரசாங்கமும் பரஸ்பரம் இணக்கமான சமாதான புரிந்துணர்வுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கினர்.
மோதலை சர்ச்சைக்குரிய வழிகளில் வரையறுப்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர். புலிகளின் கண்ணோட்டத்தில், இந்த மோதல் ஒரு தேசியப் பிரச்சினையாகவும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினையாகவும் முன்வைக்கப்பட்டது. ஐ.தே.மு. அரசாங்கத்தின் பார்வையில் அது ஒரு ‘வடக்குக் கிழக்கில் நடைபெறும் போர்’ என்றே பார்க்கப்பட்டது.
இன்னொரு வகையில், இது அக்காலப்பகுதியில் பிரபலமடைந்திருந்த ‘அபிவிருத்தியின் வழி சமாதானம்’ என்ற தாரண்மைவாத அமைதியைக் கட்டியெழுப்பும் சித்தாந்தத்தில் ஆழ வேரூன்றி நின்றது.
இதற்கிடையில் ஐ.தே.மு. மற்றும் புலிகளும் நடைமுறை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமாதானம் பற்றிய தமது பார்வையை முன்வைத்தனர். இதனால், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கினார்கள்.
அரசாங்கத்தின் பார்வையில், இன மோதலை யுத்தம் மற்றும் வன்முறையிலிருந்து விலக்குவதன் மூலம் சாதகமற்ற பாதைகள் வெளிப்படுவதை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதன் மூலம்
வரையறுக்கப்பட்ட சமாதான நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதே முதன்மையான கவனம். எனவே, ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகளின் போது, கவனம் செலுத்துவதற்காக ஆயுத மோதலின் சில விளைவுகளை மட்டுமே அரசாங்கம் தேர்ந்தெடுத்தது.
பல இடைக்கால கட்டங்களில் அதை நிர்வகிப்பதற்கான படிப்படியான அணுகுமுறையாக அதை உருவாக்கலாம் அவர்கள் நம்பினர்.
அரசாங்கத்தின் அணுகுமுறை பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினருக்கு ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினையைத் தீர்க்கவும், அதிகரிக்கும் முன்னேற்றத்தைப் பாதுகாக்கவும் மட்டுமே அனுமதித்தது. இது நிரந்தர தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட பேச்சுவார்த்தை மூலோபாயத்தின் மூலம், முக்கிய மற்றும் புறப் பிரச்சினைகளுக்குக் கூட்டு மாற்றுகளை வடிவமைப்பதில் தொடர்புடைய பிற கட்சிகளும் பங்கேற்கக்கூடிய ஒரு அரசியல் செயல்முறையின் நிறுவனமயமாக்கலுக்கான இடத்தை படிப்படியாகத் திறக்கலாம் என அரசாங்கம் நம்பியது.
அரசாங்கம், பேச்சுவார்த்தை கட்டமைப்பானது சமாதான முன்னெடுப்புகளின் சர்வதேச பாதுகாவலர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரையறுக்கப்பட்ட மற்றும் நடைமுறை கட்டமைப்பிற்குள் மோதலை நிர்வகிப்பதற்கான ஒரு ‘சமாதான ஒப்பந்தத்திற்கு’ வழிவகுக்கும் என எதிர்பார்த்தது.
துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கத்தின் குறிப்பிட்ட பேச்சுவார்த்தை கட்டமைப்பானது, பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்குச் சர்வதேச அரங்காடிகளை மட்டுமே நம்பியிருந்தது. அதற்கு உகந்த நாடு தழுவிய அரசியல் ஆதரவு நிலைமைகளைக் கட்டியெழுப்புவதைப் புறக்கணித்தது.
எவ்வாறாயினும், அக்காலப்பகுதியில், மிகவும் துருவப்படுத்தப்பட்ட சிங்கள அரசியல் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் போட்டி அரசியல் உயரடுக்குகள் ஒருவருக்கொருவர் முயற்சிகளை எதிர்க்கும் அரசியல் செயல்பாட்டில் இறங்கியிருந்ததால், ஒரு பரந்த சமூக ஒருமித்த கருத்தை உருவாக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது.
கொழும்பில் அனைத்து அரசியல் நாடகங்கள் இருந்தபோதிலும், இலங்கையின் 2002 பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபட்ட சர்வதேச அரங்காடிகள் இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கான இடத்தைப் பாதுகாத்தனர்.
