‘சரவணபவன் அண்ணாச்சி’ துயரத்தில் முடிந்ததோர் பெருந்திணை காதல்!

ராஜகோபாலுக்கு முன்னரே இரண்டு மனைவிகள் இருந்த போதும் அவர் ஜீவ ஜோதியை மணக்க விரும்பியது ஜோதிடத்தின் மீது கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையின் பால் மட்டுமே. ஜீவஜோதியை மணந்தால் ராஜகோபால் மேலும் பணம் படைத்தவராகவும், மேலும் புகழ் மிக்கவராகவும் மாறுவார் என ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் கூற அதை அப்படியே நம்பிய ராஜகோபால் தனது உணவகத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவரின் மகளான ஜீவஜோதியின் மேல் காதல்வயப்பட்டார். இதைக் காதல் என்பதா? பேராசை என்பதா? பெருந்திணைக் காமம் என்பதா? என்று புரியத்தான் இல்லை. ராஜகோபாலின் நினைப்பு இப்படித் தறிகெட்டு ஓட, மறுபுறம் பள்ளி மாணவியான ஜீவஜோதியோ, தான் டியூஷன் சென்ற இடத்தில் சந்தித்த ப்ரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட்டார். அவர்களது காதல் திருமணத்திலும் முடிந்தது. விஷயம் இப்படி என்று தெரிந்ததும் ஜீவஜோதியின் திருமணத்தை முறிக்க ராஜகோபால் பெரிதும் முயன்றிருக்கிறார்… முயற்சிகள் எதுவும் கதைக்காகாத பட்சத்தில் ஜீவஜோதியின் கணவரான ப்ரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வது என்று முடிவெடுத்தார் ராஜகோபால்.

முடிவெடுத்ததோடு 26.10.2001 அன்று ப்ரின்ஸ் சாந்தகுமாரை ஆள் வைத்துக் கடத்தவும் செய்தார். கணவரைக் காணோம் என்று தவித்த ஜீவஜோதி வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சரவணபவன் உணவக உரிமையாளரான ராஜகோபால், தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தனக்கு திருமணமான பிறகும் கூட அந்த வற்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், கணவர் காணாமல் போன விஷயத்தில் தனக்கு ராஜகோபால் மீது தான் அழுத்தமான சந்தேகம் இருப்பதாகவும் ஜீவஜோதி தனது புகாரில் குறிப்பிடுகிறார். ஜீவஜோதி புகார் அளித்த 5 நாட்களுக்குப் பின் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் கொடைக்கானல் மலைச்சாலையில் ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடல் சடலமாக மீட்கப்படுகிறது. இதையடுத்து தான் காதல் கணவரின் கொலைக்கு நீதி கேட்டு ராஜகோபாலுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை வலுவாகக் கையிலெடுத்தார் ஜீவஜோதி.

ஜீவஜோதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ராஜகோபால் தரப்பு, இது தொழில் போட்டி காரணமாக யாரோ தூண்டி விடுகிற சதி, ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ என்றது. ஆயினும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ராஜகோபால், அவரது உணவக மேலாளர் டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது ராஜகோபாலின் உணவக மேலாளர் டேனியல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ராஜகோபாலுக்கான தண்டனை உறுதியானது. விசாரணையின் முடிவில் 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களுகு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்பும் ஓயவில்லை ராஜகோபால் தரப்பு. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு நாகை மாவட்டம், வேதாரண்யம், தேத்தாகுடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்கிய ஜீவஜோதியை அங்கிருந்தும் ராஜகோபால் தரப்பு கடத்த முயற்சி செய்தது. காரணம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு தங்கள் தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்லி ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்று. ஆனால், ஜீவஜோதி இதற்கு உடன்பட மறுக்கவே கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த முயற்சி அப்போது கிராம மக்களால் தடுக்கப்பட்டுவிட்டாலும் இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கத் தவறவில்லை ஜீவஜோதி. அவரளித்த புகாரின் கீழ் கடத்தல், கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ் ராஜகோபால் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ராஜகோபாலினால் தன் வாழ்வில் நிகழ்ந்து விட்ட துயரப்பக்கங்களில் இருந்து விடுபட நினைத்த ஜீவஜோதி தனது நீண்டநாள் நண்பரான தண்டாயுதபாணி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். வேதாரண்யம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான, கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கின் விசாரணைக்காக அச்சமயம் 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஜீவஜோதி நீதிமன்றப்படி ஏறி சாட்சி சொன்னார். முதலில் காதல் கணவரின் கொலைக்காக நீதி கேட்கும் மனநிலையில் இருந்த ஜீவஜோதி இப்போது நிறையவே மாறிப் போயிருந்தார். இரண்டாம் திருமணமும், வயிற்றில் இருந்த சிசுவும் ஜீவஜோதியின் மனதை மாற்றி விட்டனவோ என்னவோ? ‘ அண்ணாச்சி தன்னைக் கடத்தியதாகவோ, மிரட்டியதாகவோ நாகபட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் எந்த ஒரு காவல்நிலையத்திலும் தான் புகார் அளிக்கவே இல்லை’ என ஜீவஜோதி அந்தர் பல்டி அடித்தார். அதைத் தொடர்ந்து ஜீவஜோதியை அண்ணாச்சி தரப்பு சமரசம் செய்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதை ஜீவஜோதி மறுத்தார். ‘வாழ்க்கையில் நேர்ந்த துயரங்கள் அனைத்துமே தலைவிதிப்படி நடந்து விட்டதாகவும், தன்னைத் துரத்தும் பிரச்னைகளில் இருந்து ஒரேயடியாக ஒதுங்கி விடத் தான் முடிவெடுத்து விட்டதாகவும் ஜீவஜோதி அப்போது
பேட்டியளித்தார்.

