சமூக அருவருப்பும் கரோனாவும்.

தான் சார்ந்த நாடு, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தும், பிறரை இழிவுசெய்தும் வரும் பல பதிவுகளைச் சமூக வலைதளங்களில் அடிக்கடி காணலாம். இன்னாரின் உணவுப் பழக்கம்தான் நோய் பரவக் காரணம், எங்கள் கலாச்சாரத்தைப் பின்பற்றியிருந்தால் நோய் பரவியிருக்காது என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்கள் எங்கும் விரவிக் கிடக்கின்றன.

முதலில் “சீன தேசத்தவனா.. தள்ளி நில்லு” என ஆரம்பித்த சமூக அருவருப்பு, இன்று “நீ காஞ்சிபுரமா? பக்கத்துல வராதே” எனும் அளவுக்கு வந்து நிற்கிறது.

உலகின் வலிமைமிக்க நபராகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கே நோய்த் தாக்குதல் இருப்பதாகத் தகவல் பரவியதை அடுத்து, அவர் நலமுடன் இருப்பதாகவும் தேவைப்பட்டால் கரோனா தொற்றுச்சோதனை செய்யப்படும் என்றும் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட வேண்டி வந்துள்ளது. ஈரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கரோனாவால் இறந்துள்ளனர். பிரான்ஸில் கலாச்சார அமைச்சருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் அதிபர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

கரோனாவின் உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, நோய் தொற்றியவர்கள் மீதும், அவர்களைச் சார்ந்தோர் மீதும் இழிவையும் வெறுப்பையும் அருவருப்பையும் காட்டுவது நாகரிகச் சமூகத்துக்கு அழகல்ல. ஐநா சபையின் மனித உரிமை அலுவலகம் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளின் அடிப்படை உரிமைகளை மதிக்கவும் அவர்களைக் கனிவுடன் நடத்தவும் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இப்படி சமூக அருவருப்பு வரக்கூடாது என்றுதான் உலக சுகாதார நிறுவனம், நோய்களுக்குப் பெயர் வைக்கும்போது சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. நோய்களின் பெயரில் குறிப்பிட்ட நிலப்பரப்போ, இனமோ, தனிநபர்களின் பெயரோ, விலங்கு, பறவைகளின் பெயரோ, தொழிலைக் குறிக்கும் சொற்களோ வரக் கூடாது என. முன்பு இப்படிப் பெயர் வைக்கப்பட்ட நோய்களில் அந்த இடம் சார்ந்த மனிதர்கள் மீது கடும் வெறுப்பு உமிழப்பட்டது. எபோலா என்பதுகூட அந்நோய் கண்டறியப்பட்ட பகுதியின் நதியைக் குறிக்கும் சொல்.

உலகின் அனைத்து நிலப் பரப்பிலிருந்தும் நோய்கள் தோன்றியுள்ளன. அனைத்துக் கலாச்சாரங்களிலும் நோய்கள் பரவியுள்ளன. இன்று வேறு தேசத்தில் இருக்கும் நோய் நாளை நம் தேசத்தில் வரலாம். இன்று அடுத்த தெருவில் இருக்கும் நோய் நாளை நம் தெருவுக்கு வரலாம். இன்று அடுத்த வீட்டில் இருக்கும் நோய் நாளை நம் வீட்டுக்கு வரலாம். இப்படி வர வாய்ப்பில்லை எனும் நிலை இருக்கும்போதுகூட நோயுற்றவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதான் மனித குணம்.

நோயைத் தடுக்கத் தனிமைப்படுத்துதல் வேறு. நோயை முன்வைத்து வெறுப்பை உமிழ்வது வேறு. இவ்வுலகம் அனைத்து மனிதர்களுக்குமானது. சமூக அருவருப்பைத் தவிர்ப்பது நோய் எதிர்ப்பில் முக்கியமான விஷயமாகும்.

இந்து தமிழ் திசை: 12/03/2020