வட்டுக் கோட்டை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பத்தில் இவர் பிறந்தார். பெண்கள் உயர் கல்வி கற்பது அவசியமில்லை என்ற சிந்தனை மேலோங்கியிருந்த அக்காலத்தில் இவர் தனது கல்வியைத் தொடர்வ தற்குப் பக்கபலமாக இருந்தவர் இவரது சிறிய தந்தையார் வ.நாக லிங்கம். பெண்களின் கல்வி மேம் பாட்டுக்காகத் தீவிரமாக உழைத்த வ.நாகலிங்கத்தின் முயற்சியால் வேதவல்லியும் அக்கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் உயர் கல்வியை மேற்கொண்டு இருவரும் ஆசிரியத் தொழில் புரிந்தனர்.
வேதவல்லி தனது ஆசிரியத் தொழிலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்தார். இவரது சேவை பாடசாலையுடன் மட்டுப்பட்டிருக்கவில்லை. கிராமத்தில் இளம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். சமூகப் பிரச்சினைகளிலும் ஈடுபாடு கொண்டார். இவரது சமூக சேவைச் செயற்பாடு நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த கல்விமானான எஸ்.கே. கந்தையாவின் கவனத்தை ஈர்த்தது. இருவரும் மனமொத்துத் திருமணபந்தத்தில் இணைந்தனர். இருவரும் ஆசிரியர்கள்.
எஸ்.கே. கந்தையா கி.தி (ழிonனீon) பரீட்சையில் விசேட சித்தி பெற்றார். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான வேதவல்லி கணவனிடம் ஆங்கிலம் கற்று ஆங்கில மொழி மூலம் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடை ந்தார். இவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் போது கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபராகப் பதவி வகித்தார்.
எஸ்.கே. கந்தையா ஒரு கம்யூனிஸ்ட். மாக்சிய சித்தாந்ததைக் கற்றுத் தேர்ந்தவர். கணவனின் வழியில் வேதவல்லியும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினார். சமூக சேவகியான வேதவல்லி கந்தையா அரசியல் செயற்பாட்டாளராகவும் ஆகினார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்ட அதேவேளை தொழிற்சங்கம், கூட்டுறவு, மாதர் முன்னேற்றம் எனப் பல தளங்களில் இவரது பணி விரிந்தது. இவர் இறந்த நேரத்தில் இரங்கலுரை நிகழ்த்தியவர்கள் இவரது சேவைச் சிறப்பை விதந்து கூறினர். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
அத்தியார் இந்துக் கல்லூரியில் தனது ஆசிரிய சேவையைத் தொடங்கி கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் தனது அதிபர் சேவையைப் பூர்த்தி செய்து புகழ்பெற்றார். தனது சேவைக் காலத்தில் தமிழ், ஆங்கிலம், இசை நடன நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பல விருதுகளைப் பெற்று மேற்படி கல்லூரிகள் உயர் ஸ்தானங்களை பெற நற்பணிபுரிந்தார். இவரது சேவையை பெற்றோரும் கல்வி அதிகாரிகளும் பாராட்டினர்.
த. வேலுப்பிள்ளை
முன்னாள் அதிபர்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி தலைமை ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் அவருடன் சேவையாற்றிய உதவி ஆசிரியை ஒருவரின் கணவன் மாநகர சபை ஊழியராக சேவையாற்றினார். அவர் இளைப்பாறும் போது அவருக்கு ஓய்வூதியம் கிடையாது. அன்றைய ஓய்வூதிய திட்டத்தின் படி கணவன் இறந்தால் மனைவிக்கும் வயது குறைந்த பிள்ளைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். அரச ஊழியரான மனைவி இறந்தால் கணவனுக்கு ஓய்வூதியம் கிடையாது. இந்த விடயம் திருமதி வேதவல்லி கந்தையாவை உறுத்தியது. இக்குறைபாட்டை சீர்செய்யும் வகை வலி – கிழக்கு தமிழாசிரியர் சங்க நிர்வாக சபையில் அவர் கொண்டு வந்த பிரேரணை ஏற்கப்பட்டு வருடாந்த பொதுக் கூட்டத்திலும் நிறைவேறிய பின் மட்டக்களப்பு ஆசிரிய காலாசாலையில் நடந்த அகில இலங்கை தமிழாசிரியர் சங்க வருடாந்த கூட்டத்திலும் அவரே பிரேரித்தார். அது அங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் ஆங்கில, சிங்கள, தமிழ் ஆசிரியர்களின் முக்கூட்டு சபையிலும் ஏற்கப்பட்டு அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அரச அங்கீகாரம் பெற்று நடைமுறையில் வந்தது. இந்தவகையில் நன்மை பெறுவோரெல்லாம் திருமதி வேதவல்லி கந்தையாவுக்கு கடமைப்பாடுடையார்.
ஆ.இ.குமாராசாமி
(ஆசிரியர்)
திருமதி வேதவல்லி கந்தையாவின் மறைவு யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல எமது இலங்கை முழுவதிலும் உள்ள கூட்டுறவாளர்களுக்கும் பேரிழப்பாகும். எமது சம்மேளனத்துடன் யாழ்ப்பாண மாவட்ட சிக்கன கடனுதவு சமாசத்தின் அங்கத்துவ தொடர்பினை ஏற்படுத்தி கூட்டுறவாளர் என்ற ரீதியில் ஆற்றிய சேவைகளையும் இன்று நினைவு கூர்கின்றோம். மேலும் எமது சம்மேளனத்தில் உப- தலைவியாக இருந்தும் ஆற்றிய அளப்பாரிய சேவைகளும் என்றும் நிலைத்திருக்கும்.
(றஞ்சிற் ஹெட்டயாராச்சி- பொது செயலாளர் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சம்மேளனம்.
அரசியல் சேவை அமரர் தோழியர் வேதவல்லி கந்தையா தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகச் செயல்பட்டு எதிர்பார்த்தளவு இலட்சியம் நிறைவேறாமல் காலமானது எம்மை மிகவும் துக்கத்திலாழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக கோட்பாட்டிற்கமைய பல மாதர்களை ஒன்று திரட்டி முற்போக்கு மாதர் சங்கத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்து மாதர் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
இவர் கணவர் விட்டுச் சென்ற மார்க்ஸிச கோட்பாடு நடைமுறைகளை எள்ளனவும் பிசகாது மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஸலிச தத்துவத்திற்கேற்ப இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைச் சேர்ந்தவர்களை அணி திரட்டினார்.
க. நவரத்தினம்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மாவட்ட குழு
வேதவல்லி கந்தையா அவர்களின் மறைவு கேட்டு முற்போக்கு எண்ணம் கொண்ட சகல மக்களும் கவலைப் பட்டார்கள். ஏன் நாம் எல்லோரும் கவலைப்பட்டோம் என்ற கேள்விக்குக் கிடைக்கும் ஒரே பதில் இவர் மனி தாபிமானத்தில் நம்பிக்கை கொண்டு ஏற்றத் தாழ்வற்ற ஒரு சோசலிஸ சமூகத்தைப் படைக்க முன்னின்று செய ல்பட்டார். என்பதால் தான். சோசலிஸ சமூக அமைப்பிற்கு முதல்படியாக “கூட்டுறவே நாட்டுயர்வு” என்ற கொள்கையுடன் கூட்டுறவுப் பணியில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
வெறும் இன அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று உணர்ந்து உலக முற்போக்கு மாதர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நந்தா டீ சில்வா
இலங்கை முற்போக்கு மாதர் அணி தலைவர்