(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமைப்பும் விலக்கல்ல.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் பட்டய உறுப்புரிமையிலிருந்து கடந்த வாரம் தென்னாபிரிக்கா விலகத் தீர்மானித்தமை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னாபிரிக்காவின் இம்முடிவு இந்நீதிமன்றத்தின் மீதான ஆபிரிக்கக் கண்டத்தின் வெளிப்பாடாகக் கருதக்கூடியது. சில வாரங்களுக்கு முன் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற அங்கத்துவத்திலிருந்து புரூண்டி வெளியேறியது. அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா இம்முடிவை எடுத்துள்ளதுடன் கென்யாவும் வெளியேறும் முடிவை நோக்கி நகர்வதாக அறிவித்துள்ளது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவான காலந்தொட்டுப் பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக இந்நீதிமன்றத்தால் குறிவைக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்கத் தலைவர்களுக்கான ஒரு பொறியாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பயன்படுகிறதா என்ற கேள்வியை இது நீண்டகாலமாக எழுப்பியது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வரலாறு சிறிது நீளமானது. சர்வதேசப் பிரச்சினைகளுக்குச் சட்டரீதியான தீர்வைப் பெறுவது சவாலாகவே இருந்தது. உலகில் அனைவருக்கும் பொதுவான சட்டங்களோ நீதிமன்றங்களோ இல்லாதபோது, முதலாம் உலக யுத்தம் நடைபெற்றது. யுத்தத்தின் முடிவில் பரிஸ் அமைதி மாநாட்டில் ‘சர்வதேசத் தீர்ப்பாயத்தின்’ தேவை குறித்து முதலில் பேசப்பட்டது. அவ்வாறானதொரு நீதிமன்றத்தை உருவாக்கும் தேவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அது இயலவில்லை.
இரண்டாம் உலகப் போரின் நிறைவில் அப்போரில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிக்க உருவான நியூரெம்பேர்க், டோக்கியோத் தீர்ப்பாயங்கள் போரில் தோற்ற ஜேர்மனிய, ஜப்பானிய இராணுவ அதிகாரிகளையும் அரசாங்க அலுவலர்களையும் தண்டித்தன. இது, வென்றவர்கள் தோற்றவர்களைத் தண்டிக்க உருவான தீர்ப்பாயமாக இருந்ததேயன்றி இரண்டாம் உலகப் போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச தீர்ப்பாயமாக அமையவில்லை. குறிப்பாகப், போர்க் குற்றங்களுக்காக ஜேர்மனியும் ஜப்பானும் தண்டிக்கப்பட்டபோதும், ஷிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசி அப்பாவிப் பொதுமக்களைக் கூண்டோடு அழித்த அமெரிக்காவின் யுத்த வெறி என்றும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.
இவ்வாறு, சர்வதேச நீதியை வென்றவர்களின் நீதி, நிலைநிறுத்தப்பட்ட பின்னர் அனைவரும் ஏற்கக்கூடிய சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்குவது அசாத்தியமானது. குறிப்பாக, அத்தகைய அமைப்பை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுதலில் சர்வதேச சட்ட ஆணைக்குழு முன்வைத்த வரைபுகள் அங்கிகாரம் பெறவில்லை. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த கெடுபிடிப் போர் சர்வதேச நீதிமன்ற உருவாக்கத்துக்கு வாய்ப்பாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் உடைவும் அமெரிக்கத் தலைமையிலான ஒரு மைய உலக அரசியலின் தோற்றமும் ‘வல்லோர்களின் நீதி’யை இன்னொரு வகையில் நிலைநாட்டச் சர்வதேசச் சட்டத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்கின.
இவ் வழியில் முன்னாள் யூகொஸ்லாவியாவுக்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் 1993 இல் உருவானது. அடுத்து ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையைத் தொடர்ந்து ருவாண்டாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் 1994 இல் உருவானது. இவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பயனை ஒருபுறம் வலியுறுத்தினாலும் மறுபுறம் இந்நீதிமன்றங்களின் அரசியல் தன்மையும் பக்கச்சார்பும் நீதியின் பக்கம் சாராமையைக் கேள்விக்குட்படுத்தின.
