19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், மத அடையாளம் பிற அடையாளங்களை மேவி, முன்னிலைக்கு வரத் தொடங்கியது. சிங்கள அடையாளம் என்பது, அடிப்படையில் மொழி ரீதியானது. ஆனால், இவ்வடையாளம் மெதுமெதுவாக சிங்கள – பௌத்த அடையாளமாக மாறத் தொடங்கியது. அதற்கு கிறிஸ்தவத்தின் செல்வாக்கும் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின.
இலங்கையில் கொலனியாதிக்கம், மெதுமெதுவாக பல்வேறு சமூக மாற்றங்களுக்குப் பங்களித்தது. குறிப்பாக, மதம் சார்ந்த மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை.
கிறிஸ்தவ மதத்தின் வருகையும் மிசனரிகளின் வருகையும் மதமாற்றத்தையும் கிறிஸ்தவ நிறுவனமயமாக்கலையும் சாத்தியமாக்கின. அதேவேளை, சில விதிவிலக்குகளையும் நோக்குதல் வேண்டும்.
குறிப்பாக, சிங்கள சமூகத்தில் இருக்கின்ற ‘கராவே’, ‘சலாகம’ எனும் இரண்டு சாதியினரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது நிறுவப்பட்டுள்ளது. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தாரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ‘சலாகம’ சமூகத்தினர், சிங்களத்தை மொழியாகவும் பௌத்தத்தை மதமாகவும் ஏற்றனர். இவ்வாறு, ஏனைய பல சிங்கள, தமிழ் சமூகங்களிலும் பல அயல் குடியமர்வுகள், கொலனியாதிக்கத்தின் விளைவால் நிகழ்ந்துள்ளன; இவை பேசப்படுவதில்லை.
கண்டி இராச்சியம் கைப்பற்றப்படும்வரை, கொலனியாதிக்கம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் மிகவும் அழுத்தத்துடன் செயற்பட்டது. இது, இடைநிலைச் சாதிகளை உருவாக்கப் பங்களித்தது பற்றி இத்தொடரின் முன் அத்தியாயங்களில் பார்த்தோம்.
கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய பின்னர், அதை இலகுவாக ஆட்சிசெய்வதற்கு பௌத்த பீடங்களின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால், பௌத்த மதத்துக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, மதத்தை மையமாகக் கொண்டு, சமூக முரண்பாடுகள் தோற்றம் பெறத் தொடங்கின. இதை அவதானித்த பிரித்தானிய கொலனி நிர்வாகம், மதம் என்ற விடயத்தில் நெகிழ்வுப் போக்குடன் செயற்பட முடிவு செய்தது. இது, பௌத்தம், சைவம் என்பவற்றின் மறுமலர்ச்சிக்கு வாய்ப்பானது.
அதேவேளை, இந்த மறுமலர்ச்சியை முன்னெடுத்தவர்களிடம் இருந்த கொலனிய எதிர்ப்பு, கொலனியாதிக்கத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றுவது என்ற திசைவழியில் வளரவில்லை என்பதையும் பிரித்தானிய கொலனிய நிர்வாகம் நன்கறிந்திருந்தது.
பிரித்தானிய கொலனியாதிக்க காலத்தில், தமிழ்நாட்டில் தமிழ் அடையாளம், தனித்துவம் பற்றிய அக்கறைக்கும் எழுச்சிக்கும் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு போப் போன்ற பல ஐரோப்பியர்கள் முக்கிய பங்காற்றினார்கள், அவ்வகைப்பட்டே, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அமெரிக்கரான கென்றி ஒல்க்கொட்டும் ரஷ்யரான ஹெலீனா பிளவாட்ஸ்கி அம்மையாரும் பிரதான பாத்திரத்தை வகித்தார்கள்.
கிறிஸ்தவ மிசனரிகளின் செயற்பாடுகளில், கல்விக் கூடங்கள் அமைக்கப்பட்டமை சைவ, பௌத்த அடையாள அரசியலுக்கு மிகப்பெரிய சவாலானது. குறிப்பாக, சாதி ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் சைவ, பௌத்த மதங்களுக்கு முக்கிய பங்கிருந்தது.
