ஈராக்கிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமா என, ஈராக்கிய குர்திஷ்தானில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில், “ஆம்” என்ற பிரிவு வெற்றிபெற்றுள்ளது என, குர்திஷ்தானின் தலைவர் மசூட் பர்ஸானி தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்த கட்டமான பதற்றம், அப்பகுதியில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என, ஈராக்கும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட தோழமை நாடுகளும், தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, இதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இவ்வாக்கெடுப்பை, அரசமைப்புக்கு முரணானது என, ஈராக் கருதுகிறது. குறிப்பாக, குர்திஷ் பிராந்தியத்தில் மாத்திமரமல்லாது, வட ஈராக்கில், குர்திஷ்களும் ஈராக் அரசாங்கமும் உரிமை கோரும், சர்ச்சைக்குரிய இடங்களிலும் இவ்வாக்கெடுப்பு இடம்பெற்றமை, ஈராக்கைக் கோபப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது கருத்துத் தெரிவித்துள்ள பர்ஸானி, “ஆம்” என்ற பிரிவு வெற்றிபெற்றுள்ளது எனவும், குர்திஷ் பிராந்திய அரசாங்கத்தை அச்சுறுத்துவதிலும் தடை விதிப்பதிலும் பார்க்க, அதனுடன் காத்திரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு கோரினார்.
“தடைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படலாம். ஆனால், நாங்கள் வெற்றிபெறுவோம்” என்று தெரிவித்த அவர், இவ்வாக்கெடுப்பில் வாக்களித்த மில்லியன்கணக்கான மக்களின் ஆணையை மதிக்குமமாறு, உலக வல்லரசுகளைக் கோருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, அறிக்கையொன்றை வெளியிட்ட குர்திஷ்தான் பிராந்தியத் தொலைக்காட்சி, 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், “ஆம்” என வாக்களித்தனர் என்று குறிப்பிட்டது.
பிராந்தியத்தில் பதற்றம்
ஈராக் அரசாங்கத்தையும் அதன் தோழமை நாடுகளையும் எதிர்த்துக் கொண்டு நடத்தப்பட்ட இவ்வாக்கெடுப்பு, சட்டரீதியாக வலுவற்றது என்ற போதிலும், ஈராக் அரசாங்கம் மீது அழுத்தத்தை வழங்கும். அதைவிட, பிராந்தியத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
ஈராக்கின் அயல் நாடான ஈரானில், இவ்வாக்கெடுப்பைக் கொண்டாடி, அங்குள்ள குர்திஷ்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஈரான், குர்திஷ்தான் பிராந்தியத்துக்கு மேலாக விமானங்களைப் பறந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், அந்நாட்டு மக்களே, வாக்கெடுப்புக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மறுபக்கமாக, குர்திஷ் ஆயுதக்குழுக்களுக்கு எதிராகத் தனது நாட்டில் போராடிவரும் துருக்கி, இவ்வாக்கெடுப்பை, தனக்கான அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஏற்கெனவே, கடுமையான எச்சரிக்கையை, அந்நாடு விதித்திருந்தது. எனவே, அடுத்ததாக எதைச் செய்யுமென்பது, கேள்வியாக உள்ளது.