யூகொஸ்லாவியாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம், முன்னாள் ஜனாதிபதி ஸ்லொபொடான் மிலோஷெவிச் மீதான குற்றங்களை மட்டும் விசாரிக்கும் ஒரு தீர்ப்பாயமாகவே செயற்பட்டது. நடுநிலைத்தன்மையின்றி எதிர்த்தரப்பு இழைத்த பாரிய குற்றங்களைக் கண்டும் காணாமல் விட்டது. இவ்வாறான தீர்ப்பாயங்கள் ‘வெற்றியாளர்களின் நீதி’யை மீள எடுத்தியம்பின.
1998இல் ரோம் மாநாட்டில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான ரோம் பட்டயம் உருவானது. அதற்கான வாக்கெடுப்பில் 120 நாடுகள் ஆதரவாகவும் அமெரிக்கா, இஸ் ரேல், சீனா, ஈராக், லிபியா, யெமன், கட்டார் ஆகிய ஏழு நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 21 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்ட போது, இனக்கொலை, மனிதகுலத்துக்கு எதிராக குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகிய மூன்று பாரிய குற்றங்களை விசாரிப்பதற்கானதாக இருந்தது. பின்னர் ஆக்கிரமிப்புக் குற்றங்களும் விசாரிக்கக்கூடிய குற்றங்களாகின.
இதுவரை 124 நாடுகள் ரோம் பட்டயத்தில் ஒப்பமிட்டுள்ளன. உலகின் முதன்மையான சர்வதேச சக்திகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இஸ் ரேல் உட்பட்ட ஏனைய நாடுகள் அதை ஏற்கவில்லை. ஏற்காத நாடுகளுக்குச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விதிகள் செல்லுபடியாகாது. உலகளாவிய நியாயாதிக்க அமைப்பாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய போதும், உறுப்புரிமை பெறாத நாடுகளிலுள்ள குற்றவாளிகளை நீதிமன்றில் ஒப்படைக்கக் கோர முடியாது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதுவரை 10 நாடுகள் மீது குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்தது. அவற்றில் ஜோர்ஜியா தவிர்ந்த அனைத்தும் ஆபிரிக்க நாடுகளே. நீதிமன்றம் குற்றவாளிகளாகத் தீர்த்த அனைவரும் ஆபிரிக்கர்களாவர். அவர்களுக்குள் முதன்மையானவர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர். அவருக்குப் பிடியாணை பிறப்பித்தபோது அது பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளானது. அதை வெளிப்பட எதிர்த்த ஆபிரிக்க ஒன்றியம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆபிரிக்கத் தலைவர்களைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாகவும் குற்றம் சாட்டியது.
பிடியாணையைத் தொடர்ந்து ஓமர் அல் பஷீர் பல்வேறு நாடுகளுக்குப் போனார். ரோம் பட்டயத்தில் ஒப்பமிட்ட நாடுகள் பிடியாணைக்குட்பட்ட எவரும் தம் நாட்டுக்குள் வந்தால் கைது செய்து நீதிமன்றத்திடம் கையளிக்கக் கடமைப்பட்டவை. இந்நிலையில் சென்ற ஆண்டு ஓமர் அல் பஷீரின் தென்னாபிரிக்கப் பயணம் சர்ச்சைக்குள்ளானது. பிராந்திய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற அல் பஷீரைத் தென்னாபிரிக்கா கைது செய்து ஒப்படைக்கும் என நீதிமன்றம் எதிர்பார்த்தது. ஆனால் மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுக்குச் சிறப்பு விடுபாட்டுரிமை உள்ளது எனத் தெரிவித்த தென்னாபிரிக்கா, அவரைக் கைது செய்ய மறுத்தது. ரோம் பட்டயத்தைத் தோற்றுவித்த நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவின் இம்முடிவைப் பல மேற்குலக நாடுகள் கண்டித்தன. அதற்குப் பதிலளித்த தென்னாபிரிக்கா நியாயமற்ற முறையில் ஆபிரிக்கத் தலைவர்களைக் குறிவைப்பதை ஏற்க முடியாது என்றது. இச்சிக்கலின் அடுத்த கட்டமே இப்போது அரங்கேறியுள்ளது.
