தான் தலைவராக இருந்த காலத்தில் கால ஓட்டத்திற்கு ஏற்ப தமிழர்களுக்காக தேசிய அரசியலை நடத்திச் சென்றார்.
தனக்குப் பிறகு தமிழரசுக் கட்சி மரபு விழுமியங்களுக்கேற்ப பொருத்தமானதொரு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தமிழர் அரசியல் அரங்கில் அறிமுகப்படுத்தியவராக சம்பந்தன் இருக்கிறார். அதே நேரத்தில், 2009 மே யுடன் யுத்தம் மௌனித்தபின் சர்வதேச உறவுகள், பூகோள அரசியல் யதார்த்தங்களைக் கருத்திலெடுத்து தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்குத் தயார் என பிரகடனப்படுத்திக் கொண்டார். அதற்காகவே தொடர்ந்தும் செயற்பட்டும்வந்தார்.
அதே நேரம், புலிகளின் காலத்தில் மோசமான தமிழ்- முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும்வகையில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக நசீர் அகமட்டை நியமிப்பதற்கு ஆதரவு கொடுத்தார். அதனால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சி முஸ்லிம்களுக்கு தேவையற்ற வகையில் ஆதரவு வழங்குவதாக விமர்சனத்தினையும் சம்பாதித்துக் கொண்டது.
இருந்தாலும், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் அதிகரித்தது என்றே கூறவேண்டும். இருப்பினும் கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்கள் தங்கள் நிலையில் இருந்து இறங்கவில்லை என்பது வேறுகதை.
91 வயதான இராஜவரோதயம் சம்பந்தன் 5 பெப்ரவரி 1933இல் திருமலையில் பிறந்தார். சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். இரா.சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி,மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று,இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
197ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினரானார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜுலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7இல் இழந்தார்
அதனையடுத்து 1989 பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈ.என்.டி.எல்.எப., ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்த கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறாமை காரணமாக அவருக்கு வாய்பின்றிப்போயிருந்தது.
அதன் பின்னர், 2001ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்இ ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட வேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. அத் தேர்தலில் சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக மீண்டும் 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப்பெற்று தெரிவானார். 1989,ல் தமிழர் விடுதலைக் கூட்டணி 6,048 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 2001 பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 40,110 வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.
2004இல், இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 47,735 வாக்குகள் பெற்றார். 2010 பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 24,488 வாக்குகளைப் பெற்றார்.2015 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 33,834 வாக்குகள் பெற்றார்.
இறுதியாக 2020இல், இலங்கைத் தமிழரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 21,422 வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார்.
அதன் காரணமாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் அதன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வி.ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்இ தந்தை செல்வாவால் 1974களில் கிடப்பில் போடப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இறுதிவரை அவரே செயற்பட்டார்.
2001, 2004, 2010,2015, 2020 பாராளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2020 தேர்தலில் சம்பந்தன் போட்டியிடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிநேரத்தில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2015இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐ.ம.சு.கூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன.
ஐ.தே.க ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், அவ் இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. இதனால் அத்தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியானது.
அதன் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்ட அவ் அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளித்து அரசியலமைப்பு திருத்தத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
இருப்பினும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருக்க, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.
ஆதனால் ஏற்பட்ட ஆட்சிக்கு குழப்பத்தின்போது தமிழரசுக்கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று அவருக்கு மீண்டும் ஆட்சியை பெற்றுக் கொடுத்திருந்தது.
நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் பின்னும் அமையும் ஓவ்வொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கெதிரான முன்னெடுப்புகளை எடுக்கின்ற வேளைகளிலும் அதனை எதிர்கொள்கின்ற கட்சியாக யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்பட்டது. அதனை வழிநடத்தியவர் சம்பந்தன் ஆவார்.
அதே போன்று ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தீர்வு இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான வேளைகளில் வெளியிடப்படும் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போனதும், நிராசையானதும் வரலாறுதான் அதனால் பல்வேறு விமர்சனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவரான சம்பந்தனும் எதிர் கொண்டிருக்கின்றனர்.
இறுதிநேரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக்கட்சியின் ஒற்றுமைக்கும் எதனையும் செய்யமுடியாதவராக ஆகிப்போனார் என்றே சொல்லமுடியும்.
இப்போது, தமிழ்த் தேசிய அரசியலில் பெருந்தலைவர்களான தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தனும் சேர்ந்துகொண்டார். எவ்வாறானாலும், அசாத்தியமான காலங்களிலும் தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்திச் சென்றவர் என்றவகையில் அவர் விட்டுச் செல்லும் இடைவெளி நிரப்பல் சாத்தியப்படவேண்டும். தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் அதனால் நிறைவேறவும் வேண்டும்.