குறிப்பாக, 1824இல் உடுவிலில் ஆரம்பிக்கப்பட்ட விடுதியுடன் கூடிய பெண்கள் பாடசாலை, சமூகத்தில் நிலவிவந்த பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான முக்கியமான எதிர்வினையாக இருந்தது. உடுவில் மகளிர் கல்லூரி, ஆசியாவின் முதலாவது விடுதியுடன் கூடிய பெண்கள் பாடசாலை என்ற பெருமையைப் பெற்றது.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரிகள் மிகவும் முக்கியமான சமூகப் பணியைச் செய்தார்கள். இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, யாழ். குடாநாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மிஷனரிகள், அங்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், தீவின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான முதல் அமெரிக்க மிஷனரி, வணக்கத்துக்குரிய சாமுவேல் நியூவெல், 1813இல் மொரிஷியஸ் செல்லும் வழியில் தற்செயலாக காலியை வந்தடைந்தார்.
கிறிஸ்தவ மிஷனரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சாதிய அமைப்பை ‘இறைவழியில் இல்லை’ என்ற அடிப்படையில் நிராகரித்தனர். அச்சு இயந்திரம், புகைப்படக் கருவி, கட்டடக்கலை, தையல் இயந்திரம் ஆகிய தொழிற்புரட்சி இயந்திரங்கள் மிசனரிகளின் துணையால் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் அறிமுகமாகின.
மிஷனரிகள், தமிழ்ப் பண்பாட்டுக்கும் சமூகத்துக்கும் வெவ்வேறு வழிகளில் பங்களித்தனர். வணக்கத்துக்குரிய மிரோன் வின்ஸ்லோ தமிழ்-ஆங்கில அகராதியை முதன்முதல் விரிவான முறையில் வெளியிட்டார். மானிப்பாய் மிஷன் மருத்துவமனையின் ஸ்தாபகரான டொக்டர் சாமுவேல் கிரீன், சுமார் 4,500 பக்கங்கள் கொண்ட ஆங்கில மருத்துவத்தின் முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.
கிறிஸ்தவ மிசனரிகள் மதத்தைப் பரப்பும் முக்கிய கருவியாக பாடசாலைளைப் பயன்படுத்தினார்கள். சாதிய ரீதியாக ஓரளவு நெகிழ்வுத் தன்மையோடு நடந்துகொண்டார்கள். இதனால் கல்வி ரீதியான முற்போக்கான சமூகத்துக்கான வாய்ப்புகள் உருவாகின.
இந்நிலையிலேயே, இதற்கு எதிர்வினையாக கல்வி நிலையங்களை உருவாக்குவதே, எமது மதத்தைக் காப்பதற்கான வழி என சைவ, பௌத்த மதநம்பிக்கையாளர்கள் நினைத்தார்கள்.
முன்னோடியாக, 1849இல் ஆறுமுக நாவலர் ஒரு சைவப் பாடசாலையை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். ஆனால், இதில் சாதிரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவத்துக்கு எதிரான பௌத்த மறுமலர்ச்சியின் செயற்பாடுகள் 1860களில் பௌத்த கல்வி நிலையங்களை உருவாக்குவதுடன் தொடங்கின. இதில், இன்று பல்கலைக்கழகங்களாக விரிவடைந்துள்ள வித்யோதய மற்றும் வித்தியாலங்கார பிரிவேனாக்கள் முதன்மையானவை.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்த அரபி பாஷா ஆவர். இவர், இலங்கையில் இருந்த 18 ஆண்டுகளில் (1883-1901) முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு முதன்மையான பங்களிப்பை வழங்கினார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைவ, பௌத்த, இஸ்லாமிய மறுமலர்ச்சியை இலங்கையில் இருந்த பிரித்தானிய நிர்வாகம் சகித்துக் கொண்டது. ஏனெனில், இவை எதுவும் கொலனியாதிக்கத்தை அகற்றும் நோக்குடையதாக இருக்கவில்லை.