இப்படி ஒருவழியாக ஜீவஜோதி கடத்தல் வழக்கில் இருந்து விடுபட முடிந்த ராஜகோபால் தரப்பால் ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் இருந்து மட்டும் விடுபட முடியாமல் போனதன் காரணம் விதி வலியது என்பதால்.

ப்ரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி கே மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைத்தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ‘தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் அவர் கோரினார். ஆனால், இவ்வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததோடு ஜூலை 7 ஆம் தேதிக்குள் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆணையை ஏற்று சரணடைந்த ராஜகோபால் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரவணபவன் ராஜகோபாலின் கதை இப்படி முடிந்தது. ராஜகோபாலின் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் பேசுவதென்றால் இந்த ஒரு கதையைத்தான் நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அவருக்கு உழைப்பால் உயர்ந்தவர் என்றொரு மாற்று முகமும் உண்டு. அதைப்பற்றியும் அவர் இறந்து விட்ட இந்த நாளில் நாம் நிச்சயம் நினைவுகூரத்தான் வேண்டும்.

ஒரு மனிதன் எத்தனை வல்லவனாக இருந்த போதும், திறமைசாலியாக, கடும் உழைப்பாளியாக இருந்தபோதும் அவனுக்கு கண்மூடித்தனமான மூட நம்பிக்கை, குறிப்பாக ஜோதிடத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கை எங்கே கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது என்று பாருங்கள்?!

இந்த மனிதருக்கு மூடநம்பிக்கை மட்டும் இல்லாமலிருந்திருந்தால் இன்றைக்கு விளம்பரங்களில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்களே தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் சிலர் அவர்களைப் போல தனது சங்கிலித் தொடர் உணவகத்துக்கு தானே மாடலாக நின்று கொண்டாடப்படக்கூடிய அளவுக்கு திறமை படைத்தவராக இருந்திருப்பார்.

ஏனெனில், தான் தொடங்கிய உணவகம், அதன் ஊழியர்கள் என்று வரும் போது அவருக்கென்று சில தயாள குணங்களும், அவற்றைப் பின்பற்றுவதில் உறுதித்தன்மையும் இருந்திருக்கின்றன. அந்தவகையில் பார்க்கும் போது ராஜகோபாலை திசை மாறிப்போன ஆட்டுக்குட்டியாகத் தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது.

மேய்ப்பர் இல்லா ஆட்டுக்குட்டி தவறுக்கு மேல் தவறிழைத்து இன்று உயிரிழந்திருப்பது காலத்தின் கோலம்.

அண்ணாச்சியின் சில தயாளகுணங்களைப் பற்றியும் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி கிராமத்தில் மிக மிக ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தார் ராஜகோபால். வறுமை காரணமாக 7 ஆம் வகுப்பிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினார். அப்போதெல்லாம் இரவில் கட்டாந்தரையில் படுத்துறங்கியவர் தான். அங்கிருக்கும் போது தான் தேநீர் போடக் கற்றுக் கொண்டதாக ராஜகோபால் கூறியதுண்டு.

தொடர்ந்து ஒரு மளிகைக் கடையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கே கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தன் அப்பா மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாகத் தனியாக ஒரு மளிகைக்கடையைத் துவக்கினார்.