நீண்ட காலமாக பிரெஞ்சுக் கொலனியாக இருந்த ஐவரிகோஸ்ட் எனும் மேற்கு ஆபிரிக்க நாடு விடுதலையின் பின்னும் பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது. உலகின் முதன்மையான கொக்கோ உற்பத்தி செய்யும் நாடான ஐவரிகோஸ்ட்டில் 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவான வரலாற்றுப் பேராசிரியர் லொரான் (க்)பாக்போ நாட்டை பிரான்ஸின் நிழலில் இருந்து அகற்றியதை பிரான்ஸ் விரும்பவில்லை. 2011 ஆம் ஆண்டு பிரான்ஸ் இராணுவம், ஐவரி கோஸ்ட்டில் நேரடியாகத் தலையிட்டு (க்)பாக்போவைப் பதவியிலிருந்து அகற்றியதோடல்லாமல் பிரெஞ்சுப் படைகள் அவரைக் கைதுசெய்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றிடம் ஒப்படைத்தன. நீதிமன்றிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்ட முதலாவது அரசாங்கமொன்றின் தலைவர் லொரான் (க்)பாக்போ ஆவார். அவரது வழக்கு இன்னமும் விசாரணையிலுள்ளது. நீதிமன்றின் அரசியல் சார்பை எடுத்துக் காட்ட இவ்வழக்குப் போதுமானது.
பிரான்ஸ் சர்வதேசச் சட்டங்களை மீறி, ஒரு சுதந்திர நாட்டிற்குள் படைகளை அனுப்பி, மக்களால் தெரிவுசெய்த ஜனாதிபதியை பதவிநீக்கியதோடல்லாமல் அவரைக் கைது செய்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றிடம் ஒப்படைத்தமை சகல சர்வதேசச் சட்டங்களுக்கும் முரணானது. இவ்வாறு சட்டவிரோதமாகக் கைதான ஒருவரைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பது பிரான்ஸின் செயலை அங்கிகரிப்பதாகும். எனவே சர்வதேசச் சட்டம் தொடர்பான நியாயமான வினாக்களை இது எழுப்புகிறது.
கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மனிதகுலத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தார் எனக் குற்றம்சாட்டிச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கெதிராகப் பிடிவிறாந்து பிறப்பித்தது. அதைச் சவாலாக ஏற்ற கென்யாட்டா நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் தோன்றினார். குற்றம் நிறுவப்படாததால் அவர் விடுதலை பெற்றார். அதைத் தொடர்ந்து கருத்துரைத்த கென்யாட்டா “ஏகாதிபத்தியவாதிகளின் சரியும் செல்வாக்கின் இன்னொரு கருவியாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. எங்களை அவமானப்படுத்தித் தோற்கடிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
பிடிவிறாந்திலிருந்து விடுக்கப்பட்ட இன்னொருவர் கொல்லப்பட்ட முன்னாள் லிபிய ஜனாதிபதி முவம்மர் கடாபி. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல ஆபிரிக்கத் தலைவர்களை இவ்வாறு குற்றவாளிகளாக்கியுள்ளது. ஆனால், அதே காலப்பகுதியில் உலகின் வலிய நாடுகள் பெருவாரியான குற்றங்களை வெளிப்படையாகச் செய்துள்ளன. அவை பற்றிச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் வாய் திறக்கவில்லை.
அண்மையில் வெளியான ‘சில்கொட் அறிக்கை’ ஈராக் யுத்தத்தில் பிரித்தானியாவின் பங்கை ஆராய்ந்து ஏலவே பலர் அறிந்த விடயங்களை உத்தியோகபூர்வமாகக் கூறியிருக்கிறது. அவ்வறிக்கை குறைபாடுடையபோதும் அது கூறும் விடயங்கள் பிரித்தானியா, ஈராக்கில் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்தமையை நிறுவுகிறது. இவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் கீழ் உள்ள போதும், நீதிமன்றம் பிரித்தானியாவைக் குற்றவாளியாகக் காணவில்லை; அது பார்வைக் கோளாற்றின் விளைவல்ல.
