2 செப்டம்பர் 2016, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக பெருந்தொகையான உழைப்பாளிகள் கலந்து கொண்ட மிகப் பெரிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பு செய்தனர். உலக சனத்தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நாடென்பதால், பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் இதுவாக இருக்க வேண்டும்.
நரேந்திர மோடியின் அரசு, வெளிநாட்டு முதலீடுகளை கவரும் நோக்கில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் தமது வேலை பறிபோகும் என்று இந்தியத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். சம்பள உயர்வு தொடர்பாக, அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தது. அதற்குப் பிறகு தான், தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்த அறிவிப்பு விடுத்தன. கடைசி நேரத்தில், வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்வதற்காக, அரசு மிகக் குறைந்த தொகை சம்பளம் கூட்டுவதற்கு முன்வந்தது. ஆனால், தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒபாமாவின் நாய்க்குட்டி சுகவீனமுற்றாலும் தலைப்புச் செய்தியாக வெளியிடும் சர்வதேச ஊடகம் எதுவும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிவிக்கவில்லை. உலகில் சிறந்த ஜனநாயக நாடான அமெரிக்காவில், சொல்லி வைத்தால் போல் எல்லா ஊடகங்களும் மௌனம் சாதித்தன. CNN இன் சர்வதேச ஒளிபரப்பில் மட்டும் சில நிமிடங்கள் காட்டினார்கள். அமெரிக்காவில் யாரும் அதைப் பார்ப்பதில்லை. அதனால், இந்தியாவில் நடந்த வேலைநிறுத்தம் தெரியுமா? என்று யாரும் ஓர் அமெரிக்கரைப் பிடித்துக் கேட்டு விடாதீர்கள்.
உலகிற் சிறந்த ஜனநாயக நாட்டில் அப்படியொரு நிலைமை என்பதால், பிற உலக நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தெரிந்தாலும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்கள். வெனிசுவேலா நாட்டின் Telesur தொலைக்காட்சி மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது. அதைத் தவிர, ஐரோப்பாவிலும் எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே சொன்னாலும் போனால் போகிறதென்று முக்கியத்துவம் குறைந்த செய்தியாக தெரிவித்தார்கள்.
அயல்நாடான இலங்கையில், தமிழ் ஊடகங்கள் எதுவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரச ஊடகம், தனியார் ஊடகம் எதுவானாலும் இந்த விடயத்தில் ஒன்று தான்.
இலங்கையில் வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகள் தனியார் நிறுவனங்களால் வெளியிடப் படுவதால், பெரும்பான்மையான தமிழ் வாசகர்களை கொண்டுள்ளன. ஆனால், இந்திய சுதந்திர தினத்திற்கு விசேட பதிப்பு வெளியிடும் வீரகேசரியும், தமிழ்த் தேசியர்களின் இதயகீதமான உதயனும், இந்திய வேலைநிறுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் தமது வலதுசாரி சுயரூபத்தையும், முதலாளிய விசுவாசத்தையும் இப்படியான தருணங்களில் வெளிப்படுத்த தயங்குவதில்லை. அது தானாம் நடுநிலைமை.
இந்திய வேலைநிறுத்தம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 30 அன்று, கொழும்பு நகரில் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. அதிலும் பெருந்தொகையான மாணவர்கள் கலந்து கொண்டதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. கூட்டத்தை கலைப்பதற்கு பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து தடியடிப் பிரயோகம் செய்தது. தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவும், இலவசக் கல்விக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அதே நேரம், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சொன்னால் வெட்கக்கேடு. நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே நாளில், ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நூறு பேரளவில் இருக்கும். அன்று பலரை வரச் சொல்லிக் கேட்டதாகவும், நல்லூர்த் தேர்த் திருவிழா நடப்பதால் வர மறுத்து விட்டதாகவும் சமூகசேவகி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவின் செப். 2 பொது வேலைநிறுத்தம், காட்டிக்கொடுக்கும் தொழிலாளர் வர்க்கத் துரோகிகளை கலங்க வைத்துள்ளது. அன்று பலர் வக்கிரங்களை கொட்டித் தீர்த்து தமது கைக்கூலித் தனத்தை வெளிப்படுத்தினார்கள்.
அண்மைக் கால உலக வரலாற்றில், பல கோடி உழைப்பாளிகள் பங்குபற்றிய வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியாவில் நடந்துள்ளது. சர்வதேச ஊடகங்களே அதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளன.
நிலைமை இப்படியிருக்கையில், தமிழ்த் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள, முதலாளிகளுக்கு காட்டிக் கொடுக்கும் துரோகிகள், வழமை போல எதிர்ப் பிரச்சாரங்களை நடத்தினர். உலகின் எந்த நாடாக இருந்தாலும்,வேலை நிறுத்தமானது தொழிற்சங்க நடவடிக்கையாகவே அறிவிக்கப் படுகின்றது. அந்த உண்மையை மறைத்த வலதுசாரிகள் வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
“இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டம்…”, “வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது…”, “பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கம்யூனிஸ்டுகள்…” இது போன்ற வதந்திகளை பரப்பி விட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்து மதவெறியர்களும், வலதுசாரிகளும், அது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் எதிரிகள் தாங்களே என வெளிப்படுத்திக் கொண்டனர்.
அமெரிக்கா சிக்காக்கோ நகரில் தொடங்கிய தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம், 21ம் நூற்றாண்டிலும் தொடர்கின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, என்று தொழிலாளர் போராட்டம் நடந்த நாடுகளில் எல்லாம், அதை நக்கல் அடித்த, எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்த துரோகிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களது வர்க்கத் துவேஷ மரபணு, கண்டம் கடந்து சில தமிழர்களுக்கும் கடத்தப் பட்டிருக்கலாம்.