இலங்கை முஸ்லிம் சமூகம் பெரியளவில் தன் சமூக அகத்திற்குள் உள்ளார்ந்து பல்வேறு சீர்திருத்தப் பணிகளை மிக வெளிப்படையாக , தைரியமாக , அறிவார்ந்த தளத்தில் செய்ய வேண்டிய முக்கிய தருணமிது. அதே போல் சக இன,மத, சமூகங்களுடன் உரையாடலை தொடங்குவதுடன் சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேலை செய்ய வேண்டி உள்ளது. இவ்விரு பணிகளும் ஒரே நேரத்தில் செய்யப்பட வேண்டியவை.
இதில் முதல் நிபந்தனை, தம் பக்கமான தவறுகளுக்கு, தம் சமூகம் சார்ந்து பொறுப்பெடுப்பதுடன்,பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் தார்மீக மன்னிப்பை கேட்பதாகும்.நடந்த கொலைகளையும் அனர்த்தங்களையும் ஆதரிக்கவில்லை என்பதுடன் , மனித குல அழிவை இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொண்டாட இதுவரை இலங்கை முஸ்லிம்கள் முற்படவில்லை என்பது மிக நம்பிக்கை தரும் சூழலாகும்.
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அவர் அப்படி சொல்கிறார் -இப்படி சொல்கிறார்கள் என்பதற்கெல்லாம் உடனடி எதிர்வினையாற்றும் நேரம் இல்லை இது.இது ஆக்கபூர்வமான செயல்பாட்டிற்கான நேரம். நற்செயற்பாடுகளே பதிலாக அமைய வேண்டிய நேரமிது.
ஆனால் சமூக வலைத்தளங்களையும் பெருமளவு ஊடகங்களையும் பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்களை அழித்து விடும் வாய்ப்பு வந்திருக்கிறது என களிப்பு கொள்வது போல் தெரிகின்றன. இன்றைய நிலை முஸ்லிம்களை அதிகளவில் பாதிக்கக் கூடிய அரசியல், மத,இராணுவ வியூக முட்டுச் சந்திக்குள் தள்ளியுள்ளது என்பது ஒரு பகுதி அளவு உண்மைதான்,ஆனால் இந்த நிலை முழு அளவில் இலங்கை வாழ் அனைத்து இன,மத, சமூகங்களையும் ஒட்டு மொத்தமாக படுகுழிக்குள் தள்ளப்போகிறது என்பதை உணராதவர்களாக இருப்பது ஒரு துரதிஷ்டமே.