முதல்முயற்சி என்பதால் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கிறது. அத்தனையையும் தனது தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொண்டா ராஜகோபால்.

மளிகைக்கடையில் 1979 ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது விற்பனையாளர்கள் ஒருவருடன் நடந்த உரையாடலின் விளைவாக ராஜகோபால் கண்டடைந்ததுதான் … இன்று உலகம் முழுக்க 33 கிளைகளுடன், வெளிநாடுகளில் 45 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கும் சரவணபவன் எனும் ருசிகரமான ஆலவிருட்சம்.

இந்த விருட்சத்துக்கான விதை முளைவிட்டுக் கிளைத்தெழுந்தது ராஜகோபாலின் தன்னம்பிக்கை உரத்தின் மேல் தான்.

இதை மிக உறுதியாக வளர்த்தெடுக்க ராஜகோபால் தனக்கென விதித்துக் கொண்ட சில உறுதிப்பாடுகள் பாராட்டுதலுக்குரியவை.

வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த அந்த காலகட்டத்தில் எந்தக் காலத்திலும் உணவின் தரத்திலும், வாடிக்கையாளர்களின் நல்ல அனுபவத்திலும் எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்பதில் முழுக்கவனம் செலுத்தியவர் ராஜகோபால்.

மலிவு விலைப்பொருட்களை வாங்கலாம், ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் அளிக்கலாம். லாபத்தை அதிகரிக்கலாம் என்று ஆலோசனை சொன்ன அதிகாரியை சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பியவர் ராஜகோபால்.

தரமானதும், சுவையானதுமான உணவை வழங்குவதென்பது ஆரம்பகாலத்தில் நஷ்டத்தையே அளித்து வந்த போதும் உணவகம் மீதான மதிப்பு கூடக்கூட அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறத் தொடங்கின.

நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமன்றி ஊழியர்களின் பணிச்சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதும் சரவணபவனின் வெற்றிக்கு முதல் காரணமாகக் கருதப்படுகிறது.

சாப்பாட்டுத்தட்டின் மேல் வாழை இலையை வைத்துப் பரிமாறும் முறையை அறிமுகப்படுத்தியது ராஜகோபால் அண்ணாச்சி தான். காரணம் தட்டைக் கழுவும் ஊழியரின் பணிச்சுமையைக் குறைப்பதே!

சரவணபவன் ஊழியர்களின் இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லையாம். காரணம் அடுத்த நாள் காலையில் வேலையில் சோர்வு ஏற்படும் என்பதால் இரவுக்காட்சி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

ஊழியர்களுக்கு வேலையில் உறுதித் தன்மையோடு இருப்பிடத்தையும் வழங்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார் ராஜகோபால். சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் கூட உண்டு. ஆண்டுதோறும் சொந்த ஊர் சென்று திரும்ப சிறப்பு விடுமுறைத்திட்டம். யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் கவனித்துக் கொள்ள இரண்டு பேர். குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வது என்று தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான அனுகூலங்களைச் செய்து தந்தவர் ராஜகோபால்.

ஒரு சிறந்த நிர்வாகியாக இயங்கிய அவரால் அந்த திறமையை சொந்த வாழ்வில் மேற்கொள்ள முடியாமல் போனது தான் அவரது தோல்விக்கு முதல் காரணமாகி விட்டது.

சரவணபவன் ராஜகோபாலை மக்கள் கடுமையான உழைப்பால் உயர்ந்த உணவக முதலாளியாக மட்டுமே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ராஜகோபாலை பின்பற்ற விரும்புபவர்களுக்கு அது தான் உகந்தது. மற்றபடி ராஜகோபாலின் இருட்டுப் பக்கங்கள் அவரையே காவு கொண்டு இன்று அவரது வாழ்வையே முடித்து வைத்து விட்டதில் மீண்டும் உறுதியாக நம்பத் தோன்றுகிறது ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ முன்பெல்லாம் பிறவிகள் தோறும் தொடர்ந்து வருமெனக் கருதப்பட்ட ஊழ்வினையானது இப்போது அதே பிறவியில் வட்டியும் முதலுமாகத் திருப்பி அளித்து விடுவது தான் அந்தோ பரிதாபம்!

பெருந்திணை: தமிழ் இலக்கியத்தில் பொருந்தாக் காதல் அல்லது காமத்தை பெருந்திணை என்று குறிப்பிடுவார்கள். தொல்காப்பிய இலக்கணப்படி இது அகத்திணை வகையில் வருகிறது.