இதேபோல பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் 2008 டிசெம்பரில் இஸ் ரேல் மேற்கொண்ட தாக்குதலை விசாரிக்கத் தென்னாபிரிக்க நீதிபதி ரிச்சட் கோல்ட்ஸ்டன் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபை நியமித்த குழுவின் அறிக்கை, இஸ் ரேல் இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும் உட்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என ஆதாரங்களுடன் நிறுவியது. கோல்ட்ஸ்டன் அறிக்கை உலகளாவ ‘நீதி’யின் பெறுமதியைக் கேள்விக்குட்படுத்திய முக்கிய ஆவணமாகும். இன்றுவரை அவ்வறிக்கை குற்றவாளியாகக் கண்ட எவருக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அனுப்பவில்லை.
கடந்த இரு தசாப்தங்களில் அமெரிக்காவும் நேட்டோவும் எத்தனையோ நாடுகள் மீது போர்களை வலிந்து தொடங்கி நடாத்தியுள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என அப்பட்டியல் மிக நீண்டது. ஆனால் இவற்றுள் எதுவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் கண்களுக்குத் புலனாகவில்லை. அவர்கள் செய்யும் குற்றம் எதுவுமே குற்றமாகக் கருதப்படுவதில்லை. ‘மனிதாபிமானத் தலையீடு’, ‘காக்கும் கடப்பாடு’ என்ற சொல்லாடல்கள் அவற்றைக் காக்கின்றன. எனவே ‘மனிதாபிமான யுத்தத்தின்’ பெயரால் இலட்சக்கணக்கானோர் கொல்லப்படினும் மனிதாபிமானத்தின் பெயரால் அனைத்தும் மறக்கவும் மன்னிக்கவும் படுகின்றன.
ஆபிரிக்க நாடுகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் மீது முன்வைக்கும் விமர்சனம் கவனமாக நோக்கப்பட வேண்டியது. குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்புரிமையில் இருந்து தென்னாபிரிக்கா விலக எடுத்த முடிவு ஒரு வலிய செய்தியைச் சொல்கிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஓரு போரைத் தொடங்கி 15 ஆண்டுகள் முடிந்து விட்டன. லிபியாவில் முவம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவ்விரு நாடுகளும் இன்றும் அமைதியற்ற யுத்தப் பூமிகளாக, எதிர்காலமொன்றை நினைத்தும் பார்க்கமுடியாத நிலையில் அம்மக்களை வைத்துள்ளன. இதற்குப் பொறுப்புச் சொல்வது யார்? இவர்களுக்கு நீதி வழங்குவது யார்? உலகம் மெதுமெதுவாக மாறிவருகிறது. நீதி என்பது யாருடைய நீதி? யாருக்கான நீதி என்ற கேள்விகள் இப்போதும் மேலெழுகின்றன. அதிகாரத்துக்கும் அகங்காரத்துக்கும் மாற்றாகப் புதிய கூட்டணிகள் அமைகின்றன. நடப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் பழக்கம் உலக அரசியலில் குறைந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் போல தன்னிச்சையான தலையீடொன்றை இன்று மேற்கொள்ள இயலாது என ஆதிக்க சக்திகள் உணர்கின்றன; ஆதிக்க சக்திகளின் எடுபிடிகளும் உணர்கின்றன. உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் ஒலிக்கும் நியாயத்திற்கான குரல்கள் அதிகார மையங்களை உலுப்புகின்றன.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனது காலம்கடந்து போகும் நாட்களுக்குள் மெதுமெதுவாகக் கால்பதிக்கிறது. காலவோட்டத்தில் தன்னை இறந்த காலத்துக்குரியதாய் மாற்றக்கூடிய செயல்களினூடு அது காலப்பொருத்தத்தில் இருந்து பெயர்கிறது.