மாறாக, தங்கள் மதச் சுதந்திரத்தையும் தத்தம் சமூகத்தில் தங்கள் உயர்நிலையை உறுதிப்படுத்துவதையும் மட்டுமே நோக்காகக் கொண்டிருந்தன. பெளத்த மறுமலர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் டேவிட் ஹேவாவித்தான என்ற இயற்பெயரைக் கொண்டவரும் கிறிஸ்தவ மிசனரிகளில் கல்வி கற்றவருமான அநகாரிக தர்மபால. இவர், கென்றி ஒல்க்கொட், பிளவாட்ஸ்கி அம்மையார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இறையியல் சங்கத்தில் உறுப்பினராகி, அவர்களால் வழிநடத்தப்பட்டார். காலப்போக்கில் அவர்களுடன் முரண்பட்டு, 1891இல் மகாபோதி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். 1893இல் சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்திய சிக்காகோ மாநாட்டில், அநகாரிக தர்மபால ‘கீழைத்தேய பௌத்தம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
1893இல் சிக்காகோ மாநாட்டில், அநகாரிக தர்மபால கலந்துகொண்டிருந்தபோது… (இடது பக்கத்தில் வௌ்ளை உடையுடன் அநகாரிக அமர்ந்திருக்கின்றார்)
இலங்கையில் பௌத்தம் தொடர்பில் நன்கறியப்பட்ட ஒரு செயற்பாட்டாளராக அநகாரிக தர்மபால அறியப்பட்டபோதும், அவரால் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. சாதிய ரீதியாகப் பிளவுற்றிருந்த சிங்கள-பௌத்த சமூகம் கண்டிச் சிங்களவர் – கரையோரச் சிங்களவர் என்றும் பிரிவுற்றிருந்தனர்.
கண்டி-கரையோர வேறுபாடு, சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றி இருந்தது. குறிப்பாக கரையோரம் போத்துகேயரின் காலம் தொட்டே கொலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. 1815இலே கண்டி கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டது.
இந்த வேறுபாட்டின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு ஓர் உதாரணத்தைத் தருவது பொருத்தம். இலங்கையின் முதன்முறையாக சமஷ்டி என்ற எண்ணக்கருவை முன்மொழிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, 1929இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “கண்டி, கரையோரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சிங்களவர்களுக்குத் தனித்தனியான அரசும், தமிழர்களுக்கு தனியான அரசும் சமஷ்டி அடிப்படையில் பகிரப்பட வேண்டும்” என்று கோரினார்.
சிங்கள சமூகத்தின் உள்முரண்பாடுகள் வெளிப்பட்ட இன்னொரு நிகழ்வு, 1895இல் அநகாரிக தர்மபாலவால் உருவாக்கப்பட்ட மதுவிலக்கு இயக்கமாகும். மக்களிடையே ஏற்பட்ட மதுவிலக்கு இயக்கக் கிளர்ச்சிகள், கொலனிய ஆட்சிக்கு எதிரானவை ஆகவும் சமூக நீதிக்கானவை ஆகவும் அமையவில்லை.
மாறாக அவை, சிங்கள – பௌத்த கண்ணோட்டத்தில் மதத்தை மையப்படுத்திய ஓர் அரசியலை முன்னெடுத்தன. இவை இறுதியில் அநகாரிக தர்மபால முன்னெடுத்த சிங்கள – பௌத்த சிந்தனையை மட்டுமன்றி தர்மபாலவையும் நிராகரித்தது.
இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. முதலாவது, சிங்கள பேரினவாதத்தை அநகாரிக தர்மபாலவின் மரபு என்று அடையாளப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இரண்டாவது, சிங்கள – பௌத்தம் என்ற இனவாத அரசியல் போக்கின் தொடக்கப்புள்ளியாகவும் அடிப்படையாகவும் அநகாரிக தர்மபால இருக்கிறார் என்பது உறுதியானது.
அவரது, ‘பௌத்த துவேசம்’ கிறிஸ்தவர்களுடன் நிற்கவில்லை. அதேயளவு துவேசத்தை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகவும் கக்கினார். இதன் முதல் துணை விளைவு கொச்சிக்கடை கலவரம் ஆகும்.