(கே. சஞ்சயன்)
உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.
நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் மிகக் குறைந்தளவிலான வேட்பாளர்களே களத்தில் இருப்பார்கள். அதில், எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும், வாக்குகள் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், வேட்பாளர்கள் பெரும்பாலும், வாக்காளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கமாட்டார்கள்.
அறிமுகமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதை விட, கட்சிக்காக கொள்கைக்காக வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமே வாக்காளர்களுக்கு அதிகம் இருக்கும்.
ஏனென்றால், பெரும்பாலான வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆளுமை, வாக்காளர்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துவது குறைவு. அதனால் கட்சி, சின்னம் என்பன கூடுதல் தாக்கம் செலுத்தும்.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் அவ்வாறு இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்குள் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். இதனால் ஒரே பிரதேசத்துக்குள் பல வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தவராகவோ, நெருக்கமானவர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் நேரில் கண்டால் தலையாட்டி விட்டுச் செல்கின்றவர்களாகவோ இருப்பார்கள். வேட்பாளர்களின் தனிப்பட்ட நட்பு, உறவு, ஆளுமை என்பன உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தக் கூடியது.
எனவே, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை, முன்னைய நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் முழுமையாக ஒப்பீடு செய்து, இதை ஒரு பெரும் வீழ்ச்சியாகப் பதிவு செய்ய முடியாது.
அவ்வாறு ஒப்பீடு செய்கின்றபோது, நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்கள் நடந்த சூழலையும் இப்போதைய சூழலையும் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தும், இரண்டு கட்சிகள்தான் மோதின. ஒன்று கூட்டமைப்பு; இரண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
அதனால், தமிழ்த் தேசிய அபிலாஷைகளைக் கொண்ட வாக்காளர்கள், கொள்கை சார்ந்து வாக்களிக்கும் வாக்காளர்கள், இரண்டு தெரிவுகளில் ஒன்றையே தேர்ந்தெடுத்தனர்.
மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது. அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம், தமிழ்த் தேசிய அபிலாஷைகளை முன்வைத்த ஒரே தரப்பாகப் போட்டியிட்டது.
மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இணைந்தே போட்டியிட்டிருந்தன. அது கூட்டமைப்பின் வாக்கு வங்கியை இன்னும் பலப்படுத்தியது.
மாகாணசபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலை, வடக்கில் தீவிரமாக வீசிக்கொண்டிருந்ததால், அதுவும் கூட்டமைப்புக்குக் கைகொடுத்தது.
இவையெல்லாம், மாகாணசபைத் தேர்தலில் அதிகபட்ச வாக்களிப்பையும் கூட்டமைப்பின் அசுர பலத்தையும் வெளிப்படுத்தக் காரணமாகின.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்து மோதினர்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஏனைய கட்சிகளைப் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் தமக்குள் தான் அதிகம் மோதிக் கொண்டார்கள். தமக்குள் ஒருவர் மீது, ஒருவர் சேற்றை வாரிக் கொண்டனர். இதனால், தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாடு கொண்ட வாக்காளர்களின் வாக்குகள், மூன்றாகப் பிரிந்து போனது.
உள்ளக மோதல்களால் வெறுப்படைந்த, கொள்கை சார்ந்து வாக்களிக்கும் வாக்காளர்கள் பலர், ஒதுங்கிக் கொள்ளவும் நேரிட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் கணிசமாகக் குறைந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் உள்ளக முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கட்சிகளும் ஏனைய சிறுகட்சிகளும் வாக்காளர்களின் கவனத்தைப் பெற்று, வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
மூன்றாகப் பிரிந்த தமிழ்த் தேசிய வாக்குகள், மற்றும் ஏற்கெனவே முன்னைய தேர்தல்களில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன, இம்முறை தனியாக இணைந்து போட்டியிட்டமை என்பன, கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்திருக்கிறது.
அதைவிட, மாகாணசபைத் தேர்தலில் ஒதுங்கியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இம்முறை பலமாகக் களமிறங்கியிருந்தது. அது கூட்டமைப்புக்கான கடுமையான சவாலையும் கொடுத்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தாய்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ் பழமையான கட்சி. அதற்கென்று ஒரு வாக்குப் பலமும் இருந்து வந்தது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஒப்பீட்டளவில் நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களை விட, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்திருக்கிறது. அதிகளவு வேட்பாளர்கள், அறிமுகமான ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தவர்கள், அதற்கு எதிராக வாக்களிப்பதை விட, வாக்களிக்காமல் இருந்து விடலாம் என்ற சிந்தனை, தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான அடிபிடிகள் என்பனவற்றினால் ஏற்பட்ட வெறுப்பு என்பன யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது.
ஏனைய இடங்களை விட, யாழ்ப்பாணத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் அதிகளவில் சரிந்திருக்கின்றன. எனவே, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்ததை, அதற்கான ஒரு முக்கியமான காரணியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனினும், கூட்டமைப்புக்கு வாக்குகள் குறைந்திருப்பதை, பெரும் வீழ்ச்சியாகவோ, தோல்வியாகவோ அடையாளப்படுத்த முடியாது. ஏனென்றால், இன்னமும் யாழ்ப்பாணத்தில் முதலிடத்திலும் ஏனைய இடங்களில் பெரும் பலத்துடனும் அதுவே இருக்கிறது.
அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரிய வெற்றியைப் பெற்று விட்டது போன்ற தோற்றப்பாடும் காட்டப்படுகிறது. ஆனால், கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான வாக்கு வீதத்தில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றிருக்கின்ற வாக்குகள், ஆசனங்கள், அதற்கு ஓர் ஊக்கத்தையும் உள்ளூர் மட்டத்தில் இருந்து, ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்குகின்ற சூழலையும் பலமான அணியாக மேல் எழுவதற்கான ஒரு வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது.
அதேவேளை, கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனாலும், மொத்தமாகக் கிட்டத்தட்ட மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகளுடன் தமிழர் பிரதேசத்தின் முன்னணிக் கட்சியாக நிலைத்து நிற்கிறது.
அதேவேளை, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடையவில்லை. 2011ஆம் ஆண்டை விட, அதிக ஆசனங்களையும் அதிக வாக்குகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வாதங்களும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.
உதாரணமாக, 2011 உள்ளூராட்சித் தேர்தலில், சுமார் 255,078 வாக்குகளைப்பெற்று, 274 ஆசனங்களுடன் 32 சபைகளைக் கைப்பற்றிய கூட்டமைப்பு, இம்முறை, 339,675 வாக்குகளைப் பெற்றுள்ளது. 407 உறுப்பினர்களுடன் 34 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி செலுத்தக் கூடிய வாய்ப்பு, கூட்டமைப்புக்கு இரண்டே இரண்டு சபைகளில் தான் கிடைத்திருக்கிறது. ஏனைய 32 சபைகளிலும், பிறகட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலையே உள்ளது.
கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அது தோல்வியல்ல. இது தோல்வியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது.
கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்பது எந்தளவுக்கு சரியான கருத்தோ, அதுபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னேறியிருக்கிறது என்று கூறுவதே பொருத்தமானது.
எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் கூட்டமைப்புக்குத் தம்மை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இன்னும் முன்னேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்துக்கு இந்தத் தேர்தல் சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், அதைச் சாய்க்க முடியுமா அல்லது சரிய விடாமல் காப்பாற்ற முடியுமா என்பதை அடுத்து வரும் தேர்தல்கள்தான் உறுதி செய்யும்.