இணைத் தலைமை நாடுகளாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் நோர்வே ஆகியன ஏற்படுத்தப்பட்டமையானது பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேசப் பரிமாணத்தை வழங்கியது.
நோர்வே வசதிப்படுத்துனராக இருந்தது. சமாதான முன்னெடுப்புகளிற்கான ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக மேற்குல நாடுகள் தனித்தனியாக தமது பிரதிநிதிகளைக் கொழும்புக்கும் வன்னிக்கும் அனுப்புவதன் மூலம் இச்செயல்முறையின் பாதுகாவலர்களாக அவர்களின் பங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை விடுதலைப் புலிகளுக்குக் கோடு காட்டினர்.
கூடுதலாக, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற சில குறிப்பிடத்தக்க சர்வதேச பலதரப்பு அமைப்புகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் நெருக்கமாக வேலை செய்யத் தொடங்கின.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையும், நாட்டில் ஏற்கெனவே அங்கம் வகிக்கும் அதன் முகவர் அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடவடிக்கையில் நெருக்கமாக ஈடுபட்டிருந்தன.
ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் போர்நிறுத்தத்திற்குப் பிந்தைய சூழலிலிருந்து வெளிப்படும் தேவைகள் மற்றும் கவலைகளுக்கு ஏற்ப, நடந்துகொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளைச் சரி செய்து சமாதான முன்னெடுப்புகளுக்கு அதன் அர்ப்பணிப்பைக் காட்டியது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சர்வதேச அரங்காடிகளின் இணைப்பும் பங்கேற்றும் பயனுள்ளது.
இது இருதரப்புப் பேச்சுக்களுக்கான ‘சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலை’ உருவாக்கியது. மேலும் சமாதான செயல்முறைக்கு சட்டப்பூர்வமான தன்மையைப் பெறுவதற்கும் அத்துடன் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதான ஈவுத்தொகைகளை வழங்குவதற்குத் தேவையான நிதிப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் சர்வதேச ஈடுபாட்டின் அளவு அவசியம் என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது.
இது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மோதலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்புத் திட்டங்களில் சர்வதேச அரங்காடிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும், சர்வதேச அரங்காடிகளின் இந்த பாரிய ஈடுபாடு எதிர்க்கட்சிகளாலும் சில கல்வியியலாளர்களாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இலங்கையின் பேச்சுவார்த்தை செயல்முறையைச் சர்வதேச அரங்காடிகள் கபளீகரம் செய்து விட்டதாகக் கடத்தியதாக அவர்கள் வாதிட்டனர்.
ஜே.வி.பி. சர்வதேச ஈடுபாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியது, இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியிலும், அரசாங்கம் சர்வதேச செயற்பாட்டாளர்களின் தொழில்நுட்ப திறன்கள், அவர்களின் நடுநிலையான தகவல் தொடர்பு சேனல்கள் மற்றும் அவர்களின் பெறுமதியான நிதி வளங்கள் ஆகியவற்றின் மூலம் புலிகளுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு அவர்களைச் சேர்த்துக்கொள்ள உந்துதல் பெற்றது.
புலிகளைப் பேச்சுவார்த்தைச் செயல்பாட்டில் நிலை நிறுத்த ஊக்குவிப்பதற்காக அனைத்து வாய்ப்புகளையும் அணி திரட்டுவதில் இந்த அரங்காடிகளின் மூலோபாய நன்மையையும் இது முன்னறிவித்திருக்கலாம்.
இதற்கிடையில், சமாதான முன்னெடுப்புகளின் வடிவமைப்பு மற்றும் உரிமையில் மேற்குலகின் பங்குகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் உள்ளூர் குரல்களை அரசாங்கம் பொருட்படுத்தாதது, உள்ளூர் அறிவு, உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் உள்ளூர் அதிகார அரசியலைப் புறக்கணிக்கும் அவர்களின் முயற்சிகள், உள்ளூர் வட்டாரங்களிலிருந்து அரசாங்கத்தைத் தனிமைப்படுத்தியது.
அரசாங்கமும் பிரதமர் விக்ரமசிங்க உள்ளூர் அரசியல் உண்மைகளை அறியாதவர்களாகவும் உணர்வற்றவர்களாகவும் இருந்தனர். இந்த நடத்தையின் இந்த இறுதி முடிவு என்னவென்றால், முழு அரசியல் பேச்சுவார்த்தை செயல்முறையும் உள்நாட்டு அரசியல் இயங்கியலிலிருந்